Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி

 




(தமிழ்நாடும் மொழியும் 30: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி
)

8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி

திருமலைக்குப் பின்னர் அவனது பேரன் முதலாம் சொக்க நாதன் பட்டமேறினான். இவன் காலத்தில் திருச்சி தலைநகராய் விளங்கியது. தஞ்சாவூர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் கொங்கு நாட்டில் சேலம், கோயம்புத்தூர் பகுதிகள் மைசூருக்குச் சொந்தமாயின. இவனுக்குப் பின்னர் நான்காம் வீரப்பன் பட்டம் பெற்றான். இவனது மகனே இரண்டாம் சொக்க நாதன். சொக்க நாதன் அரசனான பொழுது வயதிற் சிறுவனாக விளங்கியதால், இவனது பாட்டி மங்கம்மாள் திறம்பட நாட்டை ஆண்டாள். இவளது ஆட்சிக் காலம் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த காலமாகும். தஞ்சையும், திருவாங்கூரும் மங்கம்மாள் ஆட்சியின் கீழ் விளங்கின. ஆனால் கி. பி. 1702-இல் சேதுபதி மன்னன் மங்கம்மாளைப் போரில் வென்று, தனது நாட்டை நாயக்கர் ஆட்சியினின்றும் விடுவித்தான். மேலும் புதுக்கோட்டைப் பகுதியையும் சேதுபதி வென்று தனது மைத்துனன் இரங்கநாதனுக்குச் சொந்தமாக்கினான்.

கி. பி. 15ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தை ஓர் பேரிருள் விழுங்கக் காத்திருந்தது. அந்தப் பேரிருளினின்றும் தமிழகத்தைக் காத்தவர் நாயக்கரே. அஃதாவது அவர் காலத்திலே ஐரோப்பியரும் முகமதியரும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தைத் தமதாக்கிக் கொள்ள விரைந்தனர். அக்காலை தமிழகத்தை அவரினின்றும் காத்தவர் நாயக்கரே. அரசியர் மங்கம்மா, மீனாட்சி, ஆகிய இருவர் காலத்திலும், முகமதியர் நமக்குக் கொடுத்த தொல்லைகள் எல்லையற்றன. அக்காலை மங்கம்மாள் தளவாய் நரசப்பையன் உதவியுடன் அம்முகமதியரை முறியடித்தாள். ஆனால் பிற்காலை, முறியடிக்கப்பட்ட அதே முகமதியராலேயே மீனாட்சி வஞ்சிக்கப்பட்டாள். நாயக்க வமிசம் நசிந்தது.

சங்கக் காலத்திலே தமிழகத்தை மூவர் ஆண்டனர். ஆனால் நாயக்கரோ பிற்காலத்தில் தமிழ் நாட்டை ஒருசேர ஆண்டனர். அவர்தம் ஆட்சியின் கீழ் நெல்லை, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சை, தென்னார்க்காடு, செங்கல்பட்டு ஆகிய அத்தனை மாவட்டங்களும் இருந்தன. இது மட்டுமா? மைசூரும், கொங்கு நாடும் கூட அவரிடம் இருந்தன. சத்தியமங்கலம், தாராபுரம், ஈரோடு முதலிய இடங்களிலும் கூட நாயக்கரின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

நாயக்கர் ஆட்சியில் ஆட்சி முறைகள் நன்கு வகுக்கப்பட்டிருந்தன. எனவே ஆட்சியும் நன்கு நடைபெற்றது. தளவாய், இராயசம், பிரதானி என்போர் இக்கால அமைச்சர் போல் அக்காலத்தில் ஆட்சி புரிந்தனர். தளவாய் அரிய நாதர், நரசப்பர் போன்றோர் இத்தகைய அமைச்சராவர். பதினேழாம் நூற்றாண்டின் இடையில் நாயக்க அரசின் ஆண்டு வருமானம் 1¼ கோடி உரூபாயாகும். நாயக்கர்கள் அரசுக்கட்டிலில் ஏறிய காலத்தில் தமிழகம் குழப்பத்திலும், கொள்ளையிலும், கொலையிலும் மிதந்துகொண்டு இருந்தது. அக்காலத்தில் தம் ஆட்சித் திறத்தாலும், அறிவின் உரத்தாலும் தமிழகத்தை அக்கொள்ளை முதலியவற்றினின்றும் காத்து நல்லாட்சியை ஏற்படுத்தினர்.

நாயக்கரினால் தமிழகம் அடைந்த பயன்களுள் தலையானது கோவிலே. அவர்கள் காலத்திலேதான் அழகொழுகும் சிற்பங்கள், ஓவியங்கள் பொதிந்த பற்பல கோவில்கள் தமிழகத்தில் எழுந்தன. இன்றுள்ள மதுரை மீனாட்சி கோவிலும், ஆயிரக்கால் மண்டபமும், மாலும், இராய கோபுரமும் நாயக்கர் கட்டியவையாகும். மதுரையில் மட்டுமல்ல; நெல்லை, இராமநாதபுரம், கோவை, சேலம், திருச்சி முதலிய ஏனைய மாவட்டங்களிலும் நாயக்கரால் நிறுவப்பட்ட கோவில்கள் நிறைந்துள்ளன. சீரங்கக் கோயில், பேரூர்க் கோயில் எல்லாம் நாயக்கர் காலத்தில்தான் எழுந்தன. அவினாசியில் உள்ள கோவிலும் இவர்கள் காலத்தில் தோன்றியதே.

சமயப் பற்றும், கடவுள் பக்தியும், மிகுதியாக உடையவர்களாக நாயக்கர்கள் திகழ்ந்தனர். ஆனால் அவர்கள் சமய வெறி கொண்டு பிற சமயங்களைத் துன்புறுத்தவில்லை. எம்மதமும் சம்மதமே எனக் கொண்டுதான் வாழ்ந்தனர். பிறமதக் கோவில்களுக்கு மானியமும், நன்கொடைகளும் இவர்களால் தாராளமாக வழங்கப்பட்டன. அரசி மங்கம்மாளால் அமைக்கப்பட்ட பெருவழிகளும், வெட்டப்பட்ட குளங்களும், கால்வாய்களும், கட்டப்பட்ட சத்திரம் சாவடிகளும், இன்றும் நாயக்கர்தம் ஆட்சிச் சிறப்பை நன்கு அறிவிக்கின்றன.

செஞ்சிவேலூர்தஞ்சை நாயக்கர்கள்

மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடத்தியது போலவே செஞ்சி, தஞ்சை, வேலூர் இவ்விடங்களிலும் நாயக்கர்கள் தங்கள் ஆட்சியை நிறுவி, பெயர் பெற்றவர்களா யிருந்தார்கள். செஞ்சியை ஆண்ட நாயக்கர்களில் ஒருவனான கோப்பண்ணா என்பவன் தில்லையில் கோவிந்தராசர் சிலையை நிறுவினான். கி. பி. 14-ஆம் நூற்றாண்டிலிருந்தே செஞ்சியை ஆண்டுவந்த நாயக்கர்களை கி. பி. 1648-ஆம் ஆண்டு பீசப்பூர் சுல்தான் தோற்கடித்து செஞ்சியைக் கைப்பற்றினான். செஞ்சியை ஆண்டவர்களில் கிருட்டிணப்ப நாயக்கனும் ஒருவன் ஆவான். இவன் காலத்தில் செஞ்சிக்கு வந்த போர்ச்சுக்கீசியப் பாதிரியார் பிமெண்டா என்பவர் செஞ்சியானது இலிசுபனைப் போன்று பெரியதொரு பட்டணமாய் விளங்கியதாக எழுதி உள்ளார். மேலும் கிருட்டிணப்பன் காலத்தில் (இ)டச்சுக்காரர் கடலூரில் தங்கள் அலுவலகம் ஒன்றினை அமைத்தனர். வேலூரை ஆண்ட நாயக்கர்களில் முற்பட்டவன் வீரப்ப நாயக்கன் ஆவான். இவன் மகன் சின்ன பொம்மன் (கி. பி. 1549-1582) சிறந்த வீரனாவான். எனினும் இவன் செஞ்சி நாயக்கனுக்குக் கீழ்ப்பட்டிருந்தான். இவனுக்குப் பின் பட்டமேறிய இலிங்கம நாயக்கன் செஞ்சிப் பிடியிலிருந்து வேலூரை மீட்கத் திட்ட மிட்டான். ஆனால் செஞ்சிப் படைத் தலைவன் சென்ன நாயக்கன் கி. பி. 1604-இல் இலிங்கமனை வென்றான். இப் பெரு வீரன் பெயரால்தான் சென்னைப் பட்டினம் அவனது மகனால் நிறுவப்பட்டது. விசய நகர மன்னன் அச்சுத நாயக்கன் காலத்தில் தஞ்சையில் நாயக்க அரசு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சையை முதலில் ஆண்டவன் அச்சுதனின் சகலனான செவ்வப்பன் ஆவான். தஞ்சை நாயக்கர்களில் சிறந்த வீரனாகவும், அரசனாகவும், எழுத்தாளனாகவும் விளங்கியவன் இரகுநாத நாயக்கன் ஆவான். தெலுங்கு, வட மொழி இவ்விரு மொழிகளிலும் இவன் பல நூல்களை எழுதி ஏற்றம் பெற்றான். கி. பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பீசப்பூர் சுல்தானின் தூண்டுதலின் காரணமாய் மராட்டிய மன்னனான வெங்காசி (சிவாசியின் சகோதரன்) நாயக்கர் அரசை ஒழித்து, மராட்டிய அரசாட்சியைத் தஞ்சையில் ஏற்படுத்தினான். இவன் கி. பி. 1675-1712 வரை ஆண்டான். இவனால் நிறுவப்பட்ட மராட்டிய அரசு தஞ்சையில் கி. பி. 1855 வரை நீடித்திருந்தது. இவர்களின் கலையார்வத்தால் தஞ்சை அக்காலத்தில் ஒரு கலைக்கூடமாக விளங்கியது.

தமிழரும் தெலுங்கரும்

தமிழ்நாட்டிலே தெலுங்கரும், அவர்தம் பழக்க வழக்கங்களும் வெகுவாகப் பரவிய காலம் விசய நகரப் பேரரசின் காலமேயாகும். விசய நகரப் பேரரசின் ஆட்சிக்குத் தமிழகம் அடங்கிய காரணத்தால், விசயநகரப் பேரரசின் சார்பாளர்களாகவும், ஆளுநர்களாகவும் பல தெலுங்கர்கள் (ஆந்திரர்) தமிழகத்திற்கு வந்து குடியேறினர். நாளடைவில் அவர்கள் பரம்பரை பெருகிற்று. அதோடு தெலுங்கர்கள் பலர் போர் வீரராகவும், வணிகராகவும், தொழிலாளராகவும் வந்து குடியேறினர். தமிழகத்திற் புகுந்த இவர்கள் தெலுங்கு நாட்டுப் பழக்க வழக்கங்கள் பலவற்றைத் தமிழ் மக்களிடையே பரப்பிவிட்டனர்.

தமிழகத்திற் புகுந்த தெலுங்கர்கள் பல கோவில்களையும், கல்விக் கழகங்களையும் கட்டினதாகத் தெரிகிறது. மதுரைக்கே பெருமை தந்துகொண்டிருக்கின்ற மீனாட்சியம்மன் கோவிலும், மகாலும் நாயக்கர் கட்டியவையே. தாடிக்கொம்பு, தாரமங்கலம், திருவரங்கம், பேரூர் முதலிய பலவிடங்களிலே தெலுங்கரால் கட்டப்பட்ட கோவில்கள் இன்றும் கவினுடன் காட்சியளிக்கின்றன.

விசய நகரப் பேரரசின் காலத்தில் நிலவிய கல்லூரிகளைப் பற்றிய குறிப்புகள் அக்காலத்திய பாதிரிகளின் குறிப்புகளில் காணப்படுகின்றன. அருணகிரி, தாயுமானார், அதிவீரராமபாண்டியன் ஆகியோர் விசய நகரப் பேரரசின் காலத்திலே வாழ்ந்த தமிழ்ப் புலவர்களாவர். மேலும் தெலுங்கர்கள் மிகுதியாகக் குடியேறிய சிற்றூர்கள் இன்று தென்பாண்டி நாட்டில் ஏராளமாக உள. நாயக்க மன்னரால் வெட்டப்பட்ட குளங்களும் தமிழகத்தில் உள.

தமிழ் நாட்டில் கிறித்தவமும், இசுலாம் மதமும் நன்கு பரவியது விசய நகரப் பேரரசின் காலத்தேதான். கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் போந்த நோபிலிப் பாதிரிக்கு ஆதரவு காட்டிய தெலுங்கு மன்னர்கள் மூன்றாம் கிருட்டிணப்ப நாயக்கன், இராமச்சந்திர நாயக்கன், செலபதி நாயக்கன் முதலியோராவர்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue