Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை-தொடர்ச்சி)

          பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச்         25

          சங்கப் புதையலும் சாமி நாதத்

துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்;

சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப்

பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின;

          இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30

          வாரா திருப்பின் வளமிலா மொழிஎன

நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்;

நல்லோன் தந்தனன் நம்புதை பொருளெலாம்,

செல்லார் குழுவும் சிதைக்கா தொழிந்தது;     

          நல்லோய்!  இசையும் நாடகச் சுவடியும் 35

          வல்லோன் விழிக்கு மறைந்தன போலும்!

அகப்பட் டிருப்பின் ஆவணப் பேச்சைத்

தகர்த்தெறிந் தொழிப்பேன்; சுவடிகள் தவறினும்

அந்நூல் தமிழுக் கிலையென் றறைதல் 

          அளப்பே யாகும் அவ்வுரை நம்பேல்!       40

          அளப்பரும் புகழ்நூல் சிலப்பதி கார

உரைதரும் ஆசான் அடியார்க்கு நல்லான்

புரையற உரைத்தது புலமுளோர் அறிவர்;      

          யாழும் குழலும் எழுப்பிய இசைதான்    

          வாழும் தமிழோ?  வருமொழி இசையோ?        45

          அவ்விசைக் கருவிகள் ஆய்ந்து கண்டவர்       

—————————————————————

          சாமிநாதன் – திராவிடக் கலாநிதி உ. வே. சாமிநாத ஐயர், நேரார் – பகைவர், செல்லார்குழு – கறையான் கூட்டம்.

+++

செவ்விய தமிழர்; சிறந்தஇக் கருவிகள்

எப்பொருட் டியற்றினர்?  இசைப்பொருட் டன்றோ?

பாணன் பாடினி பாடற் றொழிலோர்     

          மேனாள் ஈண்டு மேம்பட வாழ்ந்தனர்;    50

          அவர்தாம்

எம்மொழிப் பாடல் இசைத்தனர்?  ஆய்ந்துணர்!

திணைகள் ஐந்தெனச் செப்பிய முன்னோர்

இணையும் வகையால் பண்ணும் இசைத்தனர்;       

          இவைஎலாம் மறந்தே இலைஎனல் முறையோ?         55

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்