Skip to main content

உ.வே.சா.வின் என் சரித்திரம் : 126 : அத்தியாயம்-86 : விடுமுறை நிகழ்ச்சிகள்

      14 April 2025      கரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம்  125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை-தொடர்ச்சி)

விடுமுறை நிகழ்ச்சிகள்

திருவாவடுதுறையில் நான் இருந்த காலங்களில் அருகிலுள்ள ஊர்களில்

இருந்த செல்வர்கள் வீட்டுக் கலியாணங்களுக்கு மடத்தின் பிரதிநிதியாகச்

சென்று வருவேன். கலியாண தம்பதி களுக்கு வழங்கும்படி ஆதீன கர்த்தர் ஆடை முதலியன அளிப்பார். நான் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டு வருவேன். கல்லூரிக் கோடை விடுமுறைக் காலத்தில் திருவாவடுதுறையில் நான் தங்கியிருந்தபோது இத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. அந்த வருடம் மே மாதத்தில் கும்பகோணம் கல்லூரி ஆசிரியர் சிரீ சாது சேசையருடைய மூத்த குமாரிக்குக் கலியாணம் நடைபெற்றது. அதை மிக விமரிசையாக அவர் திருப்பாதிரிப்புலியூரில் நடத்தினார். சேசையர் மிக்க செல்வாக்குடையவராதலால் நீதிபதிகள், மாவட்ட முன்சீபுகள், தாசில்தார்கள் முதலிய பிரபல உத்தியோகத்தர்களும், பிரபுக்களும், பலவகையான வித்துவான்களும், பல கலாசாலை ஆசிரியர்களும் வந்து கூடினர். பதினாயிரம் உரூபாய்க்குமேல் செலவாயிற்று. அக்காலத்தில் அவ்வளவு தொகை செலவாயிற்று என்றால் கல்யாணம் எவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வேண்டுமென்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

கும்பகோணம் கல்லூரி ஆசிரியர்கள் யாவரும் கலியாணத்துக்குப் போயிருந்தனர். நானும் ஆசிரியனென்ற முறையிலும் திருவாவடுதுறை மடத்தின் சார்பாகவும் போயிருந்தேன். அதற்கு முன் அவ்வளவு கூட்டமுள்ள விவாகத்தை நான் எங்கும் பார்த்ததே இல்லை. திருப்பாதிரிப்புலியூரில் ஒரு பெரிய உற்சவம் நடப்பது போல ஊர் முழுவதும் கல கலப்பாக இருந்தது.

தக்க மனிதர்களெல்லாம் வந்திருக்கிறார்களென்று கேள்விப்பட்ட பலர் அவர்களைப் பார்ப்பதற்காகவே வந்து கூடினார்கள். சென்னையில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சர். டி. முத்துசாமி ஐயர் கலியாணம் விசாரிக்க வரப் போகிறாரென்ற பேச்சு வேறு இருந்தது. அந்தப் பெரியாருடைய புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்த காலம் அது. அவரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் அங்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தது. கலியாணத்தின் ஐந்தாம் நாள் அவர் வருவதாகத் தெரிந்தது. அதனால் முன்பே விடைபெற்றுக் கொண்டு போவதாக உத்தேசித்திருந்த பலர் முத்துசாமி ஐயரைப் பார்ப்பதற்காகவே தங்கி விட்டனர்.

கலியாணத்தில் ஒரு நாள் மாலை நானும் ஆசிரியர்கள் சிலரும் கெடில நதியை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது எதிரே ஒரு முதிய பிராமணர் விபூதி உருத்திராட்சதாரியாக வந்து கொண்டிருந்தார். நாங்கள் ஒரு கூட்டமாய்ப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர் சிறிது நின்று கையைக் கண்ணின் மேல் கவித்து நிமிர்ந்து எங்களைக் கவனித்தார். எங்களுடன் வந்த ஆசிரியர்களுள் கும்பகோணம் வாணாதுறையில் இருந்த காளி நாராயணசாமி ஐயரென்பவர் ஒருவர். அவர் உற்சாகமாகவும் வேடிக்கையாகவும் பேசுபவர். அவர் அந்தக் கிழவரைப் பார்த்து, “என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஒன்றும் இல்லை. நீங்களெல்லாம் சேசப்பா வீட்டுக் கல்யாணத்துக்கா வந்திருக்கிறீர்கள்? இந்த இராசதானி முழுவதிலிருந்தும் சனங்கள் வந்திருக்கிறார்களே! நீங்களெல்லாம் எந்த ஊர்க்காரர்கள்? என்ன உத்தியோகம் பார்க்கிறீர்கள்?” என்றார் கிழவர்.

“நாங்களெல்லாம் கும்பகோணம் பள்ளிக்கூட உபாத்தியாயர்கள். அந்தக் கலியாணத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என்று பதில் உரைத்தார் நாராயணசாமி ஐயர்.

அவர் ஒவ்வொருவராகச் சுட்டி அவரவருடைய ஊர், பேர், சம்பளம் ஆகியவற்றைப் பற்றி விசாரித்து வந்தார். ஒவ்வொருவரும் நூறு, இருநூறு, முந்நூறு என்று தங்கள் சம்பளங்களைச் சொன்ன போது அவருக்கு ஒரே பிரமிப்பாய்ப் போய் விட்டது. “என்ன! பள்ளிக்கூடத்து வாத்தியாருக்கு இவ்வளவு சம்பளமா? எங்கள் காலத்திலெல்லாம் நாலு ஐந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்; பத்து ரூபாய் கிடைத்தால் அது குபேர சம்பத்துக்குச் சமானம்.”

கிழவர் கிராமத்திலுள்ள திண்ணைப் பள்ளிக்கூட உபாத்தியாயர்களையும் எங்களையும் ஒரு வரிசையில் வைத்து எண்ணினாரென்று தெரிந்தது. எல்லாரும் பள்ளிக்கூட வாத்தியார்களல்லவா? அவர் பின்னும் தம்முடைய வியப்பைத் தெரிவிக்கலானார்.

“வெள்ளைக்காரர்கள் நூறு இருநூறென்று பணத்தை அள்ளிவிடுகிறார்கள். உங்களுக்கும் அதிர்ட்டம் இருக்கிறது. மாசம் மாசம் கை நிறையச் சம்பளம் வாங்குவதை இப்போதுதான் பார்க்கிறேன். சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால்,,,,” கிழவர் மேலே பேசாமல் நிறுத்தினார். தாம் சொல்ல வந்ததைச் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்ததாகத் தெரிந்தது.

“என்னவோ சொல்ல வந்தீர்களே; ஏன் நிறுத்தி விட்டீர்கள்?” என்று நாராயணசாமி ஐயர் கேட்டார்.

அதற்குள் அந்தக் கிழவருக்குப் பேசி வந்த பேச்சின் தொடர்பு அறுந்துவிட்டது. அந்தக் கூட்டத்தில் இருந்த நான் அவர் கண்ணில் பட்டேன். பேச்சு என்னைப் பற்றித் திரும்பியது, “இந்தப் பிள்ளை யாண்டான் யார்? உங்கள் பள்ளிக்கூடத்தில் வாசிக்கிறானா?” என்று கேட்டார்.

“இவரும் ஓர் உபாத்தியாயர்.”

அவருக்கு எல்லாவற்றையும் மிஞ்சிய ஆச்சரியம் உண்டாயிற்று. “என்ன! இந்தச் சிறு பிள்ளையா வாத்தியார்! என்ன சம்பளம்?”

“ஐம்பது ரூபாய்” என்று அழுத்தமான தொனியோடு நாராயணசாமி ஐயர் சொன்னார்.

“அப்படியா? எல்லாம் தெய்வத்தின் கிருபை,,,,,என்னவோ சொல்ல வந்தேனே” என்று மறுபடியும் விட்ட இடத்தைத் தொட்டுக்கொண்டார் கிழவர்.

“இந்தமாதிரி சம்பளம் கிடைக்கிறதே; எல்லாம் ஈசுவரன் கொடுத்தது என்று தெரிந்துகொண்டு தெய்வ பக்தி பண்ணுகிறார்களா? அதுதான் இல்லை. அனுட்டானம் செய்கிறார்களா? அதேது? வெள்ளைக்காரர்களிடம் சம்பளம் வாங்கினால் இவர்களும் தங்களை வெள்ளைக்காரர்களாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்.”

“எங்களைக்கூட அந்த வருக்கத்தில் சேர்த்து விட்டீர்களோ! நாங்கள் இப்போது கெடிலத்திற்குத்தான் போகிறோம்” என்று சிரித்துக்கொண்டே நாராயணசாமி ஐயர் சொன்னார்.

“ஓகோ, சந்தியாவந்தனம் பண்ணப் போகிறீர்களா? நல்லதுதான். என்ன இருந்தாலும் நம் தேசத்துப் பழக்க வழக்கங்களே நமக்கு மேன்மையானவை. அவறறைப் பாதுகாக்க வேண்டியது நமது தருமம்.”

இவ்வாறு உபதேசம் செய்து விட்டு எங்கள் சந்தியாவந்தனந்திற்கு அகாலமாகி விடுமென்ற பயத்தால் அந்தக் கிழவர் விடை பெற்றுக்கொண்டு சென்றார். எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் இனிமையாக இருந்தன. தெய்வ பக்தியும் மதாசாரங்களைத் தவறாமல் அனுசுட்டிக்கும் இயல்பும் உடையவர்களோடே பழகி வந்த எனக்கு அந்தக் கிழவருடைய உபதேசம் மதிப்புடையதாகவே தோற்றியது.

கலியாணத்தின் ஐந்தாம் நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு முத்துசாமி ஐயர் சென்னையிலிருந்து திருப்பாதிரிப்புலியூருக்கு வந்தார். சாது சேசையர் இரெயில்வே நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றுத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். முத்துசாமி ஐயர் வந்து கலியாணத்திற்காகப் போட்டிருந்த பெரிய பந்தலின் நடுவே ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு அருகில் சேசையரும் வேறு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

ஊர் முழுவதும் பந்தலிலும் பந்தலைச் சுற்றிலும் கூடி விட்டது. அவ்வளவு கூட்டம் இருந்தாலும் எல்லாரும் அமைதியாக இருந்தனர். படாடோபமற்ற முத்துசாமி ஐயர் தோற்றத்தில் ஒருவகையான கவர்ச்சி இருந்தது. வெள்ளைத் தலைப்பாகை, நெடுஞ்சட்டை, ஐயம்பேட்டைப் பட்டுருமாலை. தூய வெள்ளை வத்திரம், காலில் ‘பாபாசு சோடு’- இவையே அவர் அணிந்திருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார்.

இந்தியர்களுக்குக் கிடைக்காத உயர்ந்த பதவியிலே இருந்த அவருடைய ஆங்கிலப் பயிற்சியும், மேதையும், சட்ட ஞானமும் உலகம் அறிந்தவை. அவர் வெள்ளைக்காரர் சம்பளத்தைப் பெறுவது மட்டுமன்றி வெள்ளைக்காரரோடு நெருங்கிப் பழகுபவர். ஆனாலும், அவர் தோற்றத்திலும் பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் ஆசாரத்திலும் இந்துவாகவே இருந்தார். அவருடைய நெற்றியில் விளங்கிய விபூதியும் சந்தனமும் இடையிலிருந்த பஞ்சகச்ச வேட்டியும் அவர் பேச்சில் தொனித்த அடக்கமும் அவருடைய பெருமைக்குப் பின்னும் பெருமையையே உண்டாக்கின. முதல் நாள் மாலையில் எங்களோடு பேசிய கிழவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ஞாபகத்துக்கு வந்தன. “அவர் முத்துசாமி ஐயரைக் கண்டால் எவ்வளவு சந்தோசமடைவார்” என்று சிந்தித்தேன்.

முத்துசாமி ஐயர் பேசிக் கொண்டிருந்தபோது இடையே ஒரு திருக்குறளைச் சொன்னார். அவர் தமிழில் அன்புடையவரென்பதை அப்போது அறிந்து கொண்டேன். அவர் சுருக்கமாகப் பேசினார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திருக்குறளை உதாரணமாக எடுத்துச் சொன்னார். இவையாவும் என் மனத்தில் நன்றாகப் பதிந்தன. அவர் அன்று இரவு அங்கே விருந்துணவு உண்டு விடை பெற்று மாயூரம் சென்றார்.

கலியாணம் நிறைவேறியது. வந்திருந்தவர்கள் யாவரும் விடை பெற்றுச் சென்றனர். நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்து கலியாண விசேடங்களையும், சர் டி. முத்துசாமி ஐயர் வந்து சென்ற வைபவத்தையும், அவரைப் பார்த்த சில மணிகளில் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டவற்றையும் சுப்பிரமணிய தேசிகர் முதலியவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தேன். அன்று முழுவதும் முத்துசாமி ஐயருடைய இளமைப் பருவம், அவர் படித்து முன்னுக்கு வந்த வரலாறு அவருடைய புகழ் முதலியவற்றைப் பற்றிப் பேசுவதிலேயே பொழுது போயிற்று.

அந்தக் காலத்தில் கல்லூரி வகுப்புக்களுக்குத் தமிழ்ப் பாடம் வைக்கும் முறை மிக விசித்திரமானது. பேர் மாத்திரம் தெரிந்த நூலிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியைப் பாடமாக வைத்து விடுவார்கள். ஏட்டுச் சுவடியைத் தேடியெடுத்து உள்ளது உள்ளபடியே யாரேனும் பதிப்பிப்பார்கள். அதை வைத்துக் கொண்டு தெரிந்ததோ தெரியாததோ எல்லாவற்றையும் குழப்பித் தமிழாசிரியர்கள் பாடம் சொல்லுவார்கள். சிலப்பதிகாரம் பழைய நூலென்பது மாத்திரம் அக்காலத்தில் தெரிந்திருந்தது. நூலைத் தெரிந்து கொள்ளுவதைவிட நூலின் சிறப்பைத் தெரிந்து கொள்ளுவது சுலபம். ஆதலின் அதன் சிறப்பைத் தெரிந்தவர்கள் அதிற் சில பகுதிகளைப் பாடம் வைக்கத் தொடங்கினர்.

தியாகராச செட்டியார் கல்லூரியில் இருந்த காலத்தில் சிலப்பதிகாரத்திலுள்ள இந்திர விழவூரெடுத்த காதை பாடமாக வந்தது. ஏட்டுச் சுவடியை வைத்துக் கொண்டு அதை அவர் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிள்ளையவர்களிடம் சென்று இருவரும் சேர்ந்து பார்த்தார்கள். புத்தகத்தில் பல காலமாக ஏறியிருந்த பிழைகளுக்கு நடுவே உண்மையான பாடத்தை அறிவதே பிரும்மப் பிரயத்தனமாக இருந்தது. அன்றியும் மிகப் பழங் காலத்து மரபுகளெல்லாம் சொல்லப் பட்டுள்ள அந்நூலிலிருக்கும் விடயங்களைத் தெரிந்துகொள்ள வேறு துணைக் கருவிகள் இல்லை. அதனால் அந்தப் பகுதி தெளிவாக விளங்கவில்லை. செட்டியாருக்குப் புத்தகத்தின் மேல் கோபம் மூண்டது. “என்ன புத்தகம் இது? இந்திர விழவூரெடுத்த காதையா? இந்திர இழவூரெடுத்த காதையா!” என்று கூறி, “இந்தச் சனியனை நான் பாடம் சொல்லப் போவதில்லை; எனக்கு உடம்பு வேறு அசௌக்கியமாக இருக்கிறது. நான் ஆறு மாசம் ‘விடுமுறை’ வாங்கிக் கொள்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டார். அப்படியே ஆறு மாதம் விடுமுறை பெற்றுப் பிறகே கல்லூரிக்கு வந்தார். அக்காலத்தில் சந்திரசேகர கவிராச பண்டிதர் தமிழாசிரியராக இருந்து பாடத்தை நடத்தினார்; கற்பித் தாரென்று சொல்லுவதற்கில்லை.

இப்படித் தியாகராச செட்டியாரே சிரமப்பட்டபோது மற்றப் பண்டிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எப்போது பாடமாக வந்து விட்டதோ உடனே புத்தகப் பதிப்பும் வந்து விடும். சிலப்பதிகாரத்தின் முற்பகுதியை சிரீநிவாசராகவாசாரியரும் சென்னையிலிருந்த சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் பதிப்பித்திருந்தனர். முதல் வெளியீடு சிரீநிவாச ராகவாசாரியருடையதே. புகார்க் காண்டத்தின் முற்பகுதியின் மூலம் மாத்திரம் இருந்தது. “சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்” என்று அவர் முகப்புப் பக்கத்தில் பதிப்பித்திருந்தார்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்