கீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்
கீழ்ச்சாதியும் மேல்சாதியும்
எதையும் நீ தகுதியாக எடுத்துக் கொள்ளாதே
உனக்கு அது தகுதியா என்று பார்!
தகுதி என்பது நிலை இல்லை
மிகுதி என்ற நிலையைக் கொள்!
சாதி என்பது சன்மானம் அல்ல
சமுதாயத்தின் அவமானம்
சாதி என்பது சக்தி அல்ல அது
உன் தலைமுறையின் பக்தி!
சாதிப் பெருமையைச் சொல்லி வளர்க்காதீர்கள்! நீர்
சாதித்த பெருமையைச் சொல்லி வளருங்கள்!
வாழும் வழி வேறு ஆனாலும்
வந்த வழியும் செல்லும் வழியும்
ஒன்றேயாம் உயிர்களுக்கு!
தோலின் நிறத்தைக் கொண்டும்
தொழிலின் தரத்தை கொண்டும்
பிரிக்கப்பட்டது சாதி
அப்பன் பணத்தில் வாழ்பவன் எல்லாம் கீழ்ச்சாதி
அடுத்த வேலை சோற்றுக்கு உழைப்பவன் மேல்சாதி
உழைத்துப் பிழைப்பவன் மேல்சாதி
ஊதாரியாய்த் திரிபவன் கீழ்ச்சாதி
பணிந்து செல்பவன் மேல்சாதி
பணத்தில் மிதப்பவன் கீழ்ச்சாதி
குணத்தில் நல்லவன் மேல்சாதி
குற்றத்தில் வல்லவன் கீழ்ச்சாதி
பணத்தைக் கொண்டு வெல்பவன் கீழ்ச்சாதி
குணத்தைக் கொண்டு வெல்பவன் மேல்சாதி
தீண்டாமையால் எரியும் கீழ்ச்சாதியவன்
தீண்டாவிட்டால் எரியாது போகும் மேல்சாதி
பறை இல்லையேல் நிறை இல்லை
உன் சாவு
பாடை இல்லையேல் மேடை இல்லை
உன் சடலம்
சுமந்து செல்பவனா கீழ்ச்சாதி
சுமைமாய்க் கிடப்பவனா மேல்சாதி
சவமாய்க் கிடக்கும் மேல் சாதியை(!)
சமமாய் நடத்தும் கீழ்ச்சாதி(!)
ஏதோ ஒரு சாதிக்குப் பிறந்தவன்தான் நான்
எதையும் சாதிக்காமல் இறப்பதில்லை நான்
எந்த சாதிக்குப் பிறந்தவன் என்பதைவிட
எதைச் சாதிக்கப் பிறந்தவன் என்பதிலேயே
இருக்கிறது என் வாழ்வு
களவும் கற்று மற!
சாதியை மட்டும் கருப்பத்திலேயே துற!
சாதியை விட்டால் சாதகம் என்றால்
எந்த நாயும் சாதியைப் பார்ப்பதில்லை
பாதகம் என்றால் எந்த நாயும்
பரம்பரைச் சாதியை விடுவதில்லை
உணர்வுகளை மதிக்காத உதவாக்கரைகள்தான்
சாதியை உயிராக மதிக்கின்றனர்.
உணர்வுகளைப் புரிந்த எனக்கு
மயிராகத் தெரிகிறது அந்தச் சாதி.
அந்த மயிர் உதிர்ந்தாலும் பரவாயில்லை
உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை
சாதி எனும் சதியை முறியடிப்போம்
சமமான சமுதாயம் தோற்றுவிப்போம்
சாதிதனைச் சவக்குழியில் நாம் புதைப்போம்
சந்ததிகளுக்குச் சாதிக்கக் கற்றுக் கொடுப்போம்!.
இவண்
Comments
Post a Comment