கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்-தொடர்ச்சி)
பூங்கொடி
மீனவன் சங்கம் புகுதல்
ஆதலின் நம்பால் அனைத்தும் இருந்தன;
ஏதிலர் நம்மை இகழ்ந்துரை யாட
நோதகச் சிலபல தீதுற் றழிந்தன;
அந்தோ உலக அரங்குக் கொளிசெயும
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! 60
மண்ணக முதல்வி! எண்ணுநர் தலைவி!
நண்ணுவ தேனோ நலிவுகள் நினக்கெனக்
கண்கலங்கி நெஞ்சம் புண்ணடைந் திருப்ப,
ஆங்கோர் பெருமகன் அவனுழை வந்து
பாங்குடன் அவனுளப் பாடுணர்த் துரைக்கும்; 65
`அயரேல் மீனவ! அறைகுவென் கேள்நீ!
பயில்தரு மறவர் பாண்டிய மரபினர்
சங்கம் நிறுவித் தண்டமிழ்ச் சுவடிகள்
எங்கெங் குளவோ அங்கெலாம் துருவித
தொகுத்து வைத்துளார்; மிகுந்தஅச் சுவடிகள் 70
பகுத்துப் பார்ப்பின் பண்ணும் கூத்தும்
வகுத்துக் கூறுநூல் வாய்க்கவும் கூடும்’;
செவியில் இவ்வுரை தேனெனப் பாய்ந்தது;
+++++
நோதக – வருந்த, நந்தா – அழியாத, துருவி – ஆராய்ந்து.
++++
குவிபடு கையாற் கும்பிட் டெழுந்து
சங்கம் புக்குத் தமிழே டனைத்தும் 75
பொங்கும் மகிழ்வால் பொன்னியின் செல்வன்
நுண்ணிதின் நோக்கினன் கண்களி கொள்ளச்
சுவடியொன் றுற்றது துள்ளிக் குதித்தனன்;
இவைஎலாம் மறந்தே இலைஎனல் முறையோ?
மீனவன் எக்களிப்பு
தவலரும் உவகை தன்னகம் நிறைக்கத்
குழந்தை யாகினன்; இருகை கொட்டி, 80
இழந்ததைப் பெற்றேன் இனித்துயர் இல்லைஎன்
றாடினன் பாடினன் அவையகம் மறந்தே;
தேடிய சுவடி ஓடிவந் துறலால்
வாடிய அவன்மனம் கூடித் தளிர்த்தது;
துயரக் கடலுள் மூழ்கித் துடிக்கும் 85
அமயத் தொருமரக் கலமென அவற்குச்
சுவடி துணைசெயச் சோர்வகன் றனனே;
`என்தாய்ப் பழிப்போர் இனியிரார் உலகில்,
பொன்றாப் புகழ்நூல் புகுந்ததென் கையில்,
இசையும் கூத்தும் இலங்கிய தமிழோ 90
வசைபெறக் காண்பது? வையகம் எங்கும்
முழக்குவென் முழக்குவென் முத்தமிழ்ப் பெருமை,
சழக்கார் பகைஎலாம் தவிடெனப் பொடியென
ஆக்குவென், எதிர்ப்பெலாம் நீக்குவென், மாசினைத்
தீக்கிரை யாக்கித் தேனிசை பாடுவென்’ 95
என்றவன் செம்மாந் தேறென எழுந்தனன்;
கூடல் நகரெலாம் கொற்றவன் தமிழிசைப்
பாடல் ஒலியே பரந்தது கண்டு
வாயடங் கினரே வாதுகள் செய்தோர்;
தாயினும் மேலாத் தமிழினை விழைவோன் 100
இசையின் இயலெலாம் இசைத்தவண் இருப்புழித்
++++
தவலரும் - குறையற்ற, பொன்றா - அழியாத, சழக்கர் -கயவர்
+++++
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment