தந்தை பெரியார் சிந்தனைகள்- முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 ஏப்பிரல் 2019 கருத்திற்காக.. சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல் ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம் சென்னைப் பல்கலைக் கழகம் தந்தை பெரியார் சிந்தனைகள் தலைவர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! மாணக்கச் செல்வங்களே! முனைவர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். முனைவர் இரா. தாண்டவனிடமிருந்து அழைப்பு வந்ததும் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்பதுபற்றிச் சிந்தித்தேன். முடிவாக ‘ தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்பதுபற்றிப் பேசலாம் என உறுதி கொண்டேன். என் மாணாக்கர் வாழ்வில்- நான் அறிவியல் மாணாக்கன்- என் சிந்தனையைத் தூண்டியவர்கள் எனக்குக் கணிதம், அறிவியல் கற்பித்த பேராசிரியப் பெருமக்கள் (1934-1939) நன்முறையில் அமைந்தமையால் அறிவியலில் முதன் வகுப்பு...