தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை – புலவர் கா.கோவிந்தன்
இலக்குவனார் திருவள்ளுவன் 01 November 2024 No Comment (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.2 – புலவர் கா.கோவிந்தன்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 3 2.தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை தமிழர் , தென்னிந்திய மண்ணுக்குரியவர் ஓரின மக்களின் நாகரீகம், அவர் வாழும் மண்ணுக்கு உரியதாயின். அந்நாகரீகம், அம்மக்கள், பிற இனமக்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே வளர்ந்து முழுமை பெற்ற ஒன்றாகக் காணப்படுமாயின், அந்நிலைக்கு, அம்மக்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலை, அம்மக்கள் மீது செலுத்திய ஆட்சியின் விளைவே முழுமுதல் காரணமாம். ஓரின மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலையோடு தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்ததன் விளைவாகத் தோன்றிய ஒரு நாகரீகம், அம் மக்கள் வாழும் நில இயல் கூறுபாட்டுக் காரணம் அடிப்படையில் எழுந்ததேயல்லது, வென்று அடிமைகோடல், வாணிகம், மற்றும் பிற அறவழி மூலம் அம்மக்களோடு தொடர்பு கொண்டுவிட்ட வெளி நாட்டவரின் ஆதிக்க விளைவு போலும் வரலாற்றுக்கான அடிப்படையில் எழுந்ததாகாது. தொல்லூழிக் காலத்தில், மனித வ...