Skip to main content

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43: குடும்பம்

 




(அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40-தொடர்ச்சி)

ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான்.

அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்ப கலியாண வீட்டு வேலை. பேரிழலாய் இருப்பதற்குக் கேட்பானேன்” – என்றான்.

“திருமண வீட்டிலே இழவு, பேரிழவு என்று பேசலாமா” என்று நண்பன் கேட்டான்.

அதற்கு அவ் வேலையாள் –

“நேற்று சீர்வரிசை கொண்டு வரும்போது எல்லாரும், பழத்தட்டு, பாக்கு, கற்கண்டு, பூத்தட்டு தூக்கிக் கொண்டார்கள். என் தலையிலே தேங்காய்த் தட்டைத் தூக்கிவைத்து விட்டார்கள். நான் என்ன செய்வது! பிணத்தைத் தூக்குகிற மாதிரி, அவ்வளவு கனமாக இருந்தது. தூக்கித்தானே நடக்கணும்” – என்று சொன்னான்.

இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, வந்திருந்தவர்களிலே ஒரு பெரியவர்,

“என்னப்பா, தாலி கட்டப் போகிற சமயத்திலே இழவு, பேரிழவு, பிணம் – என்று பேசலாமா?’ – என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன் –

“போங்கையா – தாலி கட்டியதும் நீங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுங்க. என்பாடல்ல இங்கே தாலி அறுது” – என்று சொன்னான். அதற்கு ஒன்றும் பேசாமலே பெரியவர் எழுந்து போய்விட்டார்.

எதை, எங்கு, யார், எவரிடத்தில் –

எப்படிப் பேசுவது என்பதை இன்னும் பலர் புரிந்து கொள்ளவில்லை
.

– என்பதற்கு இது ஒரு சான்று.
—————-

குப்புசாமி என்ற சிற்றூர்வாசி தன் தந்தைக்கு திதி கொடுக்க நினைத்தார். ஓர் ஐயரை அணுகினார். அவர் கொடுத்த பட்டியல்படி சாமான்களை வாங்கி வைத்திருந்தார்.

ஐயர் வந்ததும் திதி கொடுக்கத் தொடங்கினார்.

குப்புசாமி, “இந்தச் சாமான்கள் எல்லாம் எதற்காக?” – என்று ஐயரைக் கேட்டார்.

அவர், “மேல் உலகத்தில் உள்ள உன் தந்தைக்கு மந்திரங்களைச் செபித்து – செபித்து அவருக்கு இவையெல்லாம் அனுப்பி வைக்கப்பெறும்” என்றார்.

குப்புசாமிக்குப் பெரிய மகிழ்ச்சி! தந்தை இறந்த பிறகும், அவர் உண்ண உணவு கொடுக்கின்றோமே என்ற மகிழ்ச்சி!

சடங்குகள் தொடங்கின.

ஐயர் சாமான்களைப் பார்வையிட்ட போது அங்கிருந்தது ‘புழுங்கல் அரிசி,’ ‘இது வேண்டாம் பச்சரிசி கொண்டு வா’ – என்று சொன்னார்.

உடனே குப்புசாமி –

“சாமி! எங்கப்பாவுக்கு பச்சரிசி ஆகாது. அதைச் சாப்பிட்டதனால்தான் வயிற்றுவலி வந்து இறந்தார்.

“மேலுலகத்துக்கும் இதை அனுப்பி அவரைத் துன்புறுத்த வேண்டமே” என்று வினயத்துடன் வேண்டிக் கொண்டான்.

ஐயருக்கு, அப்ப – என்ன சொல்வது, என்ன செய்வது என்று விளங்கவே இல்லை.

உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?

————-

கடும்பசியால் திராட்சைப்பழத் தோட்டத்திலே நரி நுழைந்தது. பழங்களை உண்ணவேண்டும் என்ற ஆசை. எட்டி எட்டிப் பார்த்தது. முடியாமல் நெடுநேரத்துக்குப் பின், ‘சீசீ! இந்தப் பழம் புளிக்கும்; இது வேண்டா’ என்று சொல்லிப் போய்விட்டது நரி.

இந்தக் கதையை என் பேத்தியிடம் சொன்னேன்.

பேத்தி, “தாத்தா அது உங்க காலத்து நரி, இந்தக் காலத்து நரி என்றால், ‘ஃச்டூல்’ – பலகை எடுத்துக் கொண்டுபோய்ப் போட்டு, அதன்மேல் ஏறி, எல்லாத் திராட்சைப் பழங்களையும் நன்றாகத் தின்று விட்டு போய்விடும் – 

என்று சொல்லவே.

நான் – “இது இக் காலத்து நரிக்கதை போலும்” என்றேன்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்