மெய்யறம் – 1. மாணவர் கடமை : வ.உ.சிதம்பரனார்





மெய்யறம் – 1. மாணவர் கடமை : வ.உ.சிதம்பரனார்


அட்டை,மெய்யறம்,வ.உ.சி. : attai_meyyaram 03

மெய்யறம்

தமிழறிஞர் செக்கிழுத்த செம்மல் வ. உ.  சிதம்பரனார்(சிதம்பரம்பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல் ‘மெய்யறம்’ என்பதாகும். இந்நூல்.
மாணவரியல் (30 அதிகாரங்கள்)
இல்வாழ்வியல் (30 அதிகாரங்கள்)
அரசியல் (50 அதிகாரங்கள்)
அந்தணரியல் (10 அதிகாரங்கள்)
மெய்யியல் (5 அதிகாரங்கள்)
என ஐம்பிரிவுகளையும் 125 அதிகாரங்களையும் உடையது; அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களையும் விளக்கங்களையும் உடையது.
அகரமுதல நவம்பர் 22, 2015 இதழில்
மாண் பெற முயல்பவர் மாணவர் – வ.உ.சிதம்பரனார்
என்னும் தலைப்பில் முதல் அதிகாரத்தின் பாடல் வரிகள் மட்டும் பதியப்பட்டு இருந்தன.  நூல் முழுமையும் தொடர்ச்சியாகப்பதியப்போவதால்,  முதல் அதிகாரம் மீண்டும், ஆனால் பொருளுடன் இடம் பெறுகிறது.

1. மாணவர் கடமை

  1. மாண்பெற முயல்பவர் மாணவ ராவர்.
மாணவர் என்பவர் பல்வேறு சிறப்புகளைப் பெறமுயற்சி செய்பவர் ஆவார்.
  1. ஆணும் பெண்ணு மதுசெய வுரியர்.
ஆண்களும் பெண்களும் கல்வி கற்கும் உரிமையை உடையவர்கள் ஆவார்.
  1. இளமைப் பருவ மியைந்த ததற்கே.
கல்வி கற்பதற்கு இளமைப் பருவம் பொருத்தமானது ஆகும்.
  1. மற்றைய பருவமும் வரைநிலை யிலவே.
ஒருவன் எந்தப் பருவத்திலும் கல்வி கற்கலாம்.
  1. அவர்கடன் விதியிய லறிந்துநன் றாற்றல்.
அவருடைய கடமை நல்லொழுக்க விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வது ஆகும்.
  1. அன்னைதந் தையரை யாதியைத் தொழுதல்.
அவர் தாய், தந்தை, கடவுளைத் தொழுதல் வேண்டும்.
  1. தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்.
தீயவர்களின் நட்பைத் தவிர்த்து நல்லவர்களுடன் சேரவேண்டும்.
  1. தக்கவா சிரியராற் றன்னிய லறிதல்.
தகுந்த ஆசிரியரின் மூலம் தன்னுடைய இயல்பினை அறிதல் வேண்டும்.
  1. ஒழுக்கமுங் கல்வியு மொருங்குகைக் கொள்ளல்.
ஒரே சமயத்தில் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்துக் கல்வியும் கற்க வேண்டும்.
  1. இறைவ னிலையினை யெய்திட முயறல்.
(விருப்பு வெறுப்பு அற்ற உயர்ந்த நிலை) இறைவனின் நிலையினை அடைய முயற்சி செய்ய வேண்டும்
(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்