அகல் விளக்கு – மு.வரதராசனார்: 31
24 September 2021 No Comment
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 30. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 13
மாசி மாதம் தொடங்கியது. பொதுவாக எல்லாருமே படிப்பில் முனைந்து நின்றார்கள். பகலும் இரவும் எல்லாரும் புத்தகமும் கையுமாக இருந்தார்கள். சிறப்பாக, இரண்டாம் இடைநிலை(இண்டர்) வகுப்பில் இருந்தவர்களும் பல்கலைக்கழகத் தேர்வுக்குச் செல்லும் மற்ற மாணவர்களும் ஓயாமல் படித்தார்கள். அவர்களின் அறையில் இரவில் நெடுநேரம் விளக்குகளின் ஒளி காணப்பட்டது. சந்திரனும் படித்தான்.
தேர்வு நெருக்கத்தில் ஊக்கம் ஊட்டிச் சந்திரனுடைய தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சந்திரனைக் கண்டு நன்றாகப் படிக்குமாறு சொல்லவேண்டும் என்று குறித்திருந்தார். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அவனுடைய அறைக்குச் சென்றேன். அவன் நாற்காலியில் சாய்ந்தபடியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மேசையில் ஆங்கிலப் புத்தகம் திறந்தபடியே இருந்தது. ஒலி செய்யாமல் சென்று மேசைப் பக்கத்தில் உட்கார்ந்தேன். புத்தகத்தின் இடையே புகைப்படம் இருப்பதுபோல் தோன்றியது. குடும்பத்தாரின் படமோ, அல்லது சந்திரனின் படமோ என்று மெல்ல எடுத்துப் பார்த்தேன். ஒரு பெண்ணின் படமாக இருந்தது. கீழே “க. இமாவதி” என்று கையெழுத்தும் இருந்தது. படத்தை உற்று நோக்கினேன். நாடகத்தன்று அவனோடு பேசிய அந்தப் பெண்தானோ என்று எண்ணி மறுபடியும் பார்த்தேன். அவ்வாறுதான் தோன்றியது.
படத்தைப் பழையபடியே வைத்துவிட்டேன். சந்திரன் இன்னும் எழவில்லை. சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தேன். மாலன் சொன்னபடி காதலாகத்தான் இருக்குமோ என்று எண்ணினேன். எப்படியாவது போகட்டும். தேர்வு நெருக்கத்தில் நன்றாகப் படித்துக் களைத்துபோய் இப்படித் தூங்குகிறானே, இதுவே போதும் என்றும் எண்ணினேன். அந்தப் புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளி மறுபடியும் ஒருமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். கையெழுத்தையும் பார்த்தேன். பழையபடியே புத்தகத்தின் பக்கத்தைத் திறந்தாற் போல் வைத்தேன். அப்போதும் சந்திரன் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. பிறகு வந்து பார்க்கலாம் என்று எழுந்து வந்தேன். அவன் விழித்துக்கொண்டு “என்ன வேலு” என்றான்.
“ஒன்றும் இல்லை, அப்பா கடிதம் எழுதியிருக்கிறார்.”
“எதைப்பற்றி?”
“உன் படிப்பைப் பற்றி”
“எனக்கும் எழுதியிருக்கிறார்” என்று சொல்லி நிறுத்தி, சிறிது பொறுத்து, “சரி” என்றான்.
நான் வந்துவிட்டேன்.
எங்களுக்கும் கல்லூரித் தேர்வுகள் நெருங்கின. சந்திரன் முதலானவர்களுக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகள் நெருங்கின. மாலனும் நானும் போட்டியிட்டுப் படிப்பது என்று எங்களுக்குள் தீர்மானம் செய்துகொண்டோம். ஒரு நாள் மாலை அவன் என்னிடம் வந்து, “வேலு! கோயிலுக்குப் போய் வருவோம்” என்றான். நான் இசைந்து எழுந்தேன்.
வழியில் அவன், “மற்றவர்கள் யாருக்கும் சொல்லாதே. நான் எப்போதும் தேர்வுக்கு முன் ஓர் அருச்சனை செய்வது வழக்கம். அதோடு ஒரு பிரார்த்தனை செய்து கொண்டு, தேர்வு வெற்றி எனத் தெரிந்தவுடனே போய் அந்தப் பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருவேன். எசு.எசு.எல்.சி-யும் அப்படித்தான் தேறினேன். இப்போது அதற்காகத்தான் போகிறேன். நீயும் தேர்வை முன்னிட்டு அருச்சனை செய்; ஒரு பிரார்த்தனையும் செய்துகொள்” என்றான்.
என் மனத்தே பெருஞ்சோர்வு வந்தது. படித்த பையன் இப்படி எண்ணுகிறானே. எண்ணுவதையும் இவ்வளவு உண்மை என எண்ணுகிறானே. இவனிடம் என்ன சொல்வது என்று வருந்தினேன். “கோயிலுக்குப் போகலாம், வழிபாடு செய்யலாம். மனத்தைக் காக்கும்படி வேண்டலாம்; சோர்வைப் போக்கி ஊக்கம் தரும்படியாகவும் வேண்டலாம்; ஆனால் தேர்வில் வெற்றி தருமாறு வேண்டுவதா? அதற்கு இலஞ்சமாக அருச்சனையும் பிரார்த்தனையும் செய்வதா? எனக்கு இப்படிப்பட்ட போலி வழிபாடு பிடிக்காது. நான் திரும்பிப் போகிறேன்” என்றேன்.
“நீ நம்பாவிட்டால் போகட்டும், துணைக்காவது என்னோடு வா” என்று என் இரு கைகளையும் பற்றிக் கொண்டான். அவனுடைய அன்புக்காகத் துணையாகப் போய் வந்தேன். திரும்பி வந்தபோது, “உனக்கு இதனுடைய பயன் எல்லாம் இப்போது தெரியாது; போக போகத் தெரியும்” என்றான்.
“பார்த்தாயா? நீ என்னை வென்றுவிட்டதுபோல் பேசுகிறாய்” என்று உற்றுப்பார்த்தேன்.
“சரி, சரி. வா” என்று கைகளைப் பற்றினான்.
“நான் கடவுளை மிகப் பெரிய சக்தியாக எண்ணி வழிபடுகிறேன். ஒழுங்கான ஆட்சித் தலைவராக மதித்து அன்பு செலுத்துகிறேன். சின்ன சின்ன பொருளை எல்லாம் பார்த்து விதிகளை மாற்றி உதவி செய்யும் சிறுமை அவரிடம் இல்லை” என்றேன்.
அவன் அதற்கும் ஒன்றும் விடை கூறாமல், “எப்படியாவது இருக்கட்டும்” என்று நழுவினான்.
தேர்வுகளில் இருவரும் நன்றாகவே எழுதிக்கொண்டு வந்தோம். ஆனால் மாலனிடத்தில் மட்டும் அடிக்கடி ஏக்கமும் சோர்வும் காணப்பட்டன. இருந்தபோதிலும் விடா முயற்சியோடு படித்து எழுதினான்.
சந்திரனுடைய அறைக்கும் அடிக்கடி போய் எட்டிப் பார்த்து வந்தேன். தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் போய் எப்படி எழுதினான் என்று தெரிந்து வந்தேன். ஆங்கிலத்தில் பாடங்கள் மறந்து போவதாகவும் தமிழில் நன்றாக எழுதலாம் என்றும் கூறினான். கணக்குப் பாடங்களும் விஞ்ஞானப் பாடங்களும் நிறைய இருப்பதாகச் சொன்னான். அவனுக்குத் தேர்வில் உண்மையான ஆர்வம் இருந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன்.
ஆங்கிலத் தேர்வு நடந்த மூன்று நாட்களும் மாலையில் அவனுடைய அறைக்குப் போய், “எப்படி எழுதினாய்.” என்று கேட்டேன். “ஏறக்குறைய எழுதியிருக்கிறேன்” என்று சொல்லி வினாத்தாள்களைக் காட்டினான்.
தமிழ்த் தேர்வு நடந்த இரண்டு நாட்களிலும் கேட்டபோது, “நன்றாக எழுதியிருக்கிறேன்” என்றான்.
கணக்குத் தேர்வு நடந்த இரண்டு நாட்களும் போயிருந்து கேட்டேன். “நூற்றுக்கு ஐம்பது வரும். அவ்வளவுதான்” என்றான்.
“வாலாசாவில் நூற்றுக்கு நூறும் தொண்ணூற்றெட்டுமாக வாங்கிக் கொண்டிருந்த நீ, எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்து என்னை வல்லவன் ஆக்கிய நீயா இப்படிச் சொல்வது?” என்றேன்.
“என்ன செய்வது?” என்று இரண்டு சொற்களில் முடித்தான்.
விஞ்ஞானப் பாடத்துத் தேர்வு அடுத்துத் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் விடுமுறை தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்காக வந்திருந்தது. விடுமுறையில் வெளியே போய்ச் சுற்றுகிறானா, ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறானா பார்க்கலாம் என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். சந்திரன் குப்புறப்படுத்திருந்தான். விம்மி விம்மி அழுவது கேட்டது. கண்களைத் துடைப்பதைக் கண்டேன். பக்கத்தில் ஓர் உறை ஓரம் கிழிக்கப்பட்டிருந்தது. தனியே ஒரு கடிதம் கிடந்தது.
சுவர் ஓரத்தில் பளபளப்பான தாள் ஒன்று இரண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டிருந்தது. கிழித்த ஒரு துண்டில் ஒரு பெண்ணின் படமும், மற்றொன்றில் ஆணின் படமும் இருந்தன. திருமண அழைப்பிதழோ என்று ஐயுற்றேன். அவனுடைய தங்கை கற்பகத்தின் திருமண அழைப்பிதழோ என்று எண்ணினேன். என் மனம் பகீரென்றது. சந்திரனுக்கும் விருப்பமில்லாத இடத்தில் கற்பகத்தைத் திருமணம் செய்து கொடுக்கிறார்களோ? கற்பகத்தின் திருமணமா? இவ்வாறு எண்ணியவுடன், என் கண்களும் கலங்கின; என் இதயமும் விம்மியது. “சந்திரா?” என்றேன். அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, “இப்போது வராதே, போய்விடு” என்றான். எனக்கு அழுகை வந்துவிட்டது. “உன் துயரத்தில் எனக்கும் பங்கு உண்டு! சந்திரா! இதற்காகக் கலங்காதே. என்ன செய்வது!” என்றேன்.
அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான். “உனக்கும் தெரியுமா?” என்றான்.
“அதோ தெரியுதே” என்று திருமண அழைப்பிதழைக் காட்டினேன்.
“வேலு! மோசம் செய்து விட்டாளே!” என்று அறையின் கதவைத் திறந்தான். கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. முகம் வீங்கியிருந்தது. உடனே படுக்கையில் விழுந்து விம்மி அழுதான். “இதோ, பார்” என்று பக்கத்தில் இருந்த கடிதத்தை எடுத்து நீட்டியபடியே, “படி, படித்துப் பாரடா” என்றான். படித்துப் பார்த்தேன்.
அன்புள்ள அண்ணா,
இத்துடன் என் திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். நேரில் வந்து கொடுக்க எண்ணினேன். ஆனால் தேர்வுக்கு உரிய காலம் அல்லவா? இன்னும் மூன்று நான்கு நாளில் எல்லாம் முடிந்து விடும். பிறகு நான் நேரில் வருவதற்குள் நீங்கள் ஊர்க்குப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடுவீர்களோ என்று எண்ணியே அஞ்சலில் அனுப்பியுள்ளேன். மன்னிக்க.
தேர்வுகள் நன்றாக எழுதியுள்ளேன். இனி உள்ளவற்றையும் நன்றாக எழுதிவிடுவேன். நீங்களும் அவ்வாறே செய்திருப்பீர்கள்.
உங்கள் அன்புக்குரிய க. இமாவதி.
கடிதத்தைப் படித்த பிறகு என் உள்ளத்தின் துயரம் போயிற்று. உண்மை விளங்கிற்று. சந்திரனைப் பார்த்தேன். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தான்.
“தேர்வு முடிந்ததும், ஊர்க்கு உன்னை அழைத்துக் கொண்டுபோய் அப்பாவுக்குச் சொல்லி அவளை மணம் செய்துகொள்ள. . .” என்று வாக்கியத்தை முடிக்காமலே அழுதான். “இப்படி ஒரு திருமண அழைப்பு அச்சிட எண்ணினேன். அவள் செய்துவிட்டாள்” என்று தான் கிழித்து வீசியதைக் காட்டினான். மறுபடியும் குழம்பிய குரலில், “அவளுடைய வாழ்க்கை தொடங்குகிறது; என் வாழ்க்கை முடிகிறது” என்று கதறினான்.
என்ன சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் இருந்தேன். கிழிந்த அழைப்பிதழை எடுத்துப் பார்த்தேன். முன் பார்த்த அதே பெண்ணின் படம் இருந்தது. கீழே “இமாவதி” என்று அச்சிட்டிருந்தது. அடுத்த துண்டில் மணமகனின் படம் இருந்தது. அதன் கீழே “சிவசங்கரன்” என்று அச்சிட்டிருந்தது.
“இனிமேல் நான் படிக்க முடியாது. சாகத்தான் முடியும்.” என்றான் சந்திரன்.
“பைத்தியம் உனக்கு” என்றேன்.
“உனக்குக் காதல் என்றால் என்ன என்று தெரியாது. நீ ஒரு மண்டு, மக்கு, உணர்ச்சியற்ற மரம்” என்றான்.
“இருக்கலாம். ஆனால் இது காதல் அல்ல. அவள் கலங்கவில்லை. நீ மட்டும் இப்படி அழுகிறாய். இதுவா காதல்? அவள் விரும்பவில்லை. நீ மட்டும் . . . “
சந்திரனுக்குக் கோபம் வந்தது. அழுது சிவந்த கண்களே கோபக்கண்களாக மாறி, என்னை பார்த்து, “எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா? எழுந்து போ” என்றான். மறுபடியும் குப்புறப்படுத்து, “பைத்தியமா! நீயா இப்படிச் சொல்கிறாய்?” என்று சொல்லிக்கொண்டே அழுதான்.
இனி என்ன சொல்லியபோதிலும் தவறாகவே கருதுவான் என உணர்ந்தேன். நான் ஓர் ஆண்டு தவறி விடவே, இவன் மேல் வகுப்புக்கு வந்து என்னைப் பற்றிக் குறைவாக எண்ணுகிறான்; அறிவிலும் அனுபவத்திலும் தான் பெரியவன் என்று கருதுகிறான்; அதனால்தான் அறிவுரை கூற எனக்கு உரிமை இல்லை என்கிறான். கல்லூரிக்கு வந்த பிறகு பழகிய பழக்கத்திலும் என்னைச் சிறு பையன் போலவும் தான் வளர்ந்த தமையன் போலவும் கருதி நடத்துகிறான்; அதனால்தான் நானாக நெருங்கிச் சென்ற காலங்களிலும் புறக்கணித்திருக்கிறான்; நான் அன்பினால் பணிந்து போனதை, இவன் தவறாக உணர்ந்து உயர்வு மனப்பான்மை கொண்டு விட்டான்; ஒருகால் எனக்குக் கணக்குக் கற்றுக்கொடுத்த காரணத்தாலேயே நான் அறிவில் சிறியவன் என்றும் தான் அறிவு முதிர்ந்தவன் என்றும் எண்ணிவிட்டானோ; வயதிலும் இவன் என்னைவிட ஓராண்டுதான் மூத்தவன்; அப்படி இருக்க நான் ஏன் இவனிடம் இப்படிப் பணிந்து இந்தச் சிறுமைக்கு ஆளாகவேண்டும் என்று என் உள்ளத்தில் பல எண்ணங்கள் எழுந்தன. எழுந்து வந்துவிடலாமா என்று தோன்றியது. உடனே அவனிடம் நான் கொண்டிருந்த நன்றியுணர்ச்சியும் குடும்பப்பிணைப்பும் என்னைத் தடுத்தன. அழுது கொண்டிருந்த அவன் பக்கத்திலேயே இருந்தேன்.
சிறிது பொறுத்து, “நடந்தது நடந்துவிட்டது. அவள் உன்னை ஏமாற்றிவிட்டாள்; மோசம் செய்துவிட்டாள் என்றே வைத்துக்கொள்ளலாம். அதற்காக இப்போது என்ன செய்வது? அழுது அவளுடைய மனத்தை மாற்றி விடமுடியுமா? எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு படிக்க உட்காரு. அல்லது வெளியே எங்காவது போய் வரலாம், வா. இதை மறப்பதற்கு வழி அதுவே” என்றேன்.
அவன் ஒன்றும் கூறாமல், குப்புறப் படுத்தபடியே கிடந்தான்.
எதை நினைத்துக்கொண்டோ, சிறிது நேரத்தில் ஒரு பெருமூச்சு விட்டு விம்மினான். “நீ அப்பாவுக்கு எழுதிவிடு. நான் தேர்வுக்குப் படிக்கப் போவதில்லை; ஊருக்கும் வரப் போவதில்லை என்று எழுதிவிடு” என்றான்.
இப்போது எதைச் சொல்லியும் பயன்படாது போல் இருக்கிறது. அழும் வரையில் அழுது ஓயுமாறு தனியே விட்டு, பிறகு வந்து சொல்லலாம் என்று எண்ணி எழுந்தேன். “இருக்கட்டும், பிறகு வருவேன்” என்று சொல்லிப் புறப்பட்டேன்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு
Comments
Post a Comment