தமிழர் வாணிகம் 1 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 25 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 26
14. வாணிகம்
மக்கள் நல்வாழ்வில் சிறப்புப்புற்று ஓங்குவதற்கு அவர்கட்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் எக்காலத்தும் குறைவின்றிக் கிடைத்தல் வேண்டும்.
‘நாடென்ப நாடா வளத்தன’ என்று திருவள்ளுவர், குறிக்கோள் நாட்டைப்பற்றிக் கூறியிருப்பினும், ஒரு நாடு தன் மக்களுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் என்பது அரிதே. நாட்டில் உள்ள நகரங்களும் ஊர்களும் அவ்வாறே மக்கள் வாழ்வுக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றிருத்தல் இயலாது. ஆதலின், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கும் பொருள் போக்குவரத்து நிகழ வேண்டியுள்ளது. இல்லாத நாடுகள் மிகுதியாகப் பெற்றிருக்கும் நாடுகளிலிருந்து தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந் நிலை தொடர்ந்து ஒழுங்காக நடைபெறச் செய்வதுதான் வாணிகம்.
‘வாணிகம்’ எனும் ஒன்று இல்லையேல் மக்கள் வாழ்வு என்பதும் துன்பம் நிறைந்ததாகிவிடும். கிடைத்துள்ள மிகு பொருளால் அதனை முழுவதும் பயன்படுத்தும் வகையறியாது அல்லல்படுவதோடு இன்றியமையாது வேண்டப்படும் பொருளும் கிடைக்கப்பெறாது வருந்தி மடிவர். ஆதலின், வாணிகமே மக்கள் வாழ்வின் உயிர்நிலை என்று கூடக் கூறலாம். இவ் வாணிகத்திற் சிறந்துள்ள மக்களே எல்லாவகையாலும் சிறந்த மக்களாவார். வாணிகமே உலகத்தை யாள்கின்றது.
சிறப்புறு பயன்மிகு வாணிகத்தில் சங்கக் கால மக்கள் சிறந்து விளங்கினர். அக்காலத்தில் உள்நாட்டு வாணிகமும் வெளிநாட்டு வாணிகமும் நன்கு சிறந்து விளங்கியது. வாணிகம் மிகு பொருளை விரைவில் ஈட்டுவதற்குப் பெருந்துணை புரிவதாகும். ஓரிடத்தில் இன்றியமையாப் பொருள் ஒன்று இல்லையேல் அதைப் பெறுவதற்கு மக்கள் எவ்வளவும் கொடுத்தற்குப் பின்னிடார். ஆதலின், தேவையைப் பயன்படுத்தி வணிகர்கள் அறநெறி கடந்தும் மிகு ஊதியம் பெற்றும் செல்வத்தைக் குவித்து மகிழத் துணிந்துவிடுகின்றனர். இக்காலத்தில் நாம் காண்பது இக் காட்சிதானே? இருட்டு வாணிகமும் திருட்டுக் கொள்முதலும் எளிதில், இன்று வறியராய் இருப்போரை நாளைச் செல்வராக்கி விடுகின்றதன்றோ? “பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்” விருப்புற்றோர் வாணிகத்தைப் புகலிடமாகக் கொண்டு பொருளீட்டத் தொடங்கி அறநெறி பிறழ்ந்து மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுமாறு செய்து வருகின்றனர். ஆனால், சங்கக் காலத்தில் வாணிகத்தில் அறநெறியைக் கடைப்பிடித்தனர்.
“ கொள்வதூஉம் மிகைகொளாது
கொடுப்பதூஉம் குறைபடாது
பல்பண்டம் பகர்ந்துவீசி” 1
வாணிகம் செய்தனர்.
+++
- பட்டினப்பாலை வரி 210-211
+++
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்” (குறள்-120)
என வாணிகத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொண்டனர். பிறர் பொருளையும் தம் பொருளையும் ஒருபடியாகவே கருதினர். தம்முடைய பொருளானால் குறைத்துக் கொடுத்துப் பிறர் பொருளானால் நிறையக் கொள்வோம் என்று திட்டமிட்டு ஏமாற்ற எண்ணிலர்.
தொடக்கக் காலத்தில் வாணிகம் பண்டமாற்று முறையாகவே இருந்தது. பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து இன்னொரு பொருளைப் பெறுவதாகும். ஆதலின், பொருள்களை மிகுதியாக உண்டாக்கும் நாடே வாணிகத்தில் சிறக்க முடியும். அயராது உழைக்கும் மக்களை அக்காலத் தமிழகம் பெற்றிருந்தமையால் விளைபொருள்களும் செய்பொருள்களும் தேவைக்குமேல் குவிந்தன. அவை வேண்டப்படும் இடங்களுக்கு விரைந்து சென்றன.
நெய்தல் நில உப்பு, மருதநிலத்திற்கு வந்தது; மருத நில நெல், நெய்தல்நிலத்திற்குச் சென்றது.
உள்நாட்டு வாணிகம் ஆள்கள் வழியாகவும், மாடு, கழுதை, குதிரை, வண்டி ஆகியவை வழியாகவும் நடந்தது. கூட்டம் கூட்டமாக வாணிகம் செய்யும் முறை நிலவியது. அக்காலத்தில், ஒரு வேலி ஆயிரங் கல நெல்லையளித்தது. கரும்புகள் தோடுகொள் வேலின் தோற்றம்போல் நிறைந்து, கரும்பின் எந்திரம் ஓயாது இயங்கி வெல்லமும் கற்கண்டும் மிகுந்து பெருகின. பனைமரச் சாற்றிலிருந்து பனாட்டுகள் உண்டாக்கப்பட்டுக் குவிந்தன.
“கஞ்ச காரரும், செம்புசெய் குநரும்,
மரங்கொல் தச்சரும், கருங்கைக் கொல்லரும்,
கண்ணுள் வினைஞரும், மண்ணீட் டாளரும்,
பொன்செய் கொல்லரும், நன்கலம் தருநரும்,
துன்ன காரரும், தோலின் துன்னரும்,
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிச்”1
+++
- சிலம்பு. இந்திர. 28-34
+++
செய்பொருள்களைச் செய்து பெருக்கினர். இவை யெல்லாம் நாடெங்கும் இல்லாத இடங்களுக்குச் செல்வதற்குரிய பெருவழிகளும் (Trunk Roads), சிறு வழிகளும் நன்கு அமைந்திருந்தன. ஆங்காங்கு வழி முழுவதும் ஆறலை கள்வரை அச்சுறுத்தும் காவல் வீரர்கள் வணிகர்க்குக் காவலாக நிறுத்தப்பட்டுள்ளனர். நகரங்கள் தோறும் பகலும் இரவும் வாணிகக் கடைகள் ஓயாது விற்பனை செய்துகொண்டே இருந்தன. பகல் கடையுள்ள இடத்திற்கு ‘நாளங்காடி’ என்றும், இரவுக் கடை உள்ள இடத்திற்கு ‘அல்லங்காடி’ என்றும் பெயரிட்டிருந்தனர். மதுரையிலிருந்த நாளங்காடியின் ஓயாத கம்பலை, விழாக்காலத்துப் பேரிரைச்சல் போன்று ஆர்த்ததாகவும், ‘அல்லங்காடி’யின் பிற ஒலிகளை அடக்கும் கம்பலை பல வேறு பறவைக் கூட்டங்களின் ஒலிமுழக்கம் போன்று இசைத்ததாகவும் மதுரைக்காஞ்சி கூறுகின்றது. அவ்வங்காடிகளில் விற்பனை செய்யப்பட்ட பொருள்களையும் அழகுறத் தொடுத்துக்கூறும் நயம் படித்து அறிந்து மகிழத் தக்கது. 1
+++
- மதுரைக்காஞ்சி வரிகள் 430-54
+++
அளப்பதற்கும், நிறுப்பதற்கும், முகப்பதற்கும் உரிய அளவை முறைகளும், அவற்றிற்குரிய கருவிகளும் செம்மையாக அமைந்து இருந்தமை தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களால் அறியலாம்.
பொன், வெள்ளி, செம்பு முதலியவை கண்டு பிடிக்கப்பட்டு அணியும் அணிகலன்களுக்கும் உண்ணும் கலன்களுக்கும் பயன்படுத்தியவர்கள், காசுகளைப் படைத்து வழங்கியவர்கள், வாணிகத்தில் மிகுதியாகக் காசுகளை வழங்காமை குறிப்பிடத்தக்கது. காசுகளாம் நாணயம் வாணிகத்தில் நுழைந்த பிறகே மக்கள் நாணயம் (Honesty) மறையத் தொடங்கிவிட்டது போலும். உழைப்போர் தொகை சுருங்கி உழையாது வாழும் மக்கள் கூட்டமும் பெருகத் தலைப்பட்டுவிட்டது. விலையேற்றமும் பணவீக்கமும் தோன்றி வருவாயும் செலவும் பொருந்திக் கூடும் நிலையின்றி வாழ்க்கைப் புள்ளி நஞ்சு போல் நாளும் உயரத் தொடங்கிவிட்டது.
அன்று முதலிலாது ஊதியம் பெற விழைந்து செய்யும் துணிவு முறையும், ஆக்கம் கருதி முதலிழக்கும் பேரவாப் பிடர் பிடித்துந்தும் செய்வினையும் கொண்டாரிலர்.
உள்நாட்டு வாணிகக்தைப் போன்றே வெளிநாட்டு வாணிகமும் சிறப்பாக நடந்தது. உள்நாட்டு வாணிகத்திற்கு உல்கு வரி கிடையாது. வெளிநாட்டு வாணிகத்திற்கு உல்கு வரி உண்டு. ஆனால், இன்ன பொருள்தான் இன்ன நாட்டிலிருந்துதான் வரலாம் என்ற கட்டுப்பாடு கிடையாது. இவ் விரண்டு வாணிகக் கொள்கைகளால் அக்கால வாணிகம் ஓங்கி உயர்ந்து நாட்டு மக்கள் நல்வாழ்வு பெற்றிருந்தனர். கட்டற்ற வாணிகமுறையால் வெளிநாட்டு வாணிகம் வளர்ந்தோங்கியது. அன்றியும் தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் நீண்ட கடற்கரை நெடிது வளைந்து கிடந்தது. பல துறைமுகங்கள் பாங்குற அக் கடற்கரையை அணி செய்தன. கப்பல் கட்டும் தொழிலிலும், அதனை அஞ்சாது ஆழ்கடலிலும் ஓட்டும் வினையிலும், தமிழர்கள் தமக்கு நிகர் தாமே என்று புகழ் பெற்றிருந்தனர்.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
Comments
Post a Comment