Skip to main content

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 26 : புலவர் கா.கோவிந்தன்: சேர, சோழ, பாண்டிய அரசுகள்

 




(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 25 : காத்தியாயனரும் பதஞ்சலியும் – தொடர்ச்சி)

இதைப் பண்டைக் காலத்திய மதுரை பற்றிய நாம் அறிந்தனவற்றோடு ஒன்றுபடுத்திக் காணும் முயற்சியில், வெற்றி காணமாட்டாதே, அறிவுத்திறன் பெருமளவில் பாழ்படுத்தப்பட்டது. முன்பே குறிப்பிடப்பட்ட எறும்பு மனிதர் பற்றிய, அவருடைய வேறு ஒரு கட்டுக்கதை போல (Macrindle. Ancient India as described by Megasthenes and Arrian. Page : 144) இது, மெகத்தனிசு அவர்களின், எதையும் நம்பும் ஏமாளித்தனத்தை உறுதி செய்யும் மற்றொரு கட்டுக்கதை யல்லது வேறு அன்று. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்த, கி.மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டிற்கும் பாடலிபுத்திரத்திற்கும் இடையில், போக்குவரவு இருந்து வந்தது. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்த, கி.மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டிற்கும் பாடலிபுத்திரத்திற்கும் இடையில், போக்குவரவு இருந்து வந்தது. மெகத்தனிசு, அந்நாட்டைக் கேட்டறிந்திருந்தார், என்ற உண்மையை மட்டுமே, அக்கட்டுக் கதை உறுதி செய்யும். உண்மை நிலை இதுவாகவும், திரு. டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள், எராக்லெசின் மகள் மதுரை ஆண்ட கட்டுக்கதையினை நம்புவது மட்டும் அல்லாமல், இந்தியக் கடவுள் இயல்புகளோடு முற்றிலும் – மாறுபடும் தியொனிசொசு’, ‘எராக்லெசு” போலும் கிரேக்கக் கடவுள்களுக்குச் சரிசமமாக, இந்தியக் கடவுள்களை, யூகத்தின் மூலம், எத்தகைய அகச்சான்றும் இல்லாமல், ஆக்க முயன்று தோற்றுப்போன ஆசிரியர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வதும் செய்துள்ளார். கிருட்டிணனின் குழலிலிருந்து எழும், உள்ளம் உருக்கும் இசை, எரக்லெஸின், பருத்த கைத்தடித் தத்துவத்திற்கு எதிர் துருவம் போன்றதாகவும் திரு. பந்தர்க்கார், கிருட்டிணனை எரெக்லெசுக்குச் சரிசமம் ஆக்கிப் பார்க்கிறார். மெகத்த னிசு, முட்டாள்தனத்தின் முடிவுக்கே சென்று, மத்திய தேசத்தில் இருந்தவனாக கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமியிரரால் உறுதி செய்யப்பெறும் பாண்டசு . என்பான் அவ்வராகமிகிரரின் காலத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்கு, ஒரு பேரரசர் மரபினையும், குறுநிலத் தலைவர் மரபினையும் நிறுவினான் என்பதை இன்னமும் நம்புகிறார், இஃது ஒரு வஞ்சனைக் கற்பனை!

தமிழர்களால் எப்போதும் மூவேந்தர் என அழைக்கப்படும் சோழ, சேர, பாண்டியர் ஆகிய தமிழ் அரசர் மூவரும் உலகம் தோன்றிய நாள்தொட்டு, அல்லது, சரியாகக் கூறுவதாயின், தமிழ்ப்புலவர்கள் தமிழரசர்களைப் பாடிப் பாராட்டத் தொடங்கிய நாளிலிருந்தே, தமிழ் நாட்டில் அரசோச்சியிருந்தனர் என்பதே, வரலாற்றுக்கு முந்திய மரபு வழிச் செய்தியாம், பல்வேறு அரசகுலங்களைத் தோற்றுவித்ததாகக் கூறப்படும் ஞாயிறு, திங்கள்களிலிருந்து தாங்கள் வந்தவர்களாக உரிமை கொள்ளுமாறு மிகமிகப் பிற்பட்ட காலத்தில், தமிழரசர்களைப் பிராமணர்கள் தூண்டிவிட்டனர். அந்நிலையிலும், அவர்கள் வேற்று மண்ணுக்கு உரியவர்களாகக் கருதப்படாமல், தமிழ்நாட்டு அரசர்களாகவே மதிக்கப்பட்டனர். மேலும், சோழர், சேர, பாண்டியர் என்ற சொற்கள், தமிழ்ப் பழங்குடிப் பெயர்களாம். காவிரிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்து, அந்நிலத்துக்குரியதாம் ஆத்திமலரைத் தங்கள் குலச்சின்னமாகக் கொண்ட சோழர் உழவர்களாம் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவராவர். காவிரிப் பேராற்றின் துணை நதிகளின் தோன்றுமிடம் தொடங்கி, தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை வரையான, தன் மண்ணுக்குரிய மரமாகப் பனையைக் கொண்டிருக்கும், மலைநாட்டு மக்களாம் குறவர் இனத்தைச் சேர்ந்தவர் சேரர், பனையைத்தங்கள் அடையாளமாகக் கொண்டிருந்தனர். பாண்டியர், வேம்பினைத் தன் மண்ணுக்குரிய மரமாகவும், மீன்பிடி தொழிலைக் குலத்தொழிலாகவும் கொண்ட, இந்தியாவின் தென்கோடி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களாம் பரதவர் இனத்தவர் ஆவர். கயலும், வேம்பும் அவர்கள் குல அடையாளங்களாம். இன்றைய குறவர், பண்டைக் குறவரினும், நிலையால் தாழ்ந்துவிட்ட வழிவந்தவராதல் வேண்டும்) (பழந்தமிழ் இலக்கியங்களில், பரதவர் என்ற சொல், கடலோடிகள் மற்றும் பாண்டி நாட்டுத் தலைவர்கள் என்ற இரு பொருளும் உடையதாகும். உ.ம்: “தென்பரதவர் மிடல்சாய’’ (புறம்: 378-7)” தென் பரதவர் பேரேறே” (மதுரைக் காஞ்சி : 144) இப்பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களும், தொழில்களும், அவர்கள் வாழ்ந்த சுற்றுச் சூழல், அவர்கள் மீது செலுத்திய ஆட்சியின் நேரிடைப் பயனாம். ஆகவே, அவர் தம் இயல்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு வெளியே உள்ள ஓர் இடத்திலிருந்து வந்தவர்களாக அவர்களைக் கொண்டு வரக் காட்டும் கற்பனை மாடங்கள் அனைத்தும், நேர்மைக்கு மாறான காரணங்களின் எடுத்துக்காட்டுக்களாம்.

கி.மு. 400 அளவில், மகாபத்தும நந்தன், மகதத்தின் அரசன் ஆனான். அவன் சத்திரியர்கள் அனைவரையும் பூண்டோடு அழித்துவிட்டான். அவன் காலத்திற்குப் பிறகு சூத்திரர் வழிவந்தவரே, நாட்டில் சிறந்தோங்கியிருந்தனர். அவன் இந்தியா முழுமைக்குமான தனி அரசன் ஆனான். பேரரசின் ஒரே வெற்றிக் கொடைக்கு உரியவன் ஆனான். (சர்வ சத்ராந்த கொன் பஃக் தஃக் ப்ரப்ற்தி ராசானொ, ப்ஃகவிசுயஃக் சூத்ர யொனயஃக் எகராத் ச மகாபத்ம எகச்ஃகத்ர ஃக்’) (Pargiter : Dynasties of Kali Age : Page 25) அந்நாள் முதல், மகத அரசர்கள், ஆரிய நாகரீகத்திற்கு அந்நாள் வரை அடிமைப்படாத மக்கள் வாழ்ந்திருந்த தமிழ்நாடு தவிர்த்த இந்தியப் பெருநிலப்பரப்பு முழுமைக்கும் தனிப்பேரரசர்களாக உரிமை கொண்டனர். தம் உரிமையை நிலைநாட்ட, தட்சிண பாரதத்தின் மீது மேற்கொண்ட படையெடுப்பு எதையும் கேட்டிலம் ஆதலின், மகதப் பேரரசின் தனி ஆட்சி உண்மை , அசோகன் இறக்கும் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. கலிங்கத்தில், நந்தர்களால், ஒரு பாசனக்கால்வாய் வெட்டப்பட்டிருந்தது . ஆதலின், ஏனைய மாநிலங்களோடு கலிங்கமும், மகத அரசின் கீழ் இருந்தது. ஆகவே, அசோகன், கலிங்கத்தின் மேற்கொண்ட போர், உள்நாட்டுக் கலவரம் காரணமாகவே ஆதல் வேண்டும். அசோகன் அரச ஆணையின் கல்வெட்டுப் படிகள், ஏனைய இடங்களோடு, மைசூர் நாட்டைச் சேர்ந்த சித்தபுரம், சதிங்க ராமேசுவரம், பிரம்மகிரியிலும், நைசாம் மாநிலத்தில் உள்ள மசுக்கியிலும், நன்மிக அண்மைக் காலத்தில் கருனூல் மாவட்டத்திலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது, வடநாட்டுத் தலையாய உள்நாட்டு மொழி, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், தமிழ்நாடு நீங்கிய தென்னிந்தியர்களால் பொருள் உணரப்பட்டிருந்தது – என்பதையே உணர்த்துகிறது. (இன்று, அடிப்படையில் ஒன்றாகவே கருதப்படும் இந்துத்தானி அல்லது இந்தி அல்லது உருது இந்தியாவின் பெரும்பகுதியில் பொருள் உணரப்படுகிறது. இது, வழக்கமாக நம்புவது போல் முகம்மதிய சுல்தான்களின் ஆட்சியால் நேர்ந்தது அன்று. மாறாக, வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில், பல நூறு ஆண்டுகாலமாக இருந்து வந்த, வாணிகம், சமயம், இலக்கியம் ஆகிய துறைகளிலான தொடர்பே காரணமாம்) அவ்வரச ஆணைகள், புலமை சான்றவர்க்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டவை அன்று. அதுவாயின், அவை சமற்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது என உய்த்துணர்ந்து கொள்ளலாம். எழுத்தைப் பொறுத்தமட்டில், அசோகன் எழுத்துகள் எனப்படும் அதே எழுத்துகள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டது. பண்டைக் காலத்தில் வட இந்தியா, தென்னிந்தியாவுக் கிடையேயான போக்குவரவு பெரிதாம். அப்போக்குவரவு, மகாபத்மநந்தன் நாடு முழுமைக்குமான ஒரே அரசன் (ஏகராட்) ஆகிவிட்டான். மகதம் பெற்றிருந்த இவ்வாட்சி மேலாண்மை, மெளரியப் பேரரசர் காலத்தும் தொடர்ந்து இருந்து வந்தது என்ற உண்மை நிகழ்ச்சிகளால், மேலும் பெருகிவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்