Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்-தொடர்ச்சி)

திசைதொறும் சென்று தன்புகழ் நிறீஇ

விருதுபல கொண்டு வெற்றிக் களிப்பொடு

வருவோன் ஒருவன் வடபுலத் திசைவலான்   

          ஏம கானன் எனும்பெயர் பூண்டோன்      105

          தோமறு மீனவன் தொண்டும், தமிழிசைப்

புலமையும், அவன்பெரும் புகழும் செவிமடுத்துக்

கலைமலி காளையின் கண்முன் தோன்றி

`உரவோய்!  இளமையில் ஒருதனி நின்றே       

          இரவாப் பகலாத் திறமுடன் ஆற்றும்       110

          நின்னிசைப் பணிக்கு நெடிதுவந் தனனே,

என்னிசைப் பயிற்சியும் எளிதாய் நினக்கு

வருமா றுரைக்க மனங்கொண் டுன்பால்

வருதல் உற்றேன்; வடபுலத் திசையும்    

          ஒருங்குடன் சேரின் ஒளிரும் நின்புகழ்;   115

          அருங்குணம் ஆன்றோய்!  விரும்புதி யோ’என,        

          வயிறுபுண் ணாக வாய்விட்டுச் சிரித்துக்

`குயிலின் குரலொடு கோழியின் குரலும்

இணையின் என்னாம்?  இந்நாள் வரையும்     

          துணைவிழி மூடித் தூங்கிய மாந்தர்       120

          கண்விழித் தெழுந்து கருத்துடன் தமிழிசைப்

பண்தொடுத் திசைக்கப் பயிலுங் காலை

மீட்டும் மற்றோர் இசைபுக விழையின்

காட்டும் ஆர்வம் கருகிச் சாகும்;   

          அரும்பிய ஆர்வம் அணிமல ராகி 125

          விரிந்து நறுமணம் வீசுதல் ஒன்றே

என்குறிக் கோள்’என எடுத்துரைத் தனனே;    

—————————————————————

          விருது – பட்டம், பரிசு; செவிமடுத்து – கேட்டு, உரவோய் – அறிஞ!

+++

மின்பொறித் தாக்குதல் மெய்யுற் றான்போல்

பின்புறம் நோக்கிலன் பேசா நாவினன் 

          ஏகினன் வடபுல ஏம கானன்; 130

          போகிய அவ்விசைப் புலவன் தானுறை

தங்கத் தேவன் தன்மனை குறுகிச்

`சிங்கம் என்னையிச் சிறியோன் பழித்தனன்;

என்னிசை இகழ்ந்து தன்னிசை புகழ்ந்தனன் 

          நின்னுரை கேட்டேன் நெளிந்ததென் மானம்!  135

          எந்நகர்ச் செலினும் எற்பணிந் தேற்றனர்;

இந்நகர் ஒன்றே இகழ்வுரை தந்தது;

தங்கத் தேவ! தலைகவிழ் நிலையில்

தொங்கச் செய்தனை! துளைத்தனை நெஞ்சம்’       

          செங்கண் சிவக்கச் செப்பினன் இவ்வணம்;    140

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்