Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை-தொடர்ச்சி)

          `வடபுலப் பெரியோய்! வாட்டம் தவிர்தி!

வடமொழி வெறுத்து வழுத்தமிழ் கோவிலில்

இடம்பெற முயலும் இழிமகன் செருக்கினை

அடக்கிட அழைத்தேன், கோவிலில் தமிழ்புகல்        

          விடத்தகு செயலோ? தடுத்திடல் வேண்டும்;    145

          மந்திர மொழியை வடமொழி தவிர்த்துச்

செந்தமி ழாற்சொலின் செத்து மடிகுவர்;

கோவிலைத் தொலைக்கஇக் குறுமகன் இப்பணி

மேவினன் போலும், மிடுக்கினைத் தொலைப்போம்;        

          தேவ பாடையின் சிறப்பினை நாட்டுவோம்;    150

          யாவரும் என்பெயர் கேட்டால் நடுங்குவர்,

பிறப்பால் இழிந்தோன் எதிர்த்துனைப் பேசினன்!

இறப்பே அவன்இனி எய்துதல் வேண்டும்’என்

றழுக்கா றுள்ளம் அயலவன் சினமும்    

          இழுக்குறு செயல்செய எழுந்தன; ஒருநாள்      155

—————————————————————

          குறுமகன் – சிறியவன், தேவபாடை – ஆரியமொழி.

++++

அருகமை சிற்றூர் ஆண்டு விழாவில்

பெருமழை என்னச் சொன்மழை பொழிந்து

வருமவன் மீனவன் வண்டியை இருளில்

ஊர்க்குறு மாக்கள் தாக்கினர்; அவனைத்       

          தீர்த்திட எண்ணித் தீட்டிய வாளால்        160

          வெட்டினர்; ஆனால் விளைந்தது வேறு!

கட்டிளங் காளையர் தட்டுவண்டி யோட்டிக்

கொட்டி முழக்கிக் கூஉய்வரல் கேட்டு

விட்டுவிட் டோடினர் விலங்குச் செயலோர்;    

          வந்த காளையர் வாரி யணைத்து 165

          நொந்த உடலின் நோவினை அகற்றிக்

கூடல் நகரிற் கொண்டுய்த் தனரே;

`வேடன் கட்படு வெண்புற வானேன்!

பாடும் தமிழைப் பரப்புதல் பழியோ?    

          கூடி எங்கும் கொலைசெய் மாக்கள்       170

          தேடி அலையத் தொடங்குதல் கண்டேன்;

காடும் நாடும் ஒன்றெனக் கண்டேன்;

உயிர்ப்பலி உறுதி, ஓரிடம் தரியேன்;

செயிர்த்தோர் என்னைச் செகுத்தொழிக் காமுனம்

          ஊரூர் ஓடி உயரிசை பரப்பிப்         175

          பாரோர் ஏற்கப் பணிபுரிந் தழிவேன்’ என்றம் மீனவன் ஏகினன் விரைந்தே;

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்