செஞ்சீனா சென்றுவந்தேன் 21 – பொறி.க.அருணபாரதி
21. கச்சத்தீவும் சீனர்களின் சப்பானிய எதிர்ப்பும்
சீன நண்பர்கள் சிலருடன் பேசும் போது,
அவர்கள் தமது நாட்டிற்கு யாரை போட்டியாளர்களாகக் கருதுகின்றனர் எனக்
கேட்டேன். வெகு சிலரே வட அமெரிக்கா என்றனர். ஒரு சிலர், இரசியா என்றுகூடச்
சொன்னார்கள். ஆனால், இந்தியாவைப் பற்றி கேட்டால், பலருக்கு ஒன்றும்
தெரியவில்லை. இங்கே, தமிழகத்தில், வங்க தேசம்தான் நமக்கு சவால் விட்டு
வளரும் நாடு என்று சொன்னால் நாம் எப்படி சிரிப்போம்? அதே போலத்தான்,
இந்தியாவைப் பற்றிக் கேட்டபோது சிரித்தார்கள். இந்தியாவில் பல தேசிய
இனங்கள் இருப்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தியா என்றால்
அமிதாப்பச்சனும், ஐசுவர்யாராயும் மட்டுமே தெரிந்திருக்கிறது. அதிலும்,
தமிழ்நாடு என்றால் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கு, வடநாட்டு
இந்திக்காரர் ஒருவர் இந்திய உணவுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது
கடையிலும் அமிதாப்பச்சனும், ஐசுவர்யாராயும்தான் படங்களாகத் தொங்கிக்
கொண்டிருந்தனர். அதிகபட்சமாக, மலேசியா முருகர் கோவில் படத்தை அங்கு
மாட்டியிருக்கிறார்கள்.
ஆனால், நான் சந்தித்த பலரும் சப்பான்
மீது கடுமையான கோபத்துடன் இருப்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.
இதற்குப் பல வரலாற்றுக் காரணங்கள் உண்டு.
இரண்டாம் உலகப் போரின் போது,
இட்லருடன் கூட்டு சோந்திருந்த சப்பானியப் படைகள், சீனாவிற்குள்
நிலக்கவர்வுத் தடைகளாக நுழைந்தன. வன்கவர்வுப் படையான சப்பான் படையினர், சீன
இராணுவத்தினரை மட்டுமின்றி பொதுமக்களையும் வகைதொகையின்றிக்
கொன்றொழித்தனர். நான்கிங்கு என்ற ஊரில், சற்றொப்ப 10,000க்கும் மேற்பட்ட
சீனப் பெண்கள், சப்பான் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர். சப்பான்
படையினரின் வெறியாட்டத்திற்குப், பள்ளிக் குழந்தைகள் கூடத் தப்பவில்லை.
மனச்சான்றுள்ள பல சப்பானிய அதிகாரிகளும், இதழாளர்களும் இந்த உண்மையை வெளிக்
கொணர்ந்தனர்.
இன்றுவரை, நான்கிங்கு
கற்பழிப்புகளும் படுகொலைகளும் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த பக்கங்களாக
இருக்கின்றன. போருக்குப்பின், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில்
இக்குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டு பல சப்பானிய அதிகாரிகள்
தண்டிக்கப்ப்பட்டனர். சீன மக்களுக்குச் சப்பான் இராணுவம் இழைத்த இந்தக்
கொடுமைகள் காரணமாகச் சீனாவில் சப்பான் எதிர்ப்பு நிலை
புரையோடியிருக்கின்றது.
இந்நிலையில்தான், சீன அரசின் கடல்
எல்லைப் பகுதியில் அமைந்துள்ள – சென்காகு [(Senkaku Islands / சீனாவில்
தயாயு (Diaoyu) / தாய்வானில் தியாயுதய் (Tiaoyutai)]என்ற தீவைச், சப்பான்
அரசு சொந்தம் கொண்டாடத் தொடங்கியது. தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவை
இலங்கை அரசிற்கு ‘அன்பளிப்பா’க அளித்துத் தன் சொந்த நாட்டுக் குடிமக்கள்
எனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்மக்களுக்கு வஞ்சகம் இழைத்தது இந்தியா.
ஆனால், சீனாவோ, தமது கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வோர் அங்குல நிலமும் தமது அன்
தேசிய இனத்தாயகத்தின் பகுதி என்பதை உறுதியாக நம்புகிறது. இதன் விளைவாக,
இத்தீவுகளுக்கு சப்பான் நாடு உரிமை கொண்டாட வந்தபோது கடும் சீற்றத்துடன்
உலக அரங்கில் சீனர்களின் அரசு போராடுகிறது.
சப்பானின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு
எதிர்ப்புத் தெரிவித்து, சீனாவில் பல இடங்களில் சப்பானியர்கள் மீதும்,
சப்பானியப் பொருட்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சியான் நகரத்தில்,
ஒரு சப்பான் மகிழுந்து கொளுத்தப்பட்டது. ஆனால், சப்பானிய எதிர்ப்பு
இழையோடும் இதே சீனாவில் தான் சப்பானின் தயாரிப்புகளான சாம்சங்கு, தொயட்டா
எனச் சப்பான் நிறுவனங்களின் பொருட்கள் அதிகளவு விற்பனையாகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
உலகமயப் பன்னாட்டு நிறுவனங்கள் தமது
நுகர்வியப் பண்பாட்டால் என்னதான் மக்களை நுகர்வோர்களாக மாற்றினாலும்,
அவர்களது தாய்நாட்டுப் பற்று என்றைக்கும் அழிந்துவிடுவதில்லை. ஆனால்,
இன்றைக்குத் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிதிருந்தாலும் பலர், வட
அமெரிக்கப் பாதுகாவலர்களாகவே தம்மை உணர்ந்து கொள்வதில்லையா? அது அதிலும்
மாற்றத்தை ஏற்படுத்துகின்றப் பணியை நுகர்விய வெறிப் பண்பாடு செய்து
முடிக்கும்.
Comments
Post a Comment