Skip to main content

கடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும்

பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும்

 பகுத்தறிவுச் செம்மல் சிவகங்கை இராமச்சந்தரனாரின் மூத்த மகன் இரா.இராமசுப்பிரமணியம். தமிழ்நாடு அரசுப்பணியார் தேர்வாணையத் தலைவராகவும் அதற்கு முன்னர் அரசின் சட்டத்துறைச் செயலராகவும் இருந்தார். இவர் 55 ஆண்டுகளுக்கு முன் கடலூரில் சார் நீதிபதியாக இருந்தார். அப்பொழுது ஒரு நாள் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கடலூருக்கு வந்து சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ளார் என்று கேள்விப்பட்டார். உடனே அவரைச் சந்தித்து வணங்கி உரையாடி விட்டு வந்தார். உடனே ஆளுங்கட்சியினரால், அரசிற்கு இது தெரிவிக்கப்பட்டது. அரசு அவரிடம் அரசு நீதிபதியாக இருந்து கொண்டு பெரியாரைச் சந்தித்ததைக் குற்றச்செயலாகக் குறிப்பிட்டு “ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது” என்று விளக்கம் கேட்டது.

இந்தக் குறிப்பாணையைப் பெற்றதும் நீதிபதி இராமசுப்பரமணியம் கலங்கவில்லை; மன்னிப்பு கேட்கவில்லை; வருத்தமும் தெரிவிக்க வில்லை.  தன்மானப் புலிக்குப் பிறந்தது எப்படி அடிபணியும்? மாறாக அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் கண்டு சினம் கொண்டார். “வாழ்வியல் தலைவரும் வழிகாட்டியுமான தந்தை பெரியாரை அவர் வந்துள்ள விவரம் அறிந்தும் சந்திக்காமல் இருந்தால்தான் குற்றம். பெரியாரைச் சந்தித்தது குற்றம் என்றால் இக்குற்றத்தைத் தொடர்ந்து செய்வேன்” என்று விளக்கம் அளித்தார். இதனால் அரசு ஒன்றும் செய்ய இயலாமல் விட்டு விட்டது.

55 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாறு திரும்புகிறது. ஆனால் முடிவு வேறாக உள்ளது.

கடலூர் புதுநகர் காவல்நிலையக் காவலர்கள் இரங்கராசு, இரஞ்சித்து, அசோக்கு ஆகியோர் பெரியார் பிறந்தநாளின் பொழுது பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். பெரியார் சிலையின் கீழ் நின்று ஒளிப்படமும் எடுத்துக் கொண்டனர். திராவிட ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் ஆட்சியில் எவ்வகை விளக்கமும் கேட்காமல் அம்மூவரையும் பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சிக்கு மாற்றியுள்ளனர்.

பெரியார் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து வணங்குகின்றனர். அவரைப் போற்றிப் பேசுகின்றனர். அவர்கள் வழியில் அவர்கள் கீழ்ப்பணியாற்றும் காவலர்கள் பெரியார் சிலையை வணங்குவது குற்றமா? அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்ததன்மூலம் காவல் உயர் அதிகாரிகள் தமிழ்நாட்டில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன எனக் காட்ட முயலுகின்றனரா? இஃது அரசிற்கு எதிரான சதியல்லவா?  அரசு நீதிபதியே பெரியாரைச் சந்திப்பது குற்றச்செயல் என்றால் அக்குற்றத்தைத் தொடர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார். அவ்வாறு அவர் சொன்ன அதே ஊரிலேயே காவலர்களை வேறு மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்து அவர்களின் குடும்பத்தினருக்குத் துன்பம் இழைக்கின்றனரே! 

எனவே, முதல்வர் தலையிட்டு இக் காவலர்கள் மூவரையும் முந்தைய பணியிடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். அரசிற்கு அவப்பெயர் உண்டாக்கியுள்ள காவல் உயர்அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

பெரியாரைப் போற்றும் தமிழக அரசு அவ்வாறு செய்யுமா?

இலக்குவனார் திருவள்ளுவன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue