இடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்
இடைத்தரகன் விலை உரைப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான். . . . அன்று!
விதை விதைத்தவன் விலை மறப்பான்
இடைத்தரகன் விலை உரைப்பான். . . . இன்று!
விதை விதைத்தவன் வதைபட
வகுத்த விதியில் மாற்றான் சதை கூட
இதையெண்ணியுகுத்த
கண்ணீரில் முளைக்குமோ
விதைகள் யாவும் உப்பு நீரன்றே
உழைப்பின் வியர்வைத் துளியும்
விதைத்தவனே விலை கூறல் வேண்டும்
சகதியில் உழல்கையில்
தொடர்பு இல்லை
ஏற்றம் இழுக்கையிலும்
நீரேற்றம் இல்லை
எட்டு வழிச்சாலை
வயல்கள் எல்லாம் வழிப்பறியில்
வருணபகவான்
வாயுபகவான் வரம் தரவில்லை
சுருங்கிய வயிற்றோடு சுருண்டு வீதியில்
கட்டுப்பாடின்றிப் பறந்தது பிறப்புறுப்பு
தேசியக்கொடியும் வேடிக்கை பார்த்தது
தேசத் தலைவன் பார்வை வாடிக்கையானது
தலைநகரில் விலைபோன உழவனின் மானம்
உண்ணாநோன்பு உண்ண உணவில்லாமல் நோன்பு
மலத்தை உண்டோம்
மனம் இரங்கவில்லை நடுவண் அரசு
நாம் உணர்ந்து எழுந்தால்
வித்துக்கு உரியவனே விலையை வரையறுப்பான்
சந்தைக்கு வந்ததும் சட்டங்கள் விந்தையோ
உழவனின் உடைமை கந்தையோ
ஏர் பூட்டாமல்
சோறு பொங்காது
சேற்றை மிதிக்காமல்
சோறு விளையாது
உயிர்கள் தழைக்க, பயிர்கள் விதைப்போம்
அறுவடைக்கு முன்னே
களைகளை அறுப்போம்
அறுவடைக்குப் பின்னே
தடைகளை உடைப்போம்
உழவு இல்லையேல் உலகுக்கே இழவு
உணர்ந்து நீ சட்டம் பழகு!
இவண்
ஆற்காடு க. குமரன்
978981411400
Comments
Post a Comment