Skip to main content

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40

 




(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38-தொடர்ச்சி)

பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள்.

பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி இலாபம் எனக் கையெழுத்திட்டு கடை நடந்து கொண்டிருக்கிறது.

மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். நிலமும் வாங்கிவிட்டான்.

முதலாளிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏதோ தவறு செய்கிறான்’ என்று சிலர் சொல்லியும் முதலாளி நம்பவில்லை. காரணம் இதுதான்

‘நமது ஒற்றுமையைக் கெடுக்க, பொறாமையால் யாரும் எதுவும் சொல்லுவார்கள்? முதலாளி, நீங்கள் அதனை நம்பிவிட வேண்டா’ என்று முன்பாகவே அவனும் சொல்லி வைத்திருக்கிறான்.

இம்மாதிரி நேரத்திலே, ஒருநாள் 70 உரூபாய்க்கு வாங்கின கற்களை 110 உரூபா கொள்முதல் என்று கணக்கிலே எழுதியிருந்தான். முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது. உடனே கடையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக்கொண்டார்.

உழைப்பாளி சும்மா இருப்பாரா? வழக்குரைஞரைக் கலந்து ஆலோசித்தார். அவர் மூலம் அறிவிப்பும்(நோட்டீசும்) கொடுத்து விட்டார். அந்த அறிக்கையிலே, உடனே கடையைத் திறக்கவேண்டும் என்றும், 3 வருட இலாபம் விளம்பரத்திலே போய்விட்டது. ஆகவே கடையின் பெயர் மதிப்பில் பாதிப்பணம் வரவேணும் என்றும், இன்னும் எஞ்சிய 7 வருட இலாபத்தில் தனக்கு ஏழு ஆயிரம் உரூபாய் கிடைக்கவேண்டும் என்றும் கண்டிருந்தது.

இதை எடுத்துக்கொண்டு போய் முதலாளி பல வழக்குரைஞர்களிடம் கலந்து யோசனை கேட்டார். அவர்கள் எல்லாரும் “ – நீதிமன்றத்திற்குப் போகவேண்டா. போனால் சட்டப்படி இதுதான் நிலைத்து நிற்கும். யாரையாவது ஒருவரை வைத்துப் பஞ்சாயத்துச் செய்துகொள்ளுங்கள். இதுதான் நல்லது” – என்று சொன்னார்கள்.

இதனால் முதலாளி என்னிடம் வந்து இவ்வழக்கைத் தீர்த்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

கடைவீதியில் இதைப்பற்றி விசாரித்ததில், முதலாளி சொன்னது உண்மையென்றும், கூட்டாளி செய்தது தவறு என்றும் எனக்கு விளங்கியது.

ஒர் ஆள்மூலம், ஆயிரம் உரூபாயுடன் வரும்படி முதலாளியையும், உடனே வரும்படி உழைப்பாளியையும் வரச்சொன்னேன். இருவ்ரும் வந்தனர்.

‘நான் ஆயிரம் உரூபாயை முதலாளி கொடுக்கவும், உழைப்பாளி பெற்றுக் கொள்ளவும்
செய்தேன்.

‘இனி எனக்கும் உனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ என்று எழுதிக் கொடுக்கும்படியும் செய்தேன். எழுதித் தந்தனர்: வழக்கு முடிந்துவிட்டது.

இருவரும் என் இடத்தை விட்டுப் புறப்பட்டனர். மெத்தைப் படியிலே தயங்கித் தயங்கி நின்று, திரும்பவும் என்னிடம் வந்தார் உழைப்பாளி.

அவர் சொன்னது – “முதலாளி எங்கெங்கோ அலைந்தார். ஒன்றும் பலிக்க வில்லை, நீங்கள் சொன்ன முடிவை நான் ஏற்றுக் கொள்வேன் என்றெண்ணி கடைசியாக ஐயாவிடம் (தங்களிடம்) வந்தார். அந்தக் கடையைத் தயவுசெய்து என்னிடம் கொடுக்கச் செய்யுங்கள். அவரால் கடையை நடத்தமுடியாது.

அவருக்குத் திறமை இல்லை” – என்று சொல்லி முடித்தான். “அவருக்குத் திறமை இல்லை என்பதை எப்படிக் கண்டாய்?” என்று கேட்டேன்.

அதற்கு, “நான் ஊரில் இல்லாதபோது, 1¼ பவுன் திருட்டுத் தங்கத்தை விவரம் தெரியாமல் விலை கொடுத்து வாங்கிவிட்டார்.” காவல்துறையினர் வந்து பிடித்துக் கொண்டுபோய் காவலில் வைத்துவிட்டனர்.

அப்போது அவர் மனைவி மக்கள் எல்லாம் என்னிடம் வந்து, “நாங்கள் என்ன பண்ணுவோம்?” – என்று கதறினார்கள்.

நான் உடனே போய்ப் பார்க்கிறவர்களை எல்லாம் பார்த்து – பிடிக்க வேண்டியவர்களை எல்லாம் பிடித்து. செய்யவேண்டியதை எல்லாம் செய்து – அவரைக் கூட்டி, வந்துவிட்டேன். இப்படிச் செய்ய இவரால் முடியுமா?”

– என்று என்னைக் கேட்டதும், எனக்குத் தலை சுற்றியது.

பார்க்கிறவர்களைப் பார்ப்பது –
பிடிக்கிறவர்களைப் பிடிப்பது –
கொடுப்பதை எல்லாம் கொடுப்பது –
செய்வதை எல்லாம் செய்வது –

என்பனவாகிய காரியங்களை அவன் “திறமை” என்று சொன்னது – இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.


நமது முன்னோர்கள் எது எதை அயோக்கியத்தனம் என்று கைவிடச் சொன்னார்களோ, அதையெல்லாம் இப்போது ‘திறமை’ என்று சொல்கிற காலமாகப் போயிற்று – என்ன செய்வது?
—————

தில்லி மாநகரத்திலே ஒரு இடுகாட்டின் நடுவில் பல சமாதிகள் இருந்தன. பெரியவர் ஒருவர் மிகவும் பயபக்தியுடனே இறந்தவர்களுக்கெல்லாம் அஞ்சலி செய்து கொண்டே சமாதிகளைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.

அங்கே இருபது வயதுடைய இளம்பெண் ஒருத்தி, தன் கணவனின் சமாதி அருகே அமர்ந்து, அழுது கொண்டே சமாதிக்கு விசிறிக் கொண்டிருப்பதைக் கண்டார். அதுகண்டு மனம் இளகிய பெரியவர், அவள் பதியின்பால் கொண்டுள்ள பக்தியை மெச்சி. “அம்மா, நீ விசிறுகிற காற்று சமாதியின் அடியில் புதைந்துள்ள உன் கணவரின் உடலுக்குப் போய்ச் சேரும் என்றா நினைக்கிறாய்? ஏன் இந்த வீண்வேலை. துக்கத்தை விட்டு ஆறுதல் அடைவாய் மகளே!” என்று அன்போடு புத்திமதி கூறினார்.

அதற்கு அவளோ, “ஐயா! நீங்கள் என் நிலையை உணரவில்லை என்பது நன்கு தெரிகிறது” என்று சொன்னதுமே, பெரியவருக்கு அவள் நிலைகண்டு மிகவும் இரக்கம் ஏற்பட்டதால், அவர் கண்களிலும் கண்ணிர் வழிய ஆரம்பித்தது.

உடனே அவள் பெரியவரைத் தேற்றிவிட்டுச் சொன்னாள், “எனக்குத் திருமணமாகி ஒரு வருடந்தான் ஆகிறது. என் கணவர் மரணத்தின் பிடியில் இருக்கும் போது, என்மேல் இரக்கம்கொண்டு ‘நான் இறந்தபின் நீ கல்யாணம் செய்துகொள்வாயா?’ என்று கேட்டார்.

“நான் செய்துகொள்வேன்” என்று சொன்னேன். ‘அப்படியானால், என் கல்லறையில் ஈரம் காயும் முன்பாகக் கல்யாணம் செய்துகொள்ளாதே?’ என்றார். நானும் ‘சரி’ என்றேன்.

இந்தக் கல்லறை கட்டி இரண்டு நாளாகப் போகிறது. இன்னும் ஈரம் காய்ந்தபாடில்லை. அதற்காகத்தான் சமாதி உலர விசிறிக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரியவர், ‘என்ன உலகமடா இது!’ என்று எண்ணி வியந்து, கண்ணீர் விட்டுக்கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றார்.

இப்போது அவர் சிந்தும் அக்கண்ணிர் சமாதியில் உறங்கும் அவள் கணவனுக்காக!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்