Skip to main content

அவர்கள் வருகிறார்கள்! – தமிழ்சிவா


  • அவர்கள் வருகிறார்கள்! 


வினையை விதைத்துத்
திணையை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்

குறிஞ்சியைக் குப்பையாக்கினார்கள்
முல்லையை ஆதியோகி ஆக்கினார்கள்
மருதத்தை உந்துகளில் ஏற்றினார்கள்
நெய்தலைக் கூவமாக்கினார்கள்
பாலையைப் பாழாக்கினார்கள்

நாளெல்லாம் பொழுதெல்லாம்
வினைகளை விதைத்துத்
திணைகளை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்

கானுறு வேங்கையைக் ‘காசு’ க்குப் பிடித்தார்கள்
கழிவுப் பொந்துகளில் எலிகளென வளர்த்தார்கள்
வெண்குருதியைக் குடத்தினில் வாங்க
நம்குருதியையே சிந்த வைத்தார்கள்

ஊன்துவை அடிசில் உண்டு
தேள்கடுப்பன்ன ஊறல் மாந்தி
தெளியாச் சிந்தனை கொண்டு
திரண்டு வருகிறது கூட்டம் கூடவே

ஆட்டம் அணிபெற கோட்டை கிலிபெற
நாட்டினர் நலிவுற நாட்டம் கொண்டே
வருகிறார்கள் வருகிறார்கள்
வயல்கள் பொடிபட வாழ்க்கை அடிபட
அடிப்படை அலைவுற குடிப்படை கொண்டு
வருகிறார்கள் வருகிறார்கள்
ஏழையர் நிலைகெட பாழையர் பாழ்ப்பட
காளையர் தலைமுறை கண்ணீர் பெருக்கிட
வருகிறார்கள் வருகிறார்கள்
கூப்பிய கரங்களில் கொலைக்கருவி இடம்பெற
குனிந்த மாநிலம் மேலும் குலைந்திட
வருகிறார்கள் வருகிறார்கள்

சுவர்களென நிற்பீரோ நட்பினரே
சுமைதாங்கியெனக் கிடப்பீரோ உழைப்போரே
நகுதக்கனரே நானிலத்தார்
புகுத புன்மையரைப் புறமுதுகிடச் செய்வீரே!
  • தமிழ்சிவா
  •  

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்