காற்றே காத்திரு! – பேரறிவாளன் தந்தை குயில்தாசன்

காற்றே காத்திரு! – பேரறிவாளன் தந்தை குயில்தாசன்


எழுவரின் விடுதலைக்கு முயலும் அரசிற்கு விடுப்பு வழங்க மனம் வராதது ஏன் என்று தெரியவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது காப்புவிடுப்பில்(பரோலில்) அனுப்பக்கூடாது என விதி உள்ளதாகத் தமிழ்நாடு சிறைத்துறைத்தலைவர் எழுத்து மூலமாகத் தமிழ்க்காப்புக்கழகத்திற்குத் தெரிவித்துள்ளார். தனி நேர்வாகவும் விதித் திருத்தமாகவும் ஏதும் ஒரு வகையில் விடுப்பிலாவது இவர்களை இவர்கள் போன்றோரையும் அனுப்புவதே அறமாகும். அவ்வாறு அனுப்புவதால் விடுப்புக் கால நன்னடத்தை அடிப்படையில் விடுதலைக்கான பாதையை  எளிதாக்கலாம். அவ்வாறு இல்லையேல் அதனைக் காரணம்காட்டியே விடுதலையை மறுக்கலாம்!
 நளினிக்குத் தந்தையை உயிரோடு பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்ட கொடுஞ்செயல்போல், பேரறிவாளன் தந்தையைப் பார்க்க இசைவு மறுக்கப்படுகின்றது.
பேரறிவாளன் தந்தை குயில்தாசன்  நோயில் வீழ்ந்து படுத்த  படுக்கையாக இருக்கின்றார்.  மகனைக் காணாமல் மருத்துவம் பார்க்க மாட்டேன் எனச் சென்னை வந்து மருத்துவம் பார்க்க  வேண்டிய தேவை இருந்தும் மறுக்கிறார்.
தந்தை தன் கண்ணீரைக்  கவிதையாக்கி மூச்சுக் காற்றை  வேண்டுகிறார், தன் மகன் வரும் வரை தங்கியிருக்குமாறு!  அல்லல்பட்டு அழும் கண்ணீர் ஆட்சியாளரை  எப்பொழுது நனைக்கும்? விடிவு  எப்பொழுது பிறக்கும்? எனத் தெரியவில்லை.
அவர் கவிதையை இங்கே கண்ணீருடன் பகிர்கின்றோம்! விரைவில் பேரறிவாளன் முதலானோர் விடுதலை யடைவார்களாக!
காற்றே!
உன்னை வேண்டுகிறேன்.
இன்னும் சிறிது காலம்
உடலோடு ஒத்துழைத்து
உதவ வேண்டுகிறேன்.
என் மகனை நான்
தழுவும்வரை!
என் கண்ணுக்குத் தெரியாமல்
நான் அழுகின்றேன்.
கால் நூற்றாண்டுகளாக…
இமயத்தில ஏற நான்
பயின்றபோது
இமயத்துப் புலி
தென்சிங்கு நார்கே
எனதொரு காலை
அவர் தோள்மீதும்
மறுகாலை
அவர் உள்ளங்கையாலும்
தாங்கிட
இமயம் ஏறிய என்
கால்களோ இன்று
வேலை நிறுத்தம்
செய்கின்றன !
மூளையோ எப்போதும்
தொடர்பு எல்லைக்கு
அப்பால்…என்று
தடைபோடுகிறது!
தடுமாறுகிறது!
ஈரல்கள் அவ்வப்போது
உன் வரவைத் தடுத்து
இரண்டகம் செய்கின்றன!
அச்சம் ஊட்டுகின்றன!
சில பற்களோ பாவம்
எழுபத்து நான்கு ஆண்டுகள்
எனக்காக உழைத்து
இறுதியாகப் பிரிந்தே விட்டன!
உணவுப் பாதையோ
குண்டும் குழியுமாக உள்ள
சிற்றூர் பாதையாக!
என் இறுதி காலத்தில்
எனக்குத் துணையாக
இருக்க வேண்டிய
என் மனைவியோ
அவளின் இறுதிக் காலத்தில்
தன்னையும் மறந்து
என்னையும் மறந்து
தனித்து விட்டுவிட்டு
இன்னும் எங்கள்
மகனைத் தேடி அலைந்துகொண்டு
இருபத்தைந்து ஆண்டுகளாய்!
ஊழிக்காற்றே! நான்
எதைத்தான் தாங்கிக்கொள்வது?
எப்படி?எத்தனைக் காலம்?
இதற்காக நான்
என்னை அழித்துக் கொள்ள
நேர்ந்தாலும் அது
எம் இனத்திற்குப் பயன்படுவதாக
அமையுமே யன்றி
வீணாக இல்லை.
மானிடத்திற்கு என்
பங்களிப்பு ஏதுமில்லாப்
பயனற்ற வாழ்வை
நானும் விரும்பவில்லைதான்.
எனவே என்னைவிட்டு
நீ விடுதலை பெற எண்ணுவது
சரியானதுதான்.
ஆனால் சற்றே பொறு
நான் பொறுத்திருப்பதுபோல.
நீதியை
அடைகாத்துவரும் சூது
உண்மையைப் பொறுத்து
வானில் விடுதலையைப்
பறக்கவிடும்வரை.…..
இதுநாள்வரை நான்
இப்புவியில் இருக்க உதவிய
உனக்கும்
எங்களுக்காகப்
பேச்சாலும் செயலாலும்
மனிதத்தை வெளிப்படுத்திய
மனிதர் அனைவருக்கும்
என் நன்றியைப் படைக்கின்றேன்.
-அன்புடன் குயில்தாசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue