Skip to main content

தமிழர் பண்பாடு- தொடர்ச்சி: புலவர் கா.கோவிந்தன்

 




(தமிழர் பண்பாடு – புலவர் கா.கோவிந்தன், தொடர்ச்சி)

குறிஞ்சியில் ஒருபால் மக்கள் தொகை பெருகிவிட, மற்றொருபால் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் வழங்கல், குறையத் தொடங்கிய போது, அம்மக்கள், அடுத்த நிலப் பகுதியாகிய காட்டுநிலமாம் முல்லைக்குக் குடிபெயர்ந்தனர். அக்காலக் கட்டத்தில் எருமை, பசு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களையும், குறவர் வாழ்வில் பண்டே பழக்கப்பட்டு, வேட்டை ஆடுவார்க்குப் பெரிதும் பயன்பட்ட நாயையும் வளர்த்துப் பயன்கொள்வதாய, மனித நாகரீக முன்னேற்றத்தின் அடுத்த பெருநிலையை எட்டிப் பிடித்தனர்.

இது, மனித வாழ்க்கை முன்னேற்றமாம், ஏணியில் இரண்டாம் படிக்கு, அஃதாவது மேய்ச்சல் நாகரீகத்திற்குக் , கொண்டு சென்றது. முல்லையில், கால்நடைகள், விரைவாகப் பெருகின. பழங்குடி வாழ்விலிருந்து, குடும்ப வாழ்வுமுறை முகிழ்த்ததற்கு, எந்தத் தனியுடைமை தத்துவமுறை துணை செய்ததோ, அத்தத்துவமுறை, கால்நடைச் செல்வப் பெருக்கால் உருப்பெறலாயிற்று.

முதல் காட்சியிலேயே காதலர் ஒன்றுபடுதல், திருமணச் சடங்குகளால் கட்டுப்படுத்தப்படாமை, புலிப்பல் தாலியையும், இடையில் அணிந்து கொள்ளத் தைத்த தழை ஆடையையும் அளிப்பது ஒன்றினாலேயே திருமணம் முறைப்படுத்தப்படுதலாய், இயற்கை வழித்திருமணம் என அழைக்கப்பட்ட பழங்கால மணமுறை, பழந்தமிழ் இலக்கியங்களில் களவு என அழைக்கப்பட்டது. அது மேய்ச்சல் நிலப்பகுதியாம் முல்லையில், காதலர் ஒன்றுபடுவதற்கு முன்னர், திருமணச் சடங்குகள் இடம்பெற வேண்டுவதான கற்பு எனும் வடிவில் மெல்ல மெல்ல மாற்றி அமைக்கப்பட்டது. காதலர் இருவரையும் ஒன்றுபடுத்துவது, நிகழ்வதற்கு முன்னர், மலர்களாலும் இலைகளாலும் அழகு செய்யப்பட்டதும் ஆயர்களின் இயல்பான குடியிருப்பாவதுமாகிய பந்தலின் கீழ், அப்பழங்குடி ஆயர் மகளிர் ஆகிய அனைவர்க்கும் விருந்தளிக்கும் நிகழச்சியே திருமணச் சடங்கு முறையில் சிறப்பான பகுதியாம். குடும்பத்தந்தை, கணக்கின்றிப் பெருகும் கால்நடைகளை உடையவராகி, அக்கால்நடைச் செல்வம் வழங்கும் பெருஞ்செல்வாக்கினைப் பெற்றுவிடுவதால், கற்பு என்ற அத்திருமண முறையும், தனியுடைமை முறை வளர்ச்சியும், குடும்பத் தலைமை ஆடவர்க்காம் சமுதாய மறுமலர்ச்சி முறைக்கு வழிவகுத்துவிட்டன.

சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்நிலங்கள், கால்நடை மந்தை ஒன்றைப் பேணுவதற்குப் போதுமானதாக ஆகாது போமளவு சிறுத்துவிடும் ஆதலாலும், பழங்குடி யினர் பல்வேறு உட்பிரிவினராகப் பிரிவுண்டதனாலான குடும்பம், அக்குடும்பத்தவர் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே . குழுவாக ஆக்கப்பட்டால்தான், போட்டிகளைக் கடந்து நிலைபெற்று நிற்கும் ஆதலாலும், கூட்டுக்குடும்ப முறை தோன்றலாயிற்று. பெரிய குடும்பத்தின் தலைவனாக இருந்தவன், அரசனாக நிலை உயர்வு பெற்றான். தமிழ்மொழியில் அரசனைக்குறிக்க வழங்கும் கோன் என்ற சொல், ஆயர் மகன் எனும் பொருள்படும். அதுபோலவே அரசியைக் குறிக்கும் ஆய்ச்சி என்ற சொல் ஆயர் மகள் எனும் பொருள்படும் என்ற உண்மை நிலையால், தமிழ்நாட்டில் முதன்முதலில், முல்லையில், கால்நடை மேய்ப்பாளராகிய ஆயரிடையேதான், அரசு முறை தோன்றிற்று என்பது தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு விட்டது. கோன் என்ற சொல், ஆயர்களின் அடையாளச் சின்னமாம் கைத்தடியைக் குறிக்கும் கோல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகத் தெரிகிறது. அரச ஆணையின் சின்னமாகிவிட்ட அரசர்கைச் செங்கோல் ஆடுமாடுகளை மேய்க்க உதவும் வெறும் கோலே ஆகும்.

மத்திய ஆசிய அடுக்குகளில் உள்ளது போன்ற, இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாடுகளின் கால்நடை மேய்ப்பு வாழ்க்கை, தென்னிந்திய மேய்ப்பாளரிடம் முல்லை நிலத்து ஆயர் வாழ்க்கையிலிருந்து, கூடாரங்களைப் பயன் கொள்ளுதல், ஒரு மேய் நிலப்பகுதியிலிருந்து பிறிதொரு மேய்நிலப் பகுதிக்கு எனக் கால்நடை மேய்க்கும் பழங்குடியினர் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டே இருத்தல் ஆகிய இரு நிலைகளின் வேறுபடுகிறது.

ஆண்டு முழுதும், தட்பவெப்பநிலை ஒரே சீராக இருப்பதால் தென்னிந்தியாவில், கூடாரங்களின் கண்டுபிடிப்பு தேவையற்றதாகிறது. உடைந்த பானை ஓடு மூடப்பட்ட மூங்கில் கற்களால் முட்டு கொடுக்கப்பட்ட உலர்ந்த கொம்புகளாலான பந்தல் மீது, வேயப்பட்ட விசிறி வடிவிலான ஒரு சில பனை ஓலைகள், ஒரு மனிதனுக்கும் அவன் கால்நடைக்கும் காப்பளிக்கப் போதுமானதாக நிரூபிக்கப்பட்டுவிட்டன. நிலத்தின் வளமும், காலந்தோறும் பெய்யும் பருவமழையும், ஆண்டுக்கு ஒரே நிலத்தில் புல் பூண்டு விளைவை உறுதிசெய்தன. ஆகவே, வடக்கத்திய அடுக்குகளில் உள்ளதுபோல், ஒரு குடியிருப்பைச் சூழ இருந்த புல், கால்நடைகளால் மேயப்பட்டு விட்ட போதோ, கோடை ஞாயிற்றால் எரிக்கப்பட்டுவிட்ட போதோ, கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு புதிய மேய்ச்சலிடம் தேடிச் செல்ல வேண்டியது தேவையற்றதாகி விட்டது. ஆகவே தென்னிந்திய கால்நடை வளர்ப்பு வாழ்க்கை அரைகுறையான நாடோடி வாழ்க்கையன்று. அது நாகரீக வசதிகளை வளர்த்துக் கொள்ள வல்லதான நிரந்தர வாழ்க்கையாம். காட்டில் கால்நடைகளின் ஓய்வுநிலை அளித்த அமைதி வாழ்க்கை , குழல் எனும் இசைக்கருவியைக் காண வழிவகுத்தது. நீளவாட்டில் ஒரு சில துளைகள் இடப்பட்ட சிறுமூங்கில் துண்டே குழல். கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்க, நீண்ட நெடுநேரம் காத்திருப்பதால் ஏற்படும் ஆயரின் மனச்சோர்வைப் போக்கவல்ல இனிய இசை அதினின்றும் எழும்.

ஆயர்களின் ஒரு பிரிவினராகிய குறும்பர் என்பார், ஆடுகளில் குறுகிய கால்களும் உடல் முழுவதும் அடர்ந்து நீண்ட மயிரும் உடைய இனமாம் குறும்பாடுகளை வளர்த்து வந்தனர். முல்லை நிலத்தில், இன்று நீராவி இயந்திரங்கள் கட்டுப்பாடின்றி நிறுவப்பட்டு, விசைத்தறிகள் மூலம் கம்பளி நெய்யப்படுதல், ஏனைய கைவினைஞர்களைப் போலவே, குறும்பர்களின் அன்றாட வாழ்க்கைக்காம் உணவினைப் பெறும் ஆண்டாண்டு கால வழிமுறையினை இழக்கச் செய்துவிட்டது. என்றாலும், குறும்பர், தங்கள் ஆடுகள் அளிக்கும் மயிரிலிருந்து கம்பளி நெய்யக் கற்றிருந்தனர். சென்னை மாநிலத்தின் முல்லைப்பகுதிகளில் இன்றும் குடிவாழ்ந்து கொண்டு தங்கள் இனம் வழிவழி மேற்கொண்டு வந்த குலத்தொழிலாம் கம்பளி நெசவை மேற் கொண்டுள்ளனர்.

மக்கள், அடுத்துக் குடியேறிய இடம், கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல். உயிர்பெற்று விட்டது போல் ஓங்கி எழுந்து ஓய்ந்து அடங்கும் அலை ஓயாக்கடலின் பெருநீர்ப்பரப்பு, தாம் அளிக்கவல்ல பேரிடர்ப்பாடுகள் பால் காதல் கொண்டு, உண்டற்கினிய மீனாம், என்றும் குறையற்றுப் போகாத தன் பெரும் செல்வத்தை வாரிக் கொண்டு வரத்துணிந்து தொழில் படுமாறு பரந்த அகன்ற மார்பும் அழகுறச் செதுக்கி வைத்தாற்போலும் சதைப் பிடிப்பும் கொண்டு, வீரச்செயல் விரும்பும் மீனவர்களுக்கு அழைப்பு விடுத்தது. கடலோரத்தில் மீன் பிடிப்பதிலிருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். கடற்கரைச் சூழல், அங்கு வாழ்பவராகிய பரதவர்களைப், படகு கட்டுவோராகவும், மீனவர்களாகவும் ஆக்கிவிட்டது. மிதப்பதற்கு ஏற்ப, ஒன்றாக இணைக்கப்பட்ட பருத்து நீண்ட இரு மரத்துண்டுகளால் ஆன, பழங்காலத் தெப்பங்களே, முதன்முதலாகக் கண்ட படகுகளாம். பிரம்பினால் பின்னப்பட்டுக் கடல், விலங்கின் தோலால் மூடப்பட்ட கூடையாம் தோணி, அல்லது பரிசில் அடுத்து இடம் பெற்றது.

இந்நிலத்து முக்கிய விளைபொருள்கள் மீனும், உப்பும் ஆம். பரதவர் அவற்றை அகநாடுகளுக்குக் கொண்டுசென்று, பிற உணவுப் பொருள்களுக்காகப் பண்டமாற்று முறையில் தரவேண்டியதாயிற்று, அவர்களின் இச்சுற்றுச்சூழல், பரதவர்களை வணிகர்களாக ஆக்கிற்று. அப்பரதவர் அவர்களின் வழிவந்தவராய, இன்றைய பலிசிகளைப் போலவே தங்கள் விற்பனைப் பொருள்களை, இரட்டை மூட்டைகளாகக் கட்டிப் பொதி எருதுகளின் முதுகுகளில் ஏற்றிக் கொண்டு சதுப்புநிலப்பாதைகளை வருந்திக் கடந்து, ஆற்றுப்பாய்ச்சலால் வளம் பெற்ற நாட்டு விளைபொருட்களுக்காக மாற்றுப் பண்டமாகக் கொடுப்பர். இப்பரதவர். குடியிலிருந்தே மேற்கே ஆப்பிரிக்க, அராபிய நாடுகளுக்கும், கிழக்கே மலாய், சீன நாடுகளுக்கும், இந்திய வணிகப் பொருள்களைப் படகுகளில் கொண்டு சென்ற பண்டைய இந்திய மாலுமிகள் தோன்றினர்.

முல்லைக்கும் நெய்தலுக்கும் இடைப்பட்ட, தாழ்வான சமவெளியாம் மருதமே, மக்கள், இறுதியாகக் குடிவாழத் தொடங்கிய நிலப்பகுதியாம். அது நிகழ்ந்தது பழங்கற்கால இறுதியில், புதிய கற்கால நாகரீக காலத்தோடு இன்றைய புதிய நாகரீக வாழ்க்கை தொடங்கிவிட்டது. கால்நடை வளர்க்கும் முல்லை நாகரீகப்பருவத்தில் தொடங்கிவிட்ட மரம், செடி, கொடிகளைக் குறிப்பாக நெல், வாழை, கரும்பு, மா ஆகியவற்றை மனித வாழ்விற்குப் பயன்கொள்ளும் நிலை, இம் மருத நாகரீக நிலையில் முழுமை அடைந்து விட்டது.

மருதத்தில், மண்ணின் விளைவாற்றல், அம்மண்ணுக்குரிய வனாம் உழவனுக்கு நிலத்தை உழுதபின்னர், நெல், முதலாம் – உணவுப் பொருட்களை விளைவிக்கும் முறையினைக் கற்றுத்தந்தது. ஆறுகளின் இரு பக்கங்களிலும், படிப்படி யாகத் தாழ்ந்து செல்லும் நில அமைப்பு, தங்கள் விளை நிலங்களுக்கு உயிர் ஊட்டும் நீரைக் கொண்டு செல்லும் முறையினை, வெள்ளத்தை, அது விரும்புமாறு ஓடவிடாது, தாம் விரும்புமாறு கொண்டு சென்று, வெள்ளநீரை ஆட்சி கொள்ளவல்லராகிய வெள்ளாளர்க்குக் கற்றுத் தந்தது. மழை நீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்துப், பாசனக் கால்வாய்கள் மூலம் தங்கள் விளை நிலங்களுக்குச் செலுத்தவும், கிணறுகளிலிருந்தும், நீர் ஊறும் கசங்களில் லிருந்தும் நீரேற்றுவான் மூலம் நீரை மேலே கொணர்ந்து, தாங்கள் பயிரிடும் நிலத்துண்டுகளுக்குப் பாசனம் அளிக்க வல்லவரும், பெய் எனக் கூறும்போது பெய்யுமாறு கார்மேகங்கள் மீது ஆட்சி செலுத்த வல்லவருமாகிய காராளர் ஆற்றுப்படுகைக்கு அப்பாற்பட்ட மேட்டுப்பகுதி களில் வாழ்ந்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்