அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 39-40
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2024 அ கரமுதல ( அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38-தொடர்ச்சி ) அறிவுக் கதைகள் நூறு 39. முதலாளிக்குத் திறமை இல்லை ! பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள். பத்து ஆண்டு ஒப்பந்தம்; ஆளுக்குப் பாதி இலாபம் எனக் கையெழுத்திட்டு கடை நடந்து கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகள் ஆயின, இதற்குள் உழைப்பாளி ஒரு வீடு கட்டிவிட்டான். நிலமும் வாங்கிவிட்டான். முதலாளிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏதோ தவறு செய்கிறான்’ என்று சிலர் சொல்லியும் முதலாளி நம்பவில்லை. காரணம் இதுதான் ‘நமது ஒற்றுமையைக் கெடுக்க, பொறாமையால் யாரும் எதுவும் சொல்லுவார்கள்? முதலாளி, நீங்கள் அதனை நம்பிவிட வேண்டா’ என்று முன்பாகவே அவனும் சொல்லி வைத்திருக்கிறான். இம்மாதிரி நேரத்திலே, ஒருநாள் 70 உரூபாய்க்கு வாங்கின கற்களை 110 உரூபா கொள்முதல் என்று கணக்கிலே எழுதியிருந்தான். முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது. உடனே கடையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக்கொண்டார். உழைப்பாளி சும்மா இருப்பாரா?