கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 : 15. இசைத்திறம் உணர எழுந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி-தொடர்ச்சி)
பூங்கொடி
இசைத்திறம் உணர எழுந்த காதை
அடிகளார் ஆணை
பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி
ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள்
`மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால்
ஆன நல்லிசை யாண்டும் பரவிடச்
சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5
தவறிலா அடிகள் சாற்றினர்’ என்றனள்;
அருண்மொழியும் இசைதல்
`ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும்
தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி
மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்;
பூண்டநல் லன்பரைப் பூரியர் கொலைசெய 10
ஈண்டிய துயரால் இசைத்தொழில் துறந்தோம்;
இவ்வணம் நம்மனோர் இசைப்பணி வெறுத்திடின்
செவ்விய அவ்விசை சீருறல் யாங்ஙனம்?
துயரால் துறத்தல் தன்னல மாகும்
அயரா உழைப்பால் அப்பணி புரிகுவம் 15
எண்ணி எண்ணி இம்முடி பேற்றேன்;
அண்ணலும் அம்முடி பறைந்தன ராகலின்
இன்னே அதனை இயற்றுதல் வேண்டும்;
கொன்னே வாழ்நாள் குறைவது கண்டோம்
விழுங்கி உறங்கிப் பிணியால் மூப்பால் 20
விழுந்து மாய்தல் வீணே யாதலின்
புதுமைச் சுவடியின் பொருளெலாம் தெளிந்து
போதல் நன்’றெனப் புகன்றனள் அருண்மொழி;
—————————————————————
அதூஉம் – அதுவும், சாலும் – பொருந்தும், பூரியர் – கயவர், கொன்னே – வீணாக.
++++++
பூங்கொடி வேண்டுதல்
`அன்னாய்! சுவடியின் அரும்பொருள் அனைத்தும்
என்னால் ஆய்தல் எவ்வணம் இயலும்? 25
இசையின் திறனும் இயலின் திறனும்
நவையற உணர்ந்த நல்லோர் தாமே
இதன்றிறம் முழுவதும் எளிதின் அறிகுவர்;
அதனதன் வகைஎலாம் அறிந்தனை நீயே
முதன்முதல் இதன்பொருள் மொழிக’ என்றனள்; 30
எழிலியிடம் செல்க எனல்
`உயிர்நிகர் மகளே ஒன்றுரை கேண்மோ!
இயலிசைத் திறமெலாம் என்னினும் மிகவே
கற்றாள் நிறைபுகழ் பெற்றாள் ஒருத்தி
உற்றாள் கொடுமுடி ஊரினள் அம்மகள்
அறிவின் உரனும் ஆய்வின் திறனும் 35
செறியும் இயல்பினள் செம்மை வாழ்வினள்
நரைமூ தாட்டி நம்போற் பொதுப்பணி
புரிவது தொழிலாப் பூண்டவள்; அவள்தான்
எழிலி என்னும் ஏழிசைச் செல்வி
அன்னவள் தன்பால் அணுகி இதன்பொருள் 40
பழுதற உணர்க! பைந்தமிழ் இசைமுறை
கெழுதகும் அதன்பால் கிளத்துவள் அம்மகள்;
என்பாற் கற்ற இன்னிசைத் திறனும்,
அன்பாற் கற்ற ஆய்முறைத் திறனும்,
உன்பால் அமைந்த உருக்குங் குரலும், 45
முன்பே முறுகி எழுநல் லார்வமும்
உடையாய் ஆதலின் உறுபயன் ஒருதலை;
தடையாய் வருவன உளவேல் தவிரும்;
—————————————————————
கொடுமுடி – ஊரின் பெயர், கெழுதகும் – பொருந்திய, கிளத்துவள் – சொல்லுவள், ஒருதலை – உறுதி.
++++++++++++
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment