முனைவர் க.சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது – வாழ்த்துப்பா
தமிழகப்புலவர்குழு
கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர்
முனைவர் க. சிரீதரனுக்குத்
தமிழ்ச்சான்றோர் விருது வழங்கியது.
பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டத்தை முன்னிட்டுப்பிற்பகல் கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க இலக்கியங்களில் அறம், வீரம், காதல், நட்பு, போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ்ச்சான்றோர்கள் உரையாற்றினர். முனைவர் மறைமலை இலக்குவனார், கவிஞர் பொன்னடியான் வாழ்த்துரையாற்றினர்.
கி. ஆ. பெ.வி. கதிரேசன் நன்றி நவின்றார்.இந்நிகழ்வின் பொழுது
. கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் க. சிரீதரன் ஆற்றிவரும் தமிழ்த்தொண்டினைப்பாராட்டி, தமிழகப்புலவர் குழு அவருக்கு ‘தமிழ்ச்சான்றோர்‘ என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது.
பொற்கிழிக்கவிஞர், கயிலைமணி, முத்தமிழ்ப் பேரறிஞர் அரு. சோமசுந்தரன் விருதாளரைப் பாராட்டிப் பின்வரும் வாழ்த்துப்பா வழங்கினார்.
காலமெலாம் எங்களது நெஞ்சில் வாழ்வீர்!
கவினார்ந்த மேற்குமலை அடிவா ரத்தில்
கலசலிங்கம் பல்கலையின் கழகம் கண்டு
புவி போற்றக் கலைமகளும் போற்ற வாழ்ந்த
பொன்னான கலசலிங்கம் பெற்ற பிள்ளை
செவிகுளிர இன்றைக்கு வரவேற் பீந்த
சீரீதர் இவர்! பல்கலையின் பார் வேந்தர்!
கவிமகளே வாழ்த்துகிறாள்! ஈர்ப்போடு வந்தீர்!
கலசலிங்கம் பல்கலையே வாழ்த்து திங்கே!
தமிழாக வாழ்ந்தவராம் கி. ஆ. பெ. யின்
தன்னிகரில் மகளான தலைமை சான்ற
அமிழ்தான மணிமேகலை கண்ணன் இங்கே
அருந்தமிழின் புலவர் குழுக்கூட்டம் கூட்டி
இமிழ்கடல்சூழ் வையகமே புகழு மாறு
ஏற்றமிகு திருவில்லி புத்தூர் ஆண்டாள்
அமிழ்தான கோவிலிலே தரிசித் திங்கே
அருமைமிகு மாநாடு தமிழுக் கிங்கே!
சிலம்பொலியின் செல்லப்பன் வா. மு. சே யும்
சீர்மிக்க சாரதா, சுப்ப ராசும்
திலகவதி மறைமலையார் கருப்பசாமி
தீந்தமிழின் பொன்னடியார் மன்சூ ரோடு
நலமான வாசுகியார் முத்து ராமன்
நற்றமிழின் நீதிபதி வள்ளி நாயகம்
புலமை சால் செககதீசன், பாசுகர் சிரீகாந்து
போற்றிடவே மாநாடு! பொலிந்து வாழ்க!
தேய்ந்து வரும் தமிழுக்கு மாநா டின்று!
திரவியமாய்ப் பல்கலையில் கூட்டி உள்ளீர்!
ஓய்ந்திடாதீர்! முனைதோறும் முயற்சி செய்வீர்!
உழைப்பால் தான் தமிழுக்கு உயிர் ஊட் டம் காண்
பாய்ந்துவரும் நதியில்லை தமிழ கத்தில்!
பனிபடிந்த இமயங்கள் சிகர மில்லை!
ஆய்ந்து வரும் புலவீர்கள்! நீங்கள் உண்டு!
ஆதலினால் தமிழ் உண்டு ! வாழ்க நன்றே !
நீலநிறக் கடல்போலும் நீச்சல் பொய்கை
நிலவொளியில் நேற்றிரவு விருந்து வைத்தீர்!
பாலமுதப் பலகாரம் காலைப் போதில்!
பண்பாக வரவேற்கும் ஆசான் மார்கள்!
சீலமிகு மரியாதை பாராட் டீந்து
சிறப்பாகப் பரிசீந்து போற்றி னீர்கள்!
காலமெலாம் எங்களது நெஞ்சில் வாழ்வீர்!
கனித்தமிழே! சிரீதர்! கல்விக் கோவே!
கலசலிங்கம் பல்கலையா? கயிலாய
மாமலையா? கங்கை யமுனை
சங்கமமா! தாகூரின் சாந்தினிகே தனம்தானோ?
சங்கம் கண்ட
மங்கலமாம் மாமதுரைத் தமிழ்ச்சபையோ?
ஆக்சுபோர்டோ? கிருட்டிணன் கோவில்
இங்கின்று தேவேந்திரன் எழிற்சபையோ!
கேம்பிரிட்சோ? என்றும் வாழ்க!
அரு. சோமசுந்தரன்
பொன்முடி பதிப்பகம்,
முத்துப்பட்டணம், காரைக்குடி.
பேசி எண்; : 94431 38196
Comments
Post a Comment