சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3: முனைவர் இரா.வேல்முருகன்
அகரமுதல
சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்
– ஓர் ஆய்வு 1/3
[அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.
திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், ‘முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள்’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற கட்டுரை. 3 பிரிவாகப் பகுக்கப்பெற்று வெளியிடப் பெறுகிறது.]
தமிழ் கூறு நல்லுலகம் ஈன்றெடுத்த தவப் புதல்வர்களுள் வாழ்வாங்கு வாழ்ந்து தமக்கெனத் தனிமுத்திரை பதித்த வித்தகர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்.
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்பக் கல்வி உலகில் அழியாப் புகழோடு வாழ்ந்த பெருந்தகை.
தொண்டு செய்வீர் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே!
என்ற பாரதிதாசனின் முழக்க வரிகளைத் தலைமேற் கொண்டு பல்துறை வித்தகராகப் பவனிவந்தவர். அவரது அரும்பெரும் படைப்புகளுள் சிறப்பிடம் பெற்றுத் திகழும் ‘பழந்தமிழ்’ எனும் படைப்பில் காணப்படும் அருமை பெருமைகளை ஆய்வு நோக்கில் வெளிக் கொணர்வரே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.
பேராசிரியரின் தாய்மொழிப்பற்று எத்தன்மைத்து என்பதைப் ‘பழந்தமிழ்’ எனும் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில்,
“வேற்றுமொழியைக் கற்கும் நாம், நம் மொழியை மறவாது அதன் வளத்திற்கு வேற்றுமொழி அறிவைப் பயன் படுத்த வேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.இறவாத புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் . இரண்டும் செய்திலோம். அன்றியும் உள்ளுவதும் உரையாடுவதும் வேற்று மொழியிலேயே நிகழ்த்தினோம். ஆகவே நமக்கென ஒரு மொழி இல்லை என்று பிறநாட்டவர் எண்ணுமாறு நடந்துவிட்டோம்”
எனத் தமிழ் மொழியைப் புறந்தள்ளும் தமிழர்களுக்கு விழிப்பு உணர்வைஏற்படுத்துகின்றார். தமிழ் மொழி காலம் காலமாக அதன் சீரிளமை குறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பது இவர் போன்ற தமிழ்ப் பற்றாளர்களால்தான்.
பேராசிரியரின் மொழிநடை தெளிந்த நீரோடை போன்றது. கூறவரும் கருத்துகளை ஆணித்தரமாகக் கூறும் பண்பு இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது எனில் மிகையில்லை. தம் வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணி ஆற்றுவதிலும் உலக அரங்கிலே தமிழனையும், தமிழையும்தலைநிமிரச் செய்வதிலுமே காலத்தைக் கழித்தவர். பன்மொழிப் புலமை சிறப்பாகப் பெற்றிருந்ததும் இறுமாப்பு எதுவுமின்றி ‘என் கடன் பணி செய்து கிடப்பதே ’ என வாழ்ந்த பெருந்தகையார்.
தமிழுக்குத் தொண்டு செய்த மேலை நாட்டு அறிஞர்களை – ‘ தமிழும் அதன் கிளை மொழிகளும் தனிக்குடும்பத்தைச் சார்ந்தன. தமிழ் வேறு ; ஆரியம் வேறு; தமிழ் ஆரிய மொழியின சிதைவு மொழிகளுள் ஒன்றன்று’ என்று நிலை நாட்டிய பேரறிஞர் கால்டுவெல் அவர்களின் தொண்டினை – நாம் என்றும் போற்றுதற்குரியோம் என வாயாரப் புகழ்கின்றார். கால்டுவெல், சீ.யு.போப், ஈராசு. பாதிரியார் போன்ற பல்வேறு அறிஞர்களின் நூல்களைக் கசடறக் கற்று அவர்களின் தமழ்த் தொண்டினைப் புகழும் தமிழ்ப் பண்பாளர் இவர்.
இவரது ‘பழந்தமிழ்’ எனும் நூலில் 1)மொழியின் சிறப்பு, 2) மொழிகளும் மொழிக் குடும்பங்களும், 3)பழந்தமிழ் 4) மொழி மாற்றங்கள் 5) பழந்தமிழ்ப் புதல்விகள் 6) பழந்தமிழ் இலக்கியம், 7) பழந்தமிழ் நிலை 8) பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் 9) பழந்தமிழ் : சொல் அமைப்பு 10) பழந்தமிழும் தமிழரும் 11) தமிழ் மறுமலர்ச்சி எனப் பதினோறு தலைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன,
மொழியின் சிறப்பை விளக்க வந்த பேராசிரியர், மொழி என்பது மொழியப்படுவது; வாயால் மொழிந்து காதால் கேட்கப்படுவது என்றும் மொழி என்று தமிழர்கள் பெயரிட் டுள்ளமை மிகவும் பொருத்தமுடையதாகும் என்றும் Language என்ற சொல்லுக்கு நாவால் உண்டாக்கப்படுவது என்று பொருளாகும் என்றும் விளக்கம் கொடுத்திருப்பதன் மூலம் மொழியை அறிவியல் முறைப்படி அணுகியிருப்பது புலனாகிறது.
மொழியின் தோற்றம் பற்றித் திட்டவட்டமாகக் கூற இயலாவிடினும் தமிழ் மொழி உலகில் முதன் முதலில் தோன்றி யிருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக ‘அம்மா’ என்று மக்களுடன் நெருங்கிப் பழகும் விலங்குகளாம் பசுவும் எருமையும் ஆடும் கூப்பிடக் காண்கிறோம். தமிழில்தான் அம்மா எனும் சொல் முழு உருவுடன் ஒலிக்கப்படுகின்றது. ஆதலின் ‘தமிழே இயற்கையை ஒட்டி எழுந்த உலக முதன் மொழி என்று கூறுதல் சாலும்’ என்ற கருத்து தமிழே முதன் மொழி என்பதற்கு வலுச் சேர்ப்பதாக அமைகின்றது.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்பே தோன்றியது தமிழ் என்றும் எமனோ மற்றும் பர்ரோ போன்ற பேரறிஞர்களின் கூற்றிற்கேற்பவும், ‘ஒப்பிலக்கணத்தின் தந்தை’ எனப் போற்றப்பெறும் கால்டுவெல் அவர்களின் கூற்றிற்கேற்பவும் மூலத்திராவிட மொழியாகத் தமிழ் மொழியே இருந்தது என்ற நிலையிலும், மொகஞ்சதாரோ அரப்பா போன்ற இடங்களில் அகழ்வாய்வின் மூலம் தோண்டி எடுக்கப் பட்ட பானை ஓடுகளில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப் பட்டிருந்தன என்ற நிலையிலும் தமிழே உலகத்தின் முதல் மொழி எனக் கருதுவதில் எள்ளளவும் ஐயமில்லை.
(தொடரும்)
முனைவர் இரா.வேல்முருகன், முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்
Comments
Post a Comment