Skip to main content

ஆதலினால் காதல் செய்வீர் – (உ)ருத்ரா


ஆதலினால் காதல் செய்வீர் – (உ)ருத்ரா

53kavithai_pulinakakondrai

புலிநகக்கொன்றை
கரையெல்லாம்பூத்திருக்க‌
உறுமல் ஒன்று கேட்குதையா!
உள்ளெல்லாம் கிடு கிடுக்க.
எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை
அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌
நாணல் கீற்றும் பச்சைத்தீயாய்
நாடியெல்லாம் பற்றி எரிக்குதே.
பொருள் வயின் செல்கிறேன் என‌
கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு
குருகு கூட பறைச்சிறகை
படபடத்து துடி துடித்துக்காட்டுதையா.
உள்ளே நில நடுக்கம்
தவிடு பொடி ஆக்கியதில்
நான் எங்கே? என் உடல் எங்கே?
என் உறுப்புகளும் கழன்றனவே!
இதழ் குவிக்கும் ஒரு பக்கம்
சொல் அங்கே இறந்துவிழ.
சிறுபயல் பிய்த்திட்ட‌
பாவை நான் ஆனேனே.
கையில்லை.கால் இல்லை
உடுக்கை அன்ன சிற்றிடையும்
உருக்குலைந்து கிடக்கின்றேன்.
ஓடோடி வந்திடுவாய்.
சிற்றில் கட்டி அன்றொரு நாள்
பொங்கல் வைத்துத்தந்தேனே.
தீம்புளிப்பாகர் குய்புகை கமழ
அட்டுத் தந்தேனே பரிந்தூட்டி.
அடுப்பில்லை தீயில்லை
ஆனாலும் அறுசுவையில்
உண்டோமே மறந்தாயோ
உலகே மறந்ததுவும் மறந்தாயோ.
கற்பனயைக் காய்ச்சி சுவையூற‌
கனவுகளின் அடிசில் கை அள்ளி
உண்டோமே மறந்தாயோ…உள்ளத்து
களிப்பொங்கல் மறந்தாயோ?
என் கை உன் வாயில்.
உன் கை என் வாயில்.
ஊட்டிகிடந்த தெல்லாம்
மறப்பொமா?இறப்போமா?
சோறில்லை ஆனாலும் சோறுண்டு.
ஊன்பொதி வெண்சோறு
உருட்டித் தந்ததெல்லம்… உள்ளே
அவித்தெடுத்த ஆவிதானே!அறிவாயே!
பால்மண விளையாட்டில்
திருமணம் முடிந்தபின்னே
எற்றுக்கு எனைச் சுடும் காடு
ஏகும் விளையாட்டு?
பொருளுக்கு பிரிந்ததெல்லாம்
போதும் என் அன்பே!
உயிரை மெய் பிரிந்திட்டால்
தமிழ் ஏது? எழுத்தேது?
குற்றுயிராய் குலைந்திடவே
குறுந்தொகை வேண்டாமே!
கனலில் விழுந்த புழுவினுக்கு
கலித்தொகையும் வேண்டாமே!
உடனே வா!உடனே வா!
காற்றாக கரையும் முன்
மின் ஊற்றாக ஓடிவா.
இடைவெளிகள் தொலையட்டும்.
மென்காந்தள் விரல் இன்று
காய்ந்த சருகின் விறகாய்
காந்தல் கொண்டு எரிகின்றதே!
மயிர்க்கால் தோறும் உயிர்க்கால் கழறும்.
காத்துப் பூத்து பஞ்சடைந்து
கண்விழி நைந்தேன் வாராயோ.
அம்பு தைத்த ஆம்பல் விழியாய் உன்
வரவு தைத்து தினம் நொந்தேன்.
வேங்கையும் வேங்கையும்
வெரூஉய்த் தொலையட்டும்
வெண்சீர் வெண்டளைத் தொடையோடு
வெறுஞ்சொல் கூட்டம் வேண்டாமே.
பச்சையாக பகர்கின்றேன்.
சோறு கொதிக்கும் கவலையில்லை
உள்ளே அந்த “லாவா”
உறிஞ்சுவதை அறியாயோ!
நொடிப்பொழுதும் சயனைடு தான்.
சுருண்டு விழும் முன்னாலே
கைகளில் ஏந்திக்கொள்..வெறுஞ்
சடலத்தை அள்ளிக்கொள்.
பிறப்புக்குள் இறப்பையும்
சுவை பார்!பெண்ணே!
இறப்பின் இறக்கை கட்டி புது
கருப்பைக்குள் கூடு கட்டு.
அதுதானே காதல் என்பார்.
நூறு வயதுவரை நாராய்க்
கிழிக்கின்ற காலத்திலும்
காதல் தருணமே உன் பூங்கொத்து.
இதழாய் உதிர்ந்தாலும்
இரவாய் மெலிந்தாலும்
மின்னல் புள் கிசு கிசுக்கும்.
ஆதலினால் காதல் செய்வீர்!
53ruthra


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue