தந்தை பெரியார் சிந்தனைகள்- முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
அகரமுதல
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’
பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்
சென்னைப் பல்கலைக் கழகம்
தந்தை பெரியார்சிந்தனைகள்
தலைவர் அவர்களே!
அறிஞர் பெருமக்களே!
மாணக்கச் செல்வங்களே!
அறிஞர் பெருமக்களே!
மாணக்கச் செல்வங்களே!
முனைவர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். முனைவர் இரா. தாண்டவனிடமிருந்து அழைப்பு வந்ததும் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்பதுபற்றிச் சிந்தித்தேன். முடிவாக ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்பதுபற்றிப் பேசலாம் என உறுதி கொண்டேன். என் மாணாக்கர் வாழ்வில்- நான் அறிவியல் மாணாக்கன்- என் சிந்தனையைத் தூண்டியவர்கள் எனக்குக் கணிதம், அறிவியல் கற்பித்த பேராசிரியப் பெருமக்கள் (1934-1939) நன்முறையில் அமைந்தமையால் அறிவியலில் முதன் வகுப்பு – கல்லூரியில் முதல்நிலை – மாநிலத்தில் மூன்றாம் நிலையில்- தேர்ச்சியடைய முடிந்தது. ஆனால் பொதுவாழ்வில் என் சிந்தனையைத் தூண்டி அது வளரக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்தான் என்பதை இன்றளவும் நீள நினைந்து பார்க்கின்றேன். ஆகவே அவரே எனக்குப் பேச்சுத்தலைப்பாக அமைந்தார். 1934-39 இல் நான் புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்றபோது திருச்சி நகரமண்டப (town Hall) திடலில் நடைபெறும் கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் பேசும் பேச்சுகள் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்தன; தவறாமல் அவர்தம் பேச்சுகளை உன்னிப்பாகக் கேட்டு வந்தேன். அவை யாவும் இளைஞர் மனத்தை ஈர்க்கக் கூடியனவாக அமைந்திருக்கும்.
இந்த அறக்கட்டளை நாயகராக இருக்கும் முனைவர் சி. அ. பெருமாள் அவர்களை 1975 முதல் அறிவேன். நான் திருப்பதியில் பணியாற்றியபோது இப்பெருமகனாரும் இவர்தம் கெழுதகை நண்பர் (மாநிலக் கல்லூரி முதல்வர்) திரு. சே.. இராமசந்திரன் அவர்களும் திருப்பதிக்கு வருவார்கள். என் இல்லத்திற்கருகில் குடியிருந்த (அரசியல் துறை பேராசிரியர்) முனைவர் கே. கமலநாதன் இல்லத்திற்கு வருவர். பேசி அளவளாவுவோம். அப்பொழுதே இருவரும் துணை வேந்தர்களாக உயர்வர் என என் மனம் எண்ணியதுண்டு. ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது; மூன்றாண்டு மதுரை-காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
நண்பர் முனைவர் சி. அ.பெருமாள் அவர்கட்கு அந்த வாய்ப்பு வரவில்லை; அஃது அவருக்கு இழப்பு ஒன்றுமில்லையாயினும், அவர்தம் சீரிய கல்விப் பணியைத் தமிழர்கள் இழந்தனர். முனைவர் பெருமாள்ஒரு பெரிய சிந்தனையாளர் என்பதற்கு அவர் கொணர்ந்த ‘மதிப்பியல் பேராசிரியர் திட்டம்’ ஒன்றே சிறந்த சான்றாக அமைகின்றது. இத்திட்டம் உண்மை உழைப்பாளர்கட்குத் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு தருகின்றது. அத்திட்டத்தில்தான் அடியேன் (தமிழ் இலக்கியத்துறையில்) ‘வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராகப்’ பணியாற்றுகிறேன். முனைவர் (பிஎச்டி) ஆய்வு மாணாக்கர் மூவருக்கு வழிகாட்டியாக இருக்கலாம் என்ற வாய்ப்பும் பல்கலைக்கழகம் தந்துள்ளது. ஆசிரியப் பெருமக்கள் இருவர் ஆய்ந்து வருகின்றனர். முனைவர் சி. அ.பெருமாளும் மதிப்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்; மாணாக்கர் உலகத்தில் சிறந்த செல்வாக்குடன் திகழ்கின்றார். 1983-இல், இவர் துணைவேந்தராக வந்திருந்தால் பல்கலைக்கழகம் பல்வேறு திசைகளில் முன்னேற்றம் கண்டு திகழ்ந்திருக்கும் என்பது என் கருத்து. இஃதுடன் இஃது நிற்க.
தந்தை பெரியார் சிந்தனைகளை மூன்று தலைப்புகளில் (1) கடவுள்,சமயம்பற்றிய சிந்தனைகள் (2) சமூகம்பற்றிய சிந்தனைகள் (3) மொழிபற்றியசிந்தனைகள் என்று மூன்று நாள் பேசத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்த அண்ணா வாழ்வியல் மையத் துறைத்தலைவர்பேராசிரியர்முனைவர் இரா. தாண்டவன் அவர்கட்கு மிக்க நன்றி.
1. கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகள்
முதற்பொழிவாக இந்தத் தலைப்பில் பேசத் தொடங்குவதற்கு முன் தந்தை பெரியாரைப்பற்றி அறிமுகமாகச் சில கூறுவேன்.
(1) இலக்கண நூற்பாபோல் பாவேந்தர் பாரதிதாசனின் அறிமுகம் இது!
அவர்தாம் பெரியார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்ச கர்க்கோர் கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியி ருப்பு
விடுத லைப்பெரும் படையினர் தொகுப்பு!
தில்லி எலிக்கு வான்ப ருந்து
தெற்குத் தினவின் படைம ருந்து
கல்லா ருக்கும் கலைவி ருந்து
கற்ற வர்க்கும் வண்ணச் சிந்து!
சுரண்டு கின்ற வடக்க ருக்குச்
சூள்அ றுக்கும் பனங்க ருக்கு !
மருண்டு வாழும் தமிழ ருக்கு
வாழ வைக்கும் அருட்பெ ருக்கு !
தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்!
தமிழர் தவம் கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும் தலை மேடை.[குறிப்பு 1]
வஞ்ச கர்க்கோர் கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியி ருப்பு
விடுத லைப்பெரும் படையினர் தொகுப்பு!
தில்லி எலிக்கு வான்ப ருந்து
தெற்குத் தினவின் படைம ருந்து
கல்லா ருக்கும் கலைவி ருந்து
கற்ற வர்க்கும் வண்ணச் சிந்து!
சுரண்டு கின்ற வடக்க ருக்குச்
சூள்அ றுக்கும் பனங்க ருக்கு !
மருண்டு வாழும் தமிழ ருக்கு
வாழ வைக்கும் அருட்பெ ருக்கு !
தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்!
தமிழர் தவம் கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும் தலை மேடை.[குறிப்பு 1]
பாவின் சொல், சொற்றொடரின் பொருள் ‘பொரி மத்தாப்பு‘ போல் சீறி எழுவதைக் கண்டு மகிழலாம்; அந்த ஒளியில் தந்தை பெரியாரின் உருவத்தை மானசீகமாகவும் காணலாம்.
(தொடரும்)
[குறிப்பு 1. பாரதிதாசன் கவிதைகள்]
Comments
Post a Comment