Skip to main content

தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை – புலவர் கா.கோவிந்தன்



(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.2 – புலவர் கா.கோவிந்தன்- தொடர்ச்சி)

ஓரின மக்களின் நாகரீகம், அவர் வாழும் மண்ணுக்கு உரியதாயின். அந்நாகரீகம், அம்மக்கள், பிற இனமக்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே வளர்ந்து முழுமை பெற்ற ஒன்றாகக் காணப்படுமாயின், அந்நிலைக்கு, அம்மக்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலை, அம்மக்கள் மீது செலுத்திய ஆட்சியின் விளைவே முழுமுதல் காரணமாம். ஓரின மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலையோடு தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்ததன் விளைவாகத் தோன்றிய ஒரு நாகரீகம், அம்மக்கள் வாழும் நில இயல் கூறுபாட்டுக் காரணம் அடிப்படையில் எழுந்ததேயல்லது, வென்று அடிமைகோடல், வாணிகம், மற்றும் பிற அறவழி மூலம் அம்மக்களோடு தொடர்பு கொண்டுவிட்ட வெளி நாட்டவரின் ஆதிக்க விளைவு போலும் வரலாற்றுக்கான அடிப்படையில் எழுந்ததாகாது.

தொல்லூழிக் காலத்தில், மனித வாழ்க்கையில், இயற்கைச் சூழ்நிலை செலுத்திய ஆட்சியின் விளைவாக மனித நாகரீகம் தமிழகத்தில் படிப்படியாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெற்ற வளர்ச்சி நிலையினைக் கண்டுகொள்ளக்கூடிய நிலையில் நாம் உள்ளோம். நிலத்துக்கடியில் வியத்தகு – கனிவளச் செல்வங்களையும் நிலப்பரப்பின் மேல், எண்ணிக் காணமாட்டாது வேறு வேறுபட்ட மாவடை, மரவடைகளையும், ஒருபால், பெருநீர்ப்பரப்பையும், பிறிதொருபால் பெருநிலப் பரப்பையும் கொண்டதாய தட்பவெப்ப நிலையினையும் கொண்டு, மனித இனத்தின் வளர்ச்சியில், அதிலும் அவனுடைய தொடக்கநிலை வளரச்சிப் பருவத்தில், ஒப்புயர்வற்ற நிலையில் துணை நிற்பதாக இருந்தும், வளங்கொழிக்கும் இந்திய நாடு, தன் மைந்தர்களின் வாழ்க்கை நிலைக்கும், தன் வரலாற்று ஏடுகளுக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு நாகரீக நலத்திற்கும், தன் எல்லைக்கு அப்பாற்பட்ட வறண்ட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன வற்றையே சார்ந்திருக்க வேண்டியுளது என்பது வெள்ளிடை மலையாகும் என்றே இந்திய வரலாற்று ஆசிரியர் பலரும் கருதுவதாகத் தெரிகிறது.

சில வரலாற்று ஆசிரியர்கள், திராவிடர்களின் மூதாதையர்களை, இந்தியாவின் வடமேற்கு அல்லது வடகிழக்குக் கணவாய்கள் வழியாக நம்பிக்கைமிக்க நல்ல வழிகாட்டிகளின் துணையோடு கொண்டுவந்து, எடுத்த எடுப்பிலேயே முழுமை பெற்ற வெளிநாட்டு நாகரீகத்தோடு காவிரி அல்லது வைகைக்கரைகளில் குடியமர்த்துகின்றனர். தமிழ்ச்சொற் களோடு ஒரு சார் உறவுடைய சொற்கள் சிலவற்றை, வட இந்தியாவின் ஒரு மூலையில் வழங்கும் பிராகிமொழி கொண்டிருப்பது ஒன்றே அவர்தம், மிகப்பெரிய இக் கற்பனைக்கு, அவர்கள் நம்பும் மிகச்சிறிய அகச்சான்று. தமிழ்மொழி அல்லது அதனோடு உறவுடைய ஒரு மொழி, பண்டைக்காலத்தில், அவ்வடமேற்கு மாநிலங்கள் வரை வழக்கில் இருந்துள்ளது என்பதே இதிலிருந்து பெறக்கூடிய முறையான முடிவு ஆகும்.

ஒரு மொழிக் குடும்பத்தின் ஒரு மொழியின் ஒரு வாக்கியத் தொடரை, மொழியியல் மரபைச் சிறிதும் மீறாமல், அத்தொடரில் உள்ள சொல்லுக்குச் சொல் மாற்றி வழங்குவதன் மூலமே, வேற்று மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியின் வாக்கியத் தொடராக மொழி பெயர்த்துக் கொள்ளுவதற்கு ஏற்புடையதாகும் வகையில், வட இந்தியாவில், இன்று வழக்கில் இருக்கும், சமற்கிருதம் அல்லது கெளடியன் இனத்தைச் சேர்ந்த மொழிகள் பலவும், திராவிட இன மொழிகளில் உள்ளது போன்ற இலக்கண அமைப்பு முறைகளையும், சொற்றொடர் அமைப்பு முறை களையும் கொண்டுள்ளன என்ற உண்மை நிலையாலும், மேற்கூறிய முடிவு அரண் செய்யப்படுகிறது.

கூறிய இவ்வுண்மைகள் தமிழ்மொழியோடு உறவுடைய மொழிகளை வழங்கிவந்த மக்கள் ஒரு காலத்தில் இந்தியப் பெருநிலப்பரப்பு முழுதும் வாழ்ந்து வந்தனர் என்பதை உறுதி செய்யுமேயல்லாது, அம்மக்கள், இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாட்டிலிருந்து தவிர்க்க இயலாத நிலையில், இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாட்டிலிருந்து தவிர்க்க இயலாத நிலையில், இந்தியாவுக்கு வந்தனர் என்பதை உறுதி செய்யா இந்தியப் பழங்குடிகள், இம்மண்ணின் மாந்தர் அல்லர் என்பதை நம்மை நம்பவைக்கத்தக்க அகச்சான்று ஒன்றுகூட இன்று வரை தரப்படவில்லை.

மேலும், தென்னிந்தியாவில், இதுவரை, அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைக் காலத்தைச் சார்ந்த கலைப் பொருட்களும், வரலாற்று நினைவுச் சின்னங்களும் தொடக்க நிலையாகிய பழங்கற்காலம் முதல் புத்தம் புது நிலையாகிய உலோகக் காலம் வரை எவ்வித இயற்கை நிலை பிறழ்வு காரணமாகவும், இடையற்றுப் போவதற்கு உள்ளாக்கப்படாத நாகரீகத்தின் முறையான வளர்ச்சி, இந்நாட்டில் இருந்து வந்தது என்பதை நிலைநாட்டும் அழியாக் களஞ்சியத் தொகுப்பாய் அமைந்துள்ளன (இக்கூற்றிற்கான அகச் சான்றுகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் கற்காலம் என்ற என் நூலில் காண்க.

இந்நாகரீகத்தின் வளர்ச்சிப் பருவ நிலை முழுவதும், தமிழ் மொழி, தென்னிந்தியாவில் வழக்காற்றில் இருந்து வந்துள்ளது. இந்நாகரீக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையையும் மொழி வடிவில் உணர்த்தத் தேவைப்படும் சொற்கள், தமிழ் மொழியின் தொடக்க நிலை மொழயமைப்பிலேயே இடம் பெற்றுள்ளன. அப்பண்டைக் கால பழக்க வழக்கங்கள், தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கிய ஏடுகளில், போற்றிக் காக்கப்படுவது நீண்டகாலமாகவே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதற்கான எண்ணற்ற அகச் சான்றுகளுக்கு “ஆரியத்துக்கு முந்திய தமிழ் நாகரீகம்” என்ற என் நாலைக் காண்க). ஆகவே, தமிழர், தென்னிந்தியாவின் பழம் பெருங்குடிகளாவர் என்பது முழுதும் உண்மையாம் எனக் கொள்ளலாம்.

ஐந்நிலங்கள்

நிலப்பரப்பின் வாழத் தகுதி வாய்ந்த பகுதிகள், ஐந்து இயற்கைக்கூறுகளாகப் பிரிக்கப்படலாம் என்பதைப் பண்டைத் தமழர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொரு நிலப்பகுதிக்கும், அவர்கள், திணை என்னும் பெயரிட்டனர். திணை எனும் அச்சொல், ஒரு நிலப்பரப்பு எனும் பொருள் தருவதாய் திண் அல்லது திட் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்டதாகத் தோன்றுகிறது. திணை என்ற அச்சொல், பொதுவாக நிலம் என்ற பொருளிலும் ஆளப்படுகிறது. பண்டைத் தமிழர்கள், நிலப்பரப்பு, ஐந்து இயற்கைக் கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை மட்டும் அறிந்திருந்தாரல்லர். மனித வாழ்வின் செயல்பாட்டு முறைகள், ஒவ்வொரு மனித இனமும் எந்த இயற்கைச் சூழலில் வளர்ச்சி பெற்றதோ அந்த இயற்கைச் சூழலின் இயல்புகளோடு ஒத்திருந்தன என்பதையும் அறிந்திருந்தனர்.

அந்த ஐந்து நிலப்பகுதிகளாவன, மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி, நீரற்று வறண்ட நிலப்பகுதியாகிய பாலை. மலைக்கும் மடுவிற்கும் இடைப்பட்ட காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகிய முல்லை, ஆற்றுப்படுகை நிலமாம் மருதம், கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல், நிலப்பரப்பின் இந்த ஐந்து இயற்கைப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் சிறுசிறு அளவிலேனும் காணப்படுகின்றன. தென்னிந்தியர் ஒரு நிலப்பிரிவிலிருந்து பிறிதொரு நிலப்பிரிவிற்குப் பரவி வாழ்ந்தமையால், அந்நிலப்பரப்பு ஒவ்வொன்றும் உருவாக்கி அளித்த நாகரீகத்தை, அவர் படிப்படியாக வளர்த்துள்ளனர்.

மனித இன நூல் வல்லுநர், வேறுவேறுபட்ட மூவகை மனித நாகரீகத்தின் இயல்பினைக் காட்டவல்ல முப்பெரும் இடங்களான. முப்பெரும் நிலப்பிரிவுகளைக் குறிப்பிட்டுள் ளனர். அவ்வகை நாகரீகம், மத்திய தரைக்கடல் நாகரீகம், ஆல்ப்ஸ் மலைநாட்டு நாகரீகம், நார்டிக் எனப்படும் வடமேற்கு ஐரோப்பிய நாகரீகம் என அழைக்கப்பட்டன. மத்திய தரைக்கடலைச் சார்ந்து நிலவிய நாகரீகத்தையும், ஆல்ப்ஸ் மலையின் இருபக்கத்தும் நிலவிய நாகரீகத்தையும் , ஆராயத் தொடங்கியபோதுதான், மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் அம்மக்கள் வாழும் சுற்றுச்சூழல் செலுத்தும் ஆட்சியின் இயல்பு உணரப்பட்டது. ஆகவே, முதல் இரு நாகரீகங்களும் அவ்வாறு பெயரிடப்பட்டன. மூன்றாவது இயல்பினைக் காட்டவல்ல இடப்பகுதி, யுரேஷியா எனப்படும் பிரிவுறாத ஆசிய ஐரோப்பியப் பெருநிலப் பரப்பின் வடபகுதியைச் சார்ந்தது. ஆகவே, மூன்றாவது நாகரீகம் அவ்வாறு பெயரிடப்பட்டது. தமிழ்ப்பெயர் சூட்டுவதாயின் மத்திய தரைக்கடல் நாகரீகம், நெய்தலாம். ஆல்ப்ஸ் மலைநாட்டு நாகரீகம் குறிஞ்சியாம். நார்டிக் நாகரீகம் முல்லையாம்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் 19 ஆம் நூற்றாண்டில் முற்றிலுமாகத் தொழில்மயமாக்கப்பட்டு பண்டைக்காலத்து ஐரோப்பிய மக்களுக்கு ஆறும், அது ஓடும் பள்ளத்தாக்காம் நிலப்பரப்பும் செலுத்திய ஆட்சித்திறன் அறவே மூடி மறைக்கப்பட்டுவிட்டமையால், மிக மிக முக்கிய நாகரீக மாகிய மருதம் என அழைக்கப்படும் ஆற்றுவெளி நாகரீகம் அறவே புறக்கணிக்கப்பட்டு விட்டது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் பரந்து கிடப்பது போன்று ஐரோப்பாவில் பாலைவனம் எதுவும் இல்லை. அராபிய நாடோடி இனத்தவரின் நாகரீக இயல்பினைக் காட்டவல்லது பாலை வனம். மக்கள் இனப்பண்பாட்டு நிலை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களின் கடைக்கண் பார்வையை, இது, ஒரு சிறிதே பெற்றுள்ளது.

மனிதன் பண்டு கடந்துவந்த நாகரீகத்தின் படிக்கட்டுகள் ஐந்து. அவையாவன: வேட்டையாடல், நாடோடி வாழ்க்கை, கால்நடை மேய்த்தல், கடல் மேற்சேறல், தொழில்மயமும் கலந்த உழவுத்தொழில் மேற்கோடல்: இவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதத் திணைகளுக்கு நிகராகும். ஒவ்வொரு நிலப்பிரிவையும் சார்ந்த, இயற்கை வளங்களின் இயல்புகள், அவ்வந் நிலத்துக்குரிய நாகரீக வளர்ச்சிக்குத் தூண்டுதலாய் அமைந்தன.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்