தன்னேரிலாத தமிழ் – பாரதிதாசன்
அகரமுதல
தன்னேரிலாத தமிழ்
தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன்
இன்னல் தவிர்த்தாள் என்னையே தன்னேரிலாத…..
முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய
மொழியே! மொழியே! மொழியே!, எனவே வாழ்த்தும்,
தன்னேரிலாத…..
தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த
திருவே! திருவே, திருவே புகழ் மிகுந்த
மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த
வாழ்வே! வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும்,
தன்னேரிலாத…..
ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள்
அன்பே! அன்பே,அன்பே புகழ் மிகுந்த
சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே
செல்வி! செல்வி, செல்வி எனவே வாழ்த்தும்.
தன்னேரிலாத…..
முதன்முதல் செந்தமிழ் நான்மறை செப்பிய
முத்தே! முத்தே, முத்தே புகழ்மிகுந்த
புதுவாழ்வு காட்டிடும் திருக்குறள் பூத்தபூம்
பொழிலே! பொழிலே, பொழிலே எனவே வாழ்த்தும்,
தன்னேரிலாத…..
Comments
Post a Comment