பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி)
பளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில்
எண்சீர் விருத்தம்
அமுதவல்லி: அதோ பாரடி மயிலே
அதோ பாரடி
மயிலின் அழகு பாரடி
இதோ பாரடி இனிமை
இன்னும் பாரடி
இருசிட் டிணைதல் பாரடி
கொஞ்சம் பாரடி கிளிகள்
கொஞ்சல் பாரடி
அணிலும் விரைதல் பாரடி
தஞ்சம் நாமடி இயற்கை
விஞ்சு மாமடி
இணைகள் கொஞ்சு மாமடி
அல்லி : இயற்கை தானம்மா நாட்டின்
இயற்கை தானம்மா
நமக்கு எதிரி தானம்மா
மயக்கம் ஏனம்மா மனத்தில்
குழப்பம் ஏனம்மா
மன்னர் நிலையைப் பாரம்மா
கொஞ்சம் பாரம்மா குலத்தை
எண்ணிப் பாரம்மா
குலப்பழி தவிர்க்கப் பாரம்மா
பஞ்சை நாமம்மா பழைமை
எதிர்த்தல் வீணம்மா
பழியை ஏற்றல் தீதம்மா
பதினாறுசீர் விருத்தம்
அமுதவல்லி: சோலையிலே காணடியோர்
மயிலு மாங்கே
சொல்லரிய ஊடலெனும்
ஊஞ்சல் தன்னில்
சொக்கிவிழும் ஆடவனை
ஆட்டு விக்கும்
சுழலும்விழி மனையாளாய்த்
துவண்டு நிற்கும்
அல்லி : பாலையிலே நெல்விளைக்க
முனைவார் போலப்
பாழான சமூகத்தின்
நிலையைக் கண்டும்
பாராளும் குலம்மாற்றும்
செயலை நெஞ்சில்
பற்றுதலும் நன்றாமோ
எண்ணிப் பார்ப்பாய்
அமுதவல்லி : காலையிலே இளம்பரிதி
கண்டு கண்டு
கதுப்பதிலே சிவப்பாகி
யிதழ்வி ரிக்கும்
கன்னியவள் தாமரையின்
காதல் தன்னை
கண்டித்து நிறுத்திடவும்
முனைவா ருண்டோ
மாலையிலே மேற்றிசையில்
மறைந்து செல்லும்
மன்னவனின் ஒளியழகை
எண்ணி யெண்ணி
மறித்துநாளும் பின்தொடரும்
மதிப்பெண் ணாளின்
மனங்குளிருங் காதலைத்தான்
மறுப்பா ருண்டோ
எண்சீர் விருத்தம்
அல்லி : மண்ணுலகில் காதல்தனை
மறுப்பா ரில்லை
மனிதயினங் காதலின்றேல்
தழைப்ப தில்லை
எண்ணுங்கால் மனிதயினம்
வேறா மன்றோ
எதனையும் விளைவெண்ணிச்
செய்த லாலே
நன்னடையை நல்கலுந்தான்
வேந்துக் கென்றே
நற்றமிழில் பாப்புனைந்த
புலவர் சொன்னார்
மென்னடையாய் நாமிதனை
மறத்த லாமோ
மேன்மையன்றிக் குலத்தாழ்வு
விளைக்க லாமோ
அமுதவல்லி : பகுத்துணவை உயிரோம்பும்
வாழ்க்கை யின்பம்
பாவையவள் காதலிலே
உண்டா மென்றே
வகுத்துரைத்த வள்ளுவனார்
பிறந்த மண்ணில்
வாழ்வியலில் காதல்தனை
ஒதுக்கல் நன்றோ
பகுத்துவைத்த நால்வருணம்
யாரைக் காக்க
பாரெல்லாம் வருணமின்றி
உயர்தல் கண்டோம்
உகுக்குமொரு துளிபோதும்
உமது கண்ணில்
உயிர்விடுத்துக் காதலொடுயாம்
வீழும் போழ்தில்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment