அயல்நாட்டில் வேலையா?அடிமையா? - ஆற்காடு க.குமரன்
ஆற்காடு க.குமரன்
அயல்நாட்டில் வேலையா?அடிமையா?
வழியனுப்பி வைத்தவர்களின் கனவு
வழித்துணையாய் வந்த கனவு
வாடிக் கிடக்கிறது பாலைவனத்தில்
கானலாக
கானல் நீர் வேட்கை தீர்க்காது தீர்க்கிறது
நிகழ்வுகள் நினைவுகளாய் நினைத்துப் பார்க்கையில்..
வெளிநாட்டில் வேலை
கை நிறைய சம்பளம்
ஆசை ச் சொற்கள் எல்லாம்
அலையடித்துப் போனது அனலாய்க் கொதித்தது
மணல்மேடு பாலைவனம்
.
அச்சம் மடம் நாணம் சூடு சொரணை
அனைத்தையும் துறந்து
உச்சம் கூச்சம் எல்லாம் மறந்து
எச்சம் மிச்சம் எல்லாம் சேர்த்துச்
சொச்சக் கனவுகளைக் கரைசேர்க்க
சொந்த மண்ணை மிதிக்க
சொப்பனம் காணும் விழிகள் எத்தனை
தாய்த் திருநாட்டில் தாயின் மடியில்
தளிராய்த் தவழ்ந்தவன்
ஆசைப் பேயால் அயல் தேசத்தில்
அடிமை ஆவணம் எழுதிக் கொடுத்து
அடிமையாக நாளும் வாழ்ந்து
அகதியாக அடிமையாக வாழ்வதைவிடச்…… சொந்த நாட்டில்
விடுதலைக் காற்றை உயிர்த்துச்
சுடுகாடு சேரலாமே
ஆசையே துன்பத்திற்குக் காரணம்
போதி மரத்துப் புத்தன் சொன்னது போதவில்லை புத்திக்கு
கண்ணுக்கு மறைய கழுதை மேய்த்தாலும்
கண்ணில் கண்டதும் ஊர் மெச்சணும்
வெளிநாட்டில் வேலை பார்த்தேன் என்ற பெருமை.
என்ன வேலை பார்த்தேன் என்பதை எண்ணிப் பார்ப்பதே சிறுமை
பணத்தின் அருமை பண்ணுபவனுக்கே தெரியும் எண்ணுபவனுக்குத் தெரியாது
சொந்த நாட்டில் இரத்தமும் வியர்வையும்தான் சிந்த வேண்டும்
அயல் நாட்டில் மொத்தமாய் அல்லவா சிந்தவும் வேண்டும்.
பேராசை பேர் இழப்பு
ஊராசை பெரும் இழப்பு!
என்ன வளம் இல்லை உங்கள் திருநாட்டில்
ஏன் வந்தாய் எங்கள் நாட்டில்?
பாடினான் அயலகப் பாரதி அவன் ஏட்டில்
அவனுக்கு எப்படித் தெரியும் அத்தனை பேரும்
கனவில் மிதப்பது எங்கள் வீட்டில்….
திரைகடல் ஓடியும் திரவியம் தேடினேன்
வரைபடம் முழுவதும் வலம் வந்து ஓய்ந்தேன்
வழித்துணையாய் வந்தது ஒற்றைக் காசு நெற்றிப்பொட்டு
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது கனவு கண்ட கண்கள்
கண்ணீர் சிந்தி என் கண்கள்
கல்லறையில் புதைந்தது.
இறந்து போன நிலையிலும்
இதுதான் உலகம் என்று
இதுவே இன்ப உலகம் என்று
மதி மகிழ்ந்தது!
ஆற்காடு க குமரன்
9789814114
Comments
Post a Comment