இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29
10 March 2023
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’ – 29
சொற்களை ஓரெழுத் தொருமொழி என்றும், ஈரெழுத் தொருமொழி என்றும், தொடர் மொழி என்றும் பகுத்துள்ளார். இப்பகுப்புத் தமிழியல்புக்கு ஒத்ததேயாகும். சொற்களால் திணை, பால், எண், இடம் அறியக்கூடும். ஆகவே, திணை வகையால் சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று பகுக்கப்பெற்றுள்ளன. இப் பகுப்பும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாகும். பால்வகையால் ஆண், பெண், பலர், ஒன்று, பல என ஐவகைப்படும். ஆண், பெண், பலர் என்பன உயர்திணைக்கும், ஒன்று, பல என்பன அஃறிணைக்கும் உரியன. எண் பாலோடு தொடர்புடையன. திணையும் பாலும் தமிழில் இயற்கை நெறியை ஒட்டிப் பகுக்கப்பட்டுள்ளன. செயற்கை முறையில் சில மொழிகள் கொண்டுள்ளமை போல் தமிழ் கொள்ளவில்லை. ஆண்பால் சொல்லெல்லாம் ஆண்தான்; பெண்பால் சொல்லெல்லாம் பெண்தான். ஆணும் பெண்ணும் சேர்ந்த பொதுச்சொல் பலர்பால். உயர்திணையில் ஒருவர்க்கு மேற்பட்டு வந்தால் பலர்பாலே.
தொல்காப்பியர் சொற்களை ஆடூஉ அறிசொல், மகடூஉ அறிசொல், பல்லோர் அறியும் சொல், ஒன்று அறி சொல், பல அறிசொல் எனப் பகுத்துள்ளார்..
திணை பால்களை வினைகளைக்கொண்டு எளிதாக அறியலாம். வினைகளின் இறுதியில் நிற்கும் எழுத்துகள் பால்களை அறிவுறுத்தி நின்றன. னகர ஒற்று ஆண்பாலையும், ளகர ஒற்றுப் பெண்பாலையும், ரகர ஒற்று, பகரம், மார் என்பன பலர்பாலையும், து, று, டு என்பன ஒன்றன்பாலையும், அ, ஆ, வ என்பன பலவின்பாலையும் அறிவிக்கும். வழக்கினுள் உயர்த்திக் கூறுமிடத்து ஒருவரையும் ஒன்றனையும் பன்மைப் பாலால் கூறுதல் அன்றே இருந்தது.
சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக இலக் கண முறையில் பகுத்திருந்தனர்.
பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் முதன்மைப் பகுப்பாய் இருந்தன. இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அவற்றை அடுத்துப் பகுக்கப்பட்டன.
இப் பகுப்புகள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்துள்ளன.
சொல் எனப் படுப பெயரே வினைஎன்று
ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே (தொல்&சொல்&158)
என்றும்,
இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப
(தொல்&சொல்&159)
என்றும் கூறியுள்ளமையை நோக்குக.
பெயர்கள் உயர்திணைப் பெயர்களென்றும் அஃறிணைப்
பெயர்களென்றும் இருதிணைக்கு முரிய பெயர்களென்றும் பகுக்கப்பட்டுள்ளன.
உயர்திணைப் பெயர்களுள் உவன், உவள், உவர் ஆயவை அன்று வழக்கிலிருந்தன. நம்பி, நங்கை, மாந்தர், மக்கள் ஆயவையும் அன்றே வழக்கிலிருந்தன.
நிலம், குடி, குழு, வினை, உடைமை, பண்பு, முறை, சினை, திணை ஆய இவை யடியாகப் பெயர்கள் தோன்றியிருந்தனவேயன்றி இன்றுபோல் சாதி காரணமாகப் பெயர்கள் தோன்றி வழங்கிடவில்லை என்பது அறியத்தக்கது.
கள் என்னும் விகுதி அஃறிணையில் பன்மையுணர்த்தப் பயன்பட்டதேயன்றி இன்றுபோல் உயர்திணைப் பன்மையும் சிறப்பும் உணர்த்தப் பயன்பட்டிலது.
இருதிணைக்கும் உரிய பெயர்களை அவற்றின் வினையால்தான் இன்ன திணையென்று அறிதல் வேண்டும்.
சாத்தன் வந்தான் என்றால் உயர்திணை.
சாத்தன் வந்தது என்றால் அஃறிணை.
முன்னிலைப் பெயர்கள் நீ, நீயிர் என்பனவே, ஒருமைக்கு நீ என்பதும் பன்மைக்கு நீயிர் என்பதும் ஆம். பன்மையில் இன்று வழங்குகின்ற நீவிர், நீங்கள், அன்று இல்லை.
பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்று வருதலே அவற்றிற்குரிய சிறப்பிலக்கணம். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே ஏழு வேற்றுமைகள் உருவாகி வழக்கிலிருந்தன. எட்டாம் வேற்றுமை விளி என்று அழைக்கப்பட்டு வேற்றுமைகளுடன் எண்ணப் படாமல் இருந்துள்ளது.
வேற்றுமை தாமே ஏழென மொழிப (தொல்&சொல்&62)
விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே
(தொல்.சொல்.63)
என்று கூறியுள்ளமை நோக்குக. தொல்காப்பியர்தாம் விளியையும் வேற்றுமையுடன் கூட்டி வேற்றுமை எட்டு என்று கூறியவர். வேற்றுமைகளை அவற்றின் உருபின் பெயரால் அழைத்துள்ளார். அவர் கூறும் முறையை நோக்கினால், அவர்க்கு முன்பே, ஐ வேற்றுமை, ஒடு வேற்றுமை, கு வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை என அழைக்கப்பட்டன என்று தெளியலாம். முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என அழைக்கப்பட்டுள்ளது.
ஒரு வேற்றுமை யுருபு வேறொரு வேற்றுமைப் பொருளில் பயன்படுத்தப்படுதலும் உண்டு.
யாதன் உருபின் கூறிற்று ஆயினும்
பொருள்செல் மருங்கில் வேற்றுமை சாரும்.
(தொல்&சொல்&106)
வேற்றுமை உருபுகள் மறைந்து நின்று வேற்றுமைப் பொருளை வெளிப்படுத்தலும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தொன்றுதொட்டு வரும் நெறியாகும்.
கருத்துகளை அறிவிப்பதற்கு இன்றியமையாது வேண்டப் படுவது வினையே. வினைச்சொல்லே முதலில் தோன்றியதாக இருக்கலாம். வினைச்சொல்லுக்குரிய சிறப்பிலக்கணம் வேற்றுமை ஏலாமையும் காலம் காட்டுதலும் ஆகும். வினைச்சொல் வேற்றுமையை ஏற்குமேல் அது பெயர்ச்சொல்லாய்விடும். வந்தான் எனும் வினை வந்தவனைக் கண்டேன் என்று கூறுங்கால் ஐ உருபை ஏற்று, வந்த ஒருவனைக் குறிக்கும் பெயராக மாறியுள்ளமை காண்க. உருபேற்ற வினை வினைப் பெயர் என்றும், வினையாலணையும் பெயர் என்றும் அழைக்கப்படும். வினைச்சொல் காலத்தை அறிவிக்குங்கால் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் அறிவிக்கும். அவ்வாறு அறிவிக்கப்படும் காலம் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூன்றாகக் கொள்ளப்பட்டது.
காலம் தாமே மூன்றென மொழிப என்பதனால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே இப் பகுப்புமுறை ஏற்பட்டுள்ளது என்று அறியலாம்.
காலம் உணர்த்தும் முறைபற்றித் தொல்காப்பியர் ஆராய்ந்து கூறாது விட்டுவிட்டனர். அவ்வாறு கூறாததனால் வினைச்சொற்கள் காலம் உணர்த்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்று சிலர் கூறுவது பொருத்தமின்று. வினைச்சொல்லைக் காலக்கிளவியென்றே தொல்காப்பியர் அழைத்துள்ளார். காலத்தை உணர்த்தும் கடப்பாடு இல்லாத ஒன்றைக் காலக்கிளவி என அழைத்தல் பொருந்தாதன்றோ?
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Comments
Post a Comment