Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31

 






(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’ – 31

அவை சொற்கள் சேருங்கால் அவற்றைச் சேர்ப்பதற்குத் துணைபுரிவன, வினைச்சொல்லில் காலத்தைக் காட்டி நிற்பன, வேற்றுமை அறிவிக்கும் உருபுகளாகி வருவன, அசைகளாக நிற்பன, இசை நிறைத்து நிற்பன, தத்தம் குறிப்பால் பொருள் தருவன, ஒப்பில் வழியால் பொருள் செய்குந என எழுவகைப்படும். இவை சொற்களாக உருவாகி நிற்றல் மட்டுமன்றி, சொல்லுக்கு முன்னும் பின்னும் வரும். தம் ஈறு திரிந்தும் வரும்;  ஓரிடைச் சொல்லை அடுத்தும் வரும்.

  சொற்றொடர்களில்  நின்று பலவகைப் பொருள்களை அறிவிக்கும் சொற்களை எடுத்துக்கூறி அவை அறிவிக்கும் பொருள்களையும் தொல்காப்பியர் தந்துள்ளார். தொல்காப்பியர் காலத்தில் மொழியாராய்ச்சி பெற்றிருந்த உயர்நிலையை வெளிப்படுத்துவதற்குத் துணைபுரிவது அவர் செய்துள்ள ஆராய்ச்சி. அவர் தொகுத்துக் கொடுத்துள்ள சொற்களாவன:&

        மன், தில், கொன். உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று,    மற்றையது, மன்ற, தஞ்ச, அந்தில், கொல், எல், ஆர், குரை,     மா, மியா, இக, மோ, மதி, இகும், சின், அம்ம, ஆங்க                   (ஒப்புமை உணர்த்தாத) போல், யா, கா, பிற, பிறக்கு,  அரோ, போ, மாது, ஆக, ஆகல், ஔ, நன்றே, அன்றே,  அந்தோ, அன்றோ, எனா, என்றா, உந்து

இவை என்னென்ன பொருள் உணர்த்தும் என்பதனைத் தொல்காப்பியர் தெளிவுறக் கூறியுள்ளார். அவர் காலத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து இவற்றைப் பொறுக்கித் தந்துள்ளார். இவற்றால் அவர் காலத்துத் தமிழ் மொழியும் இலக்கியமும் எவ்வாறு இருந்தன எனத் தெளிவுறத் தெரியலாம். இவற்றுள் பல இன்றும் இருவகை வழக்கினும் காணப்படும்.

  இங்கு எடுத்துக் காட்டப்பட்டவையே யன்றி இன்னும் பிறவும் வழங்கலாம். பரந்துபட்ட மொழிக் கடலுள் காணப்படும் யாவற்றையும் தொகுத்தளித்தல் இயலாத ஒன்று எனத் தெளிந்த தொல்காப்பியர்,

        கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்

        கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே

         (தொல்காப்பியம், சொல்.296)

என்று கூறி முடித்துள்ளார். அக்காலத்திலேயே தமிழர் உயர் வளர்ச்சி பெற்றுள்ள நிலையை இஃது எடுத்துக்காட்டும்.

  சொற்கள் உருவாகிப் பொருள் பயத்தற்கு அடிப்படையாய் இருப்பனவற்றை மொழி ஆய்வாளர் வேர் என்றும் அடி என்றும் கூறுப. தொல்காப்பியர் அவற்றை உரிச்சொல் என்பார். சொற்கள் தோன்றுவதற்கு உரியனவாய் இருப்பதனால் உரியென்று பெயரிட்டார் போலும்.

 மொழியற்றிருந்த பழங்கால மாந்தர் தம் சூழ்நிலை துணையாகவே மொழியை உருவாக்கிக் கொண்டனர். சொற்கள் தோன்றுவதற்கு அடிப்படையாய் இருந்தன;  ஒலி, எண்ணங்களை வெளிப்படுத்தக் கொண்ட கருத்து, உலகியல், பண்புகள், நிகழ்ச்சிகள் முதலியன. தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட சொற்கள் ஒன்றே பலவாம் தன்மைக்குரியனவாய் இருந்தன.

 உரை என்பது முன்னிலை ஏவலாயும், தொழிற்பெயராயும், வினையின் பகுதியாயும் பயன்பட்டது. பின்னர் அதுவே உரைக்க, உரைத்தல், உரைத்தான் என வளர்ச்சியுற்றது. உரை என்பதற்குச் சொல்  பேச்சு, பொருள் (அர்த்தம்) முதலிய பொருள்கள் உண்டாயின. உரை, இயம்பு, கூறு, விளம்பு, நவில், செப்பு எனும்  பல சொற்கள், சொல் எனும் பொருளுக்குரியவாயின. இவ்வாறு மொழி தோன்றி உருவாகி வந்துள்ளதை உரிச்சொல்லுக்குரிய இயல்பாக விளங்க உரைத்துள்ளார் தொல்காப்பியர்.

        உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை

        இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்

        பெயரினும் வினையினும் மெய்தடு மாறி

        ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்

        பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்

        பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்

        தத்தம் மரபின் சென்றுநிலை மருங்கின்

        எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்.

        (தொல்காப்பியம், சொல்.297)

மொழி தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைந்த உரிச் சொற்களுள் எளிதில் பொருள் விளங்காதனவற்றை மட்டும் எடுத்துக்கூறி விளக்கியுள்ளார். இவ் வுரிச்சொல் ஆராய்ச்சியும் தமிழ்மொழியின் வளர்ச்சி  மேம்பாட்டை அறிவுறுத்தும்.

  அவர் தொகுத்துக் கொடுத்துள்ள உரிச்சொற்களாவன:- உறு, தவ, நனி, உரு, புரை, குரு, கெழு, செல்லல், மல்லல், ஏ, உகப்பு, உவப்பு, பயப்பு, பசப்பு, இயைபு, இசைப்பு, அலமரல், தெருமரல், மழ, குழ, சீர்த்தி, மாலை, கூர்ப்பு, கழிவு, கதழ்வு, துனை, அதிர்வு, விதிர்ப்பு. வார்தல், போகல், ஒழுகல், தீர்தல், தீர்த்தல், கெடவரல், பண்ணை, தட, கய, நளி, பழுது, சாயல், முழுது, வம்பு, மாதர், நம்பு,  மேவு, ஓய்தல், ஆய்தல், நிகழ்த்தல், சாஅய், புலம்பு, துவன்று, முரஞ்சல், வெம்மை, பொற்பு, ஏற்றம், பிணை, பேண், பணை, படர், பையுள், சிறுமை, எய்யாமை, நன்று, தா, தெவு, தெவ்வு, விறப்பு, உறப்பு, செறிவு, கம்பலை, சும்மை, கலி, அழுங்கல், கழும், செழுமை, வளன், விழுமம், கருவி, கமம், அரி, கவவு, துவைத்தல், இலைத்தல், இயம்பல், இரங்கல், இலம்பாடு, ஒற்கம், ஞெமிர்தல், கவர்வு, சேர், வியல், பேம், நாம், உரும்,வய, வாள், துய, உர, உசா, உயா, கறுப்பு, சிவப்பு, நொசிவு, நுழைவு, நுணங்கு, புனிறு, நனவு, மதவு, யாணர், அமர்தல், யாண், பரவு, பழிச்சு, கடி, ஐ, முனைவு, வை, எறுழ் என்பனவாம்.

  இவ்வாறு பெயர் வினை இடை உரி என்று உருவாகிய சொற்களேயன்றி இரண்டும் இரண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்தும் உருவாகி ஒருசொற்போன்று நின்று பொருள்  விளக்கம் தருவதுண்டு, இவை தொகைச்சொற்கள் எனப்படும். இவை வேற்றுமைத் தொகை, உவமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று ஆறு வகைப்படும்.

 இத் தொகைச் சொற்களை உருவாக்கும் முறையால் புதியனவற்றைப் படைத்து மொழிவளத்தைப் பெருக்க இயலும்.

 சொற்றொடர்களில் நிற்கும் சொற்கள் தாம் வெளிப்படையாக விளக்கும் பொருளேயன்றி   வேறு பொருளையும் தரும் வகையில் சொற்றொடர் அமையும்.

  கூரியதோர் வாள்மன் என்னுங்கால் வாள் முன்பு கூரியதாக இருந்தது; இப்பொழுது அவ்வாறு இன்று என்னும் பொருளைத் தரும்.

 தானே கொண்டான் என்றால் பிறர் கொண்டிலர் என்னும் பொருளைத் தரும்.

 சாத்தனும் வந்தான் என்றால் கொற்றனும் இனி வருவான் என்றோ, முன்பு வந்தான் என்றோ பொருள் தரும்.

 இவற்றை எச்சத்தொடர் என்பர்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்