Skip to main content

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா?

 








(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – தொடர்ச்சி)

   க.  தமிழ் மக்களின் பேச்சிலும், எழுத்திலும் தமிழில்லை!

   உ. தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை!

   ௩. தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் பல தமிழில்       இல்லை!

   ௪. தமிழர் எழுதும் நூல்கள் தமிழில் முழுமையாக       எழுதப்பெறவில்லை.

   ரு. தமிழகப் பாடநூல் நிறுவனத்தார் முதல் வகுப்புக்குரிய       தமிழ்ப்பாட நூலில் வடமொழி ஒலியெழுத்துகளாம்        கிரந்த எழுத்துகளை (ஸ, ஷ, ஹ, ஜ, க்ஷ ) சேர்த்து,       வடமொழிச் சொற்களையும் பாடப்பகுதியில்       இணைத்து உள்ளனர். பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைக் கலக்கின்றனர்.

  ௬.  தமிழர் பலர், “மக்கள் மொழி” என்று ஒன்றை       உண்டாக்கித் தமிழைக் கொச்சையாக்குகின்றனர்.

   எ. தமிழ் எழுத்தாளர்கள் யாவரும் மக்கள் மொழியில் எழுதினால்தான் மக்(கு)களுக்குப் புரியும் என்று தங்களுக்குத் தெரிந்த மொழிச் சொற்களை எல்லாம்      கலந்து  எழுதி தமிழ்க்கொலை செய்கின்றனர்.

  அ. தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசு அலுவலகங்களில்   தமிழுக்கே இடமில்லை. இந்தியும், ஆங்கிலமுமே ஆட்சி புரிகின்றன.

    ௯. ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்று 43 ஆண்டுகளாகியும், தமிழ்நாட்டுக் கல்விக் கூடங்களில் ஆங்கிலத்திற்குத்தான் முதல் மதிப்பு. கற்பவர்களும்,      கற்பிப்பவர்களும் “சார், டீச்சர், ஸ்கூல், புக், டமில், பரிச்சை, எக்சாம், பிரசென்ட் சார், லேட், டைம்” போன்ற சொற்களையே இன்றும் பயன்படுத்துகின்றனர்.

  க0. தமிழ்நாட்டு நகரங்களில் தெருத்தொறும் ஆங்கில மழலையர் பள்ளிகள் நடைபெறுகின்றன. இடையிடையே இந்திப் பள்ளிகளும் இருக்கின்றன.

  கக. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், பிறரும் தம் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளிலும், இந்திப் பள்ளிகளிலும் சேர்த்துப் படிக்கச் செய்கின்றனர்.

 கஉ.  தமிழக அரசு ஊக்கத் தொகையளித்துங் கூடத் தமிழ்வழிப்பாடம் பயில முன்வருபவர் இலர்.

 க௩.  இந்திய அரசுப்பணிக்கு ஆட்கள் தெரிவு செய்யும்பொழுது இந்தி தெரியுமா? எனக்       கேட்கப்படுகிறது. இந்தி தெரிந்தவர்கட்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆகவே, தமிழர் இந்தி கற்க முந்துகின்றனர்.

 க௪.  இன்று லோக்சபா, ராஜ்யசபா, ராஜ்பவன், ராஷ்டிரபதி, பிரதமர், நேருகேந்த்ரா, நேருயோஸ்னா, நவோதயா, சர்வோதயா, ஜனதாதல், பாரதம், ஆகாஷ்வாணி,       ரஸ்தாரோகோ, ரூபாய், ஜிந்தாபாத், ராஜாஜி முதலான நூற்றுக்கும்    மேலான    இந்திச்    சொற்கள்  தமிழில் கலக்கப்பட்டுள்ளன. இந்தி மொழிச் சொல், ஆங்கில மொழிச் சொல் கலந்து பேசாத தமிழரே இலர்.

  கரு.. தமிழ்ப் பேராசிரியர் சிலர் தமிழில் வேற்றுமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ்மொழி வளரும் என்கின்றனர். இவர்கள் தமிழ்மொழியின் இயல்பறியாமையை என்னென்பது? மேலும், ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ  என்னும் எழுத்துகள் தமிழ்வடிவங்கள் என்று சொல்லி, அவற்றையும் தமிழ் எழுத்துகளுடன்  இணைத்துக் கொள்வது தமிழ்மொழிக்கு வளமூட்டும்   என்கின்றனர். என்னே இவர்தம் அறியாமை!

 க௬.  தமிழ்மொழியுடன் பண்டு வடமொழிச் சொற்களைக் கலந்தமையால் தமிழில் ‘மணிப்பவளநடை’ ஒன்று உருவானதையும், கன்னடம், களிதெலுங்கு,    கவின் மலையாளம், துளுவும் உண்டானமையும், இப்பேராசிரியர்கள் அறியார் போலும்!

 கஎ.  தொழில் நிறுவனங்கள், விளம்பரப்பலகைகளைத் தமிழில் எழுத வேண்டுமென்ற தமிழக அரசின் ஆணையை எதிர்த்து திரு.டி.தாயுமானசாமி, மதுரை, நாகர்கோயில் எசு. நடராசு போன்ற தமிழர்களும், பார்ப்பனர் செய்தித்தாள்களும் மறுத்து எழுதுகின்றன!    இது தமிழ்நாடு தானா? என்று ஐயம் எழுகின்றது.

  கஅ. வானொலி, தொலைக்காட்சிகள், திரைப்படம் பிடிப்பவர்கள் நாள்தோறும் தமிழைச் சீர்குலைக்கின்றனர்; கொச்சையாக்குகின்றனர்.

  க௯. தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூடத் தமிழ்க்குடிமகன் மகன் திருமணத்தின்போது தமிழ்க்குடிமகன் “Ice land” என்பதைப் பனித்தீவு   என்று தமிழில் சொன்னபோது கொக்கரக்கோ (Chica co) வுக்கு எப்பொழுது போகிறீர்? என்று நகுதல் செய்துளார்.

  உ0. “தமிழ்த் தெருவில் தமிழ்தானில்லை” என்று கவன்ற பாரதிதாசனுக்கு நூற்றாண்டு விழாவயரும் இந்நாளில் கூடத் தமிழர் தெருக்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் இல்லையே! எப்படி தமிழ்வளரும்?

  உக. தமிழில் புலமை பெற்ற தமிழ் இளையர்களுக்குத் தமிழ்நாட்டில் பணியமர்த்தம் கிடைப்பது அரிதாகிவிட்டது. பணம் கொடுப்பவர்கட்குத்தாம் பணி என்ற நிலை உருவாகிவிட்டது! எத்தனை பேர் நாற்பது, ஐம்பது ஆயிரம் கொடுக்கத்      தகுதியுடையவர்? எனவே, ஏன் தமிழ் படித்தோம் என்று ஏங்குகின்றனர் பலர்? இன்று தமிழ்நாட்டில், தமிழில் பண்டாரகர் (Doctor) பட்டம் பெற்றவர் இருநூற்றைம்பது பேர் பணியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் வாழ, வளர வேண்டுமென்றால், மேற்குறிப்பிட்டுள்ள சீர்கேடுகள் யாவும் களையப்படல் வேண்டும். இன்றைய தமிழக அரசு ஆவன செய்யுமா?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்