தமிழ் தலைகுனிய விட்டதில்லை! – ஆற்காடு க குமரன்
தமிழ் தலைகுனிய விட்டதில்லை!
எழுத்துகளோடு உறவாடவும்
எண்ணங்களோடு உரையாடவும்
எனக்கு நேரமில்லை
பொழுது போகவில்லை என்பது பொய்
பொழுது போதவில்லை என்பதே மெய்
எழுத்துகள்தான் என் நண்பர்கள்
எண்ணங்கள் துணையோடு
அவர்களைச் சேர்த்துத் கோத்து
வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி
வலம்வர விட்டு வாசித்துச்
சீராக்கி நேராக்கி கவிதைத் தேராக்கி
மகிழவே நேரம் போதவில்லை எனக்கு
காட்சிப் படுவதை எல்லாமே
வார்த்தைகளை கொண்டுச் சான்றாய்
வடிக்கிறேன் நான்
புண்படுத்தும் மனிதரிடையே
பண்பட்டு போய்க்கொண்டிருக்கிறது என் ஆயுள் காலம்…..
வாசகர்கள் எனக்கான வரங்கள்
திறனுரைகள் எனக்கான உரங்கள்
கைதட்டும் கரங்கள் இருப்பதால்தான்
காற்றுகூட கத்துகிறது
எழுத்துகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதால்
எவரைப் பற்றியும் கவலை இல்லை எனக்கு
இரவும் பகலும்
நான்கு திசைகளிலும்
ஏழு நாட்களும்
எழுத்துகளோடே நான்
உணவுக்கும் ஏங்குவதில்லை உறவுக்கும் ஏங்குவதில்லை
உண்மைகள் தூங்குவதில்லை
உணர்வுகள் வரிகளில் வலிகளாய்
எழுத்து எனக்கு ஒரு வடிகால்
உணர்வுகளைக் கொண்டு வடிப்பதால்
என் ஒவ்வோர் எழுத்துக்கும் உயிர் இருப்பதை உணர்கிறேன் நான்
என் எழுத்துகள் என்னை எதிர்த்துப் பேசுவதில்லை
எல்லாம் உண்மை என்பதால்.
என் கவிதை வரிகளில் கண்ணீர் வடிந்தாலும்
கவிதைப் புத்தகம் நனைவதில்லை
நான் இருப்பதோ தூரம் ஆனால்
என்னை வாசிப்பவர்கள் விழிகளில் ஈரம்
என்னால் முத்தமிட முடியாத வாசகர்களின் விழிகளை
என் வரிகள் முத்தமிடுகின்றன
உடன்பிறப்புகளாக உறவுகளாக நண்பர்களாக
என் வரிகளே வாசகர்களுக்கான
காணிக்கை! அவர்களே
எனக்கான தணிக்கை!
உங்கள் பாதங்களைத் தொட மனமில்லை காரணம் என் தமிழ்!
உங்களது கண்களைத் தொட்டு வணங்குகிறேன்!
என்னைக் காலன் அழைக்கும் வரை
எழுத்துகளோடு என் காலம் முடியட்டும்
இது தொழில் அல்ல
வழித் தோன்றலைப் பணியமர்த்த
இது ஒரு பிணி
எனக்குப் பிடித்த எழுத்துப்பணி
என்னைப் பிடித்த பிணி
ஏழு ஏழு பிறவிக்கும் என்னைப் பிடிக்கும் இனி!
இருந்தாலும் நான் படைத்த என் வழித் தோன்றல்கள்
என் கவிதை வரிகள்
அவற்றைவிட்டுச் செல்கிறேன் உங்களுக்காக!
பிரம்மனிடம் ஒரே ஒரு பிச்சை கேட்கிறேன்
இனி வரும் பிறவிகளிலும்
தமிழனாகப் பிறக்க வேண்டும்
தமிழுடனே இருக்க வேண்டும்
தமிழுடனே இறக்க வேண்டும்
இறந்த பின்னும் தமிழாகவே வாழ வேண்டும் உங்களுக்காக!
தழைக்க வேண்டும் என்று தவம் இருக்க வில்லை நான் காரணம்
தமிழைத் தொட்டவன் தழைக்காமல் இருந்ததில்லை!
தமிழ் அவனைத் தலைகுனிய விட்டதில்லை!
தமிழ் வாழ்க என்று சொல்லவில்லை
தமிழன் தமிழனாக வாழவேண்டுமெனச் சொல்கிறேன்
தன்னிகரில்லா மொழியெனத்
தரணிக்குரைக்க கேட்போர்
உறைக்கும் படி வேண்டும்
உணர்த்த வேண்டும் என்று சொல்கிறேன்!
இவண்
ஆற்காடு க குமரன் 9789814114
Comments
Post a Comment