Skip to main content

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38

 




(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 33-35-தொடர்ச்சி)

ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஓநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன :

கிளி : ஓநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க?

ஓநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன்.

கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க?

ஓநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும் என்னைக் கண்டால் ஒடிப் போகுதுங்க. நான் இங்கே இருந்து என்ன பயன்?

கிளி : நீங்க போகிற காட்டிலே இப்படியெல்லாம் உங்க கிட்ட நடந்துக்க மாட்டாங்களா, என்ன?

ஓநாய் : அந்தக் காட்டிலே இருக்கிற புலி சிறுத்தை யெல்லாம் என்னைக் கண்டதும் தடவிக் கொடுக்குது; மானும் முயலும் என்னோடு ஓடி விளையாடுது.

கிளி : அப்படியா? அப்படியானால் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேள் அண்ணே! “உன் விசப்பற்களையும், கூர்மையான நகங்களையும் இங்கேயே, இந்தக்
காட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுப் போ!”

ஓநாய் : அதையெல்லாம் இங்கே கழட்டிப்போட்டு விட்டு போனால், அந்தக் காட்டிற்குப்போய் நான் என்ன பண்ணுவேன்?

கிளி : அப்படி நீ செய்யவில்லையானால், வெகுசீக்கிரத்தில் அந்தக் காடும் இந்தக் காடு மாதிரியே ஆகிவிடும் என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது கிளி.

இதிலிருந்து காட்டின்மேல் எந்தத் தப்பும் இல்லை; ஓநாய் நடந்துகொள்ளும் முறையில்தான் தப்பு இருக்கிறது என்று அந்தக் கிளி செல்லாமல் சொல்லிவிட்டது. நமக்கும் இது ஒரு படிப்பினை அல்லவா?
—————-

ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர்

காஞ்சிபுரம் நாயனா பிள்ளை,
பிடில் கோவிந்தசாமி பிள்ளை,
மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை,
கஞ்சிரா தட்சினா மூர்த்தி பிள்ளை,
கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை,

இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது – அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு முன்பும். அவர்கள் காலத்திலும், அதற்குப் பின்பும் அமைந்ததில்லை.

அத்தகைய இசையரங்கு நிகழ்ச்சி – நாமக்கல்லிலிருந்து மோகனூர்க்குப் போகும் நெடுஞ்சாலையிலே, மாலை 6 மணிக்கு நடந்து கொண்டிருந்தது. பெரிய மண்டபம்; மேடையில் கூட்டம் அதிகமாகக் கூடியிருந்தது

அதுநெடுஞ்சாலை வழி –

அந்த ஊர்ப் பக்கத்து – பணக்காரர் ஒருவர் – சலங்கை கட்டிய இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்.

கையெழுத்து மறையும் மாலை நேரம் – சாலையில் ஒரே கூட்டம். அவர் பயந்து, தன் வண்டிக்காரனை, அது என்ன கூட்டம்? பார்த்து வா’ என்று அனுப்பினார். அவன் போய் விசாரித்து வந்து,

‘எசமான், எசமான் – ’ என்று கத்திக்கொண்டே ஒன்றும் சொல்லாமல் மாட்டைத் தட்டி விரைவாக ஒட்டிக் கொண்டிருந்தான்.

செல்வந்தர் ‘என்னடா?’ – என்று அதட்டிக் கேட்கவும்,

வண்டிக்காரன் – மிகவும் – பயந்து –

எசமான், அது பெரிய கொள்ளைக்கூட்டம் –

‘”யாரோ’, காஞ்சிபுரம் நயினாவாம் – மீசையும் தொந்தியும் பார்த்தால் பயங்கரமாயிருக்குது அகப்பட்டுக்கொண்டு அலறு அலறு என்று அலறுகிறார்.

‘யாரோ’ கோவிந்தசாமியாம், அவன் விடலிங்களா –

‘யாரோ’ புதுக்கோட்டை தட்சிணா மூர்த்தியாம் கெஞ்சு கெஞ்சு கெஞ்செனனு கெஞ்சிராறாம் –

‘யாரோ’ மன்னார்க்குடி பக்கிரியாம் – அந்த ஆள் கன்னக்கோல் வைச்சிருக்கிறாரு –

அப்படியே கூட்டம் அவங்களை அமுக்கிக்கிட்டிருக்குங்க.

காவல்துறையினர்(போலீசு சப்வீஸ் எல்லாம் அவங்களை வளைச்சு சுற்றிக்கிச்சுங்க –

நாம் இருட்டு முன்னே தப்பி ஊர் போய்ச் சேரனும்” என்று சொல்லிக்கொண்டே மாட்டைத் தட்டி விரட்டி ஓட்டுகிறான்.

– என்னே இசையறிவு!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, தமிழர் தோன்றித் தமிழ்தோன்றி தமிழ்இசை தோன்றிய இசைக்கடல் இன்பத்தைச் சுவைக்கும் தமிழ்மக்கள் நடுவிலே – இப்படியும் சிலர் இருந்தனர் என்று தெரிகிறது.

ஓர் ஊரிலே சுருட்டு வியாபாரிகள் இருவர். அவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தது.

போட்டி போட்டு ஒருவர்க்கொருவர் சுருட்டு விலையைக் குறைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.

தன் போட்டி ஆசாமி அசலுக்கும் குறைவாக விற்பதைக் கண்டு, மற்றவரால் அதைச் சமாளித்துப் போட்டி போட முடியவில்லை. எப்படிக் குறைந்த விலைக்கு விற்கிறார் என்பதும் விளங்கவில்லை.

இரவு கடையைப் பூட்டியதும். இவர் அவர் (போட்டி வியாபாரி) வரும் வழியையே – எதிர்பார்த்துக் கொண்டு நின்றார். அவரும் கடையைச் சாத்திவிட்டு வருகிறார்.

அவரை நோக்கி, “ஐயா, “நான், புகையிலையைத் திருடிக்கொண்டு வந்து விற்கிறேன்; எனக்கே இந்த விலை கட்டுப்படி ஆகலையே? உங்களுக்கு எப்படிக் கட்டுகிறது?” – என்று கேட்டார்.

அதற்கு அவர், “உன்னைப் போல முட்டாள் அல்ல நான்: சுருட்டையே திருடிக் கொண்டுவந்து விற்கிறேன் என்றார்.

எப்படி,

இந்த வணிகம்?

சுருட்டும் திருட்டும் அது கலந்த உருட்டும்’ எப்படி?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்