Skip to main content

முத்தமிழ் ஒன்றே மூவுலகின் எல்லை – ஆற்காடு க குமரன்

 அகரமுதல


View Post

முத்தமிழ் ஒன்றே மூவுலகின்  எல்லை!

 

என் அன்னையே எந்தன் முதல் அறிமுகம்

என் அன்னைக்கு நான் புதுமுகம்

எனக்கான ஒரே முகம்

என் அன்னையின் திருமுகம்

 

தொப்புள் கொடி உறவு துண்டிக்க

தொடங்கியது எந்தன் வரவு

 

என் அன்னையே என் முதல் ஆசான்

கருவறையே நான் கற்கத் தொடங்கிய முதல் பள்ளி

வாய் வழியவள் வாசித்த மொழி வசப்பட்டது எனக்குள்ளே

வளரவளர வார்த்தைகள் புலப்பட்டன

 

அம்மா என்று நான் அழைத்த முதல் வார்த்தை கூட

அகத்தில் அன்னை கற்றுத்தந்தது கற்றுத்தந்த

அவளுக்கான  முதல் காணிக்கை அது

 

அப்பா என்று நான் அழைக்கவில்லை

அந்த மாமனிதரை பார்த்ததால் விளைந்த பிரமிப்பு

 

உலகம் புரியும் முன்னே உறவுகள் புரிந்தது உலகம் புரிந்த பின்னே

கலகம் விளைந்தது…… கலகம் விளைந்தாலும்

கலங்காமல் என் தாய் தமிழ் மொழி

 

உள்ளுக்குள் உயிர்த் துளியாய் இருந்தபோதே

உறைந்ததல்லவா எனக்குள்ளே என் மொழி

 

அரிதாரம் பூசப்பட்ட அவயமல்ல என் மொழி

அழித்து மாற்ற அணுக்களில்

நிறைந்து உயிரினில் கலந்து 

உணர்வினில் வலம்வரும் உன்னத மொழி

 

பாலினம் தெரியாமலேயே பாடம் எடுத்தவள் என் தாய்

அவள் பாலினம் அறிவேன் அவளன்பால்

அவள் பெண்பால்.

 

உள்ளிருந்து சுவைத்தேன் என் தமிழைஸ

தலையாட்டி அன்னைத் தமிழை ஆரவாரித்தேன்

அசைவுகளைக் கொண்டு

அகம் மகிழ்ந்தாள் அன்னை

 

தமிழைத் தவறாகப் பேசிய போதெல்லாம்

எட்டி உதைத்தேன்

தவற்றை உணராத தாய் 

கைகொட்டி மகிழ்ந்தாள்.

 

தமிழும் தாயும் ஒன்றே

தலை சாய்ந்தாலும் என்னைத்

தலையில் தூக்கிக் கொண்டாடுவதால்

 

அன்னை மட்டுமல்ல அன்னை மொழியும் என்னை

அழ வைப்பதில்லை இன்றுவரை!.

 

எம்மொழியும் செம்மொழியில்லை

எம்மொழிக்கீடு ஏதுமில்லை!

நா வழி நடனமாடிய செம்மொழி

எத்திசையும் வழிகாட்டும் என் மொழி தமிழ் மொழி!

 

காற்றில்லா உயிருண்டோ>

கன்னித்தமிழ் இல்லா காற்றுண்டோ

 

செவிகளால் மூச்சுவிடுகிறேன்

மதி நிறைகிறது

நாவினால் வாசிக்கிறேன்

நரம்பு புடைக்கிறது

 

வீரம் உண்டு விவேகம் உண்டு 

மூர்க்கமுண்டு மூலைமுடுக்கெல்லாம்

முளைத்து நிற்கும் என் தமிழிலே!

 

நாவினை வளைத்து நெளித்து குழைத்து இழைத்து

தழைத்து நிற்கும் தனிமொழி இது

தன் நிகரில்லா முதுமொழி இது

 

எத்திசையிலும் தமிழன் இருக்கிறான்

ஒத்திசைந்து தமிழை இசைக்கிறான்

நற்றமிழை நாளும் சுவைக்கிறான்

கற்ற தமிழாலே காலத்தை வெல்கிறான்

 

மூதாதையரின்றி தலைமுறை இல்லை

முதுமொழி இன்றிப் பிறமொழி இல்லை

முத்தமிழ் ஒன்றே மூவுலகின்  எல்லை

மூச்சும்  கூட முத்தமிழின் பிள்ளை

 

இவண்

ஆற்காடு க. குமரன்

9789814114

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue