ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27. தொடர்ச்சி)
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28
4. குலமும் கோவும் தொடர்ச்சி
சனநாத சோழன்
இராசராசனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய சனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.
“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு”
என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி சனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராசராசன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் சனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.84 சனநாதநல்லூர் என்னும் மறுபெயர், சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள ஆடூருக்கும், தென் ஆர்க்காட்டைச் சேர்ந்த வயிரபுரம் என்னும் வயிரமேக புரத்துக்கும், செங்கற்பட்டு நாட்டைச் சேர்ந்த வாயலூர்
என்னும் திருப்பில வாயிலுக்கும் வழங்குவதாயிற்று.85
பட்டுக்கோட்டையிலுள்ள சோழபுரம் என்னும் மும்முடிச் சோழபுரத்தின் வழியாகச் சென்ற சாலை, சனநாதன் பாதை என்று பெயர் பெற்றது.86
மதுரையின் மருங்கிலுள்ள தேனூர், சனநாத சதுர்வேதி மங்கலமாயிற்று.87
மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் சனநாதபுரம் என்ற மறு பெயர் பெற்றது.
சிவபாத சேகரன்
திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலைக்குத் தெந்கே ஐந்து கல் அளவில் சிவாயம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. சிவாயம் என்பது சிவபாத சேகரபுரம் என்ற பெயரின் சிதைவாகும். அங்குள்ள கோயில் திருவாலீச்சுரம் என்ற பெயருடைய தென்பது சாசனத்தால் விளங்கும்.89
உய்யக் கொண்டான்
உய்யக்கொண்டான் என்பது இராசராசரின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. இப் பெயர் தமிழ் நாட்டு மலைகளோடும், கால்களோடும் மருவி நிற்கக் காணலாம். சோழ நாட்டில் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்றாகிய கற்குடி என்பது உய்யக் கொண்டான் திருமலை என்று பெயர் பெற்றது. இன்னும் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் காவிரியாற்றினின்றும் கிளைத்துச் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால் இம்மன்னன் பெயரையே தாங்கி நிலவுகின்றது.
சோழபுரம் என்னும் பெயருடைய ஊர்களில் ஒன்று வடஆர்க்காட்டு வேலூருக்குத் தெற்கே எட்டு கல் தூரத்தில் உள்ளது. அதன் பழம் பெயர் காட்டுத்தும்பூர் என்பதாகும்.90 இராசராச சோழன் அவ்வூரில் இராச ராசேச்சரம் என்னும் சிவாலயம் கட்டியதோடு, ஊரின் பெயரையும் உய்யக்கொண்டான் சோழபுரம் என மாற்றிவிட்டதாகத் தெரிகின்றது.91
இப்பொழுது ஆலயம் பழுதுற்றிருக்கின்றது. ஊர்ப் பெயரும் சோழபுரம் எனக் குறுகிவிட்டது.
உலகமாதேவி
இராசராசன் தேவியருள் சிறப்புற்று விளங்கியவள் உலகமாதேவி. அவள் பெயரால் அமைந்த நகரம் தென் ஆர்க்காட்டிலுள்ள உலகமாதேவிபுரம், அவ்வூர்ப் பெயர் ஒலகபுரம் எனவும், ஒலகாபுரம் எனவும் மருவி வழங்குகின்றது.93 செங்கற்பட்டு நாட்டிலுள்ள மணிமங்கலம் என்னும் ஊர் உலகமாதேவி சதுர்வேதி மங்கலம் என்று சாசனங்கள் கூறும்.94
திருவையாற்றுக் கோயிலில் உள்ள உத்தரகைலாசம் என்னும் உலோகாமாதேவீச்சரம் இம் மாதேவியாற் கட்டப்பட்டதாகும்.95
திரிபுவன மாதேவி
திரிபுவன மாதேவி என்பது மற்றொரு தேவியின் பெயர். இவளே இராசேந்திரனைப் பெற்ற தாய். புதுவை நாட்டில் உள்ள திரிபுவனி என்னும்
ஊர் இவள் பெயர் தாங்கி நிற்பதாகும். அவ்வூரின் பெயர் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதன் சிதைவாகத் தெரிகிறது.96
சோழமாதேவி
இன்னொரு தேவியாகிய சோழ மாதேவியின் பெயர் தாங்கி நிலவும் உடுமலைப்பேட்டை வட்டத்தில் சோழமாதேவி என்னும் ஊர் ஒன்று உண்டு.
அது முற்காலத்தில் சோழமாதேவி நல்லூர் என வழங்கிற் றென்பது சாசனங்களால் அறியப்படும்.97 அங்குள்ள குலசேகர ஈச்சுரம் என்னும் சிவாலயத்திற்கும்,அதன் அருகே அமைந்த திருமடத்திற்கும் சோழ மன்னர் அளித்த நன்கொடை கல்வெட்டுகளால் விளங்குகின்றது.
திருச்சி நாட்டில் உத்தம சேரிக்கு அண்மையில் சோழமாதேவியின் பெயரால் அமைந்த சதுர்வேதி மங்கலம் ஒன்றுள்ளது. அது முன்னாளில
விளாநாட்டைச் சேர்ந்த பிரமதேயமாக விளங்கிற்றென்று சாசனம் கூறும்.
இப்பொழுது அவ்வூர் சோழமாதேவி என்றே வழங்குகின்றது.98
இராசராச சோழன்
இராசராசனுக்குப் பின்பு அரசுரிமை பெற்றான் அவன் மைந்தனாகிய இராசேந்திரன். தஞ்சைச் சோழர் என்று சொல்லப்படும் இடைகாலத்துப் பெருஞ் சோழ மன்னர் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டு தலைசிறந்து விளங்கியவன் இவனே. இவன் காலத்தில் சோழர் பேரரசு உச்சநிலை அடைந்திருந்தது. இவன் புகழ், பாரத நாட்டின் எல்லை கடந்து, சிங்களம், கடாரம், மாநக்கவாரம் முதலிய பன்னாடுகளிலும் பரவி நின்றது.
விருதுப்பெயர்கள்
இம் மன்னன் தான் பெற்ற வெற்றியின் அறிகுறியாகச் சில பட்டப் பெயர்களை மேற்கொண்டான். அவற்றுள் முடிகொண்டான், கடாரம் கொண்டான் என்னும் விருதுப் பெயர் மூன்றும் ஊர்ப் பெயர்களிலே விளங்குகின்றன.
முடிகொண்ட சோழன்
சோழர் ஆட்சியில் அமைந்த கங்கபாடி என்னும் நாடு இவ்வரசன் காலத்தில் முடிகொண்ட சோழ மண்டலம் என்று பெயர் பெற்றது.99 பழம் பெருமை வாய்ந்ததும், பாடல் பெற்றதுமாகிய பழயாறை என்ற நகரம் முடிகொண்ட சோழபுரம் என வழங்கலாயிற்று.100 இந்நகரம் காவிரியினின்றும் பிரிந்து செல்லும் முடிகொண்டான் என்னும் கிளையாற்றின் கரையில் அமைந்துள்ளது. நெல்லை நாட்டின் வழியாகச் செல்லும் பொருநையாறு முடிகொண்ட சோழப் பேராறு என்று அக்காலத்துச் சாசனங்களில் குறிக்கப்பட்டது.101
இன்னும், சிதம்பர வட்டத்திலுள்ள முடிகண்ட நல்லூரும், மாயவர வட்டத்திலுள்ள முடிகொண்ட நல்லூரும், பாண்டி நாட்டுச் சிவகங்கை வட்டத்திலுள்ள முடிகுண்டம் என்னும் ஊரும் இம் மன்னனது விருதுப் பெயரைப்பெற்று விளங்குவனவாகும். கோவை நாட்டில் கொள்ளக்கால் வட்டத்தில் முடிகுண்டம் என்ற ஊரொன்று உண்டு. சாசனங்களில் முடிகொண்ட சோழபுரம் என்று குறிக்கப்படும் ஊர்ப் பெயரே இப்போது முடிகுண்டமெனக் குறுகியுள்ளது. முடிகொண்ட சோழீச்சுரம் என்னும் சிவாலயம் அவ்வூரிற் காணப்படுகின்றது. அஃது இராசேந்திர சோழன் காலத்தில் எழுந்த திருக்கோயில் என்று கொள்ளலாகும். அவ்வூரில் கோயில் கொண்ட தேசிப் பெருமாள் என்னும் திருமாலுக்குக் காவிரியாற்றின் வட கரையிலுள்ள பதினெட்டு ஊர் வணிகரும், தென் கரையிலுள்ள பதினெட்டு ஊர் வணிகரும் அளித்த நிவந்தங்கள் சாசனத்தால் அறியப்படுகின்றன.
இன்னும் அவ்வூரில் நகரசினாலயம் என்று பெயர் பெற்ற சமணக் கோயிலும் இருந்தது. சந்திர பிரப தீர்த்தங்கரர் அவ்வாலயத்தில் எழுந்தருளி யிருந்ததாகச் சாசனம் கூறும்.102 எனவே, முடிகொண்ட சோழபுரம் சைவம், வைணவம் சமணம் என்னும் மும்மதங்களும் சிறந்து விளங்கிய நகரமாகத் தோன்றுகின்றது.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக்குறிப்பு
84. 386 / 1922.
85. 278 / 1910; 256 / 1913; 364 /1908.
86. 204 / 1908.
87. 132 / 1910.
88. 171 / 1894.
89. 47 / 1913.
90. 346 / 1901.
91. 421 / 1902.
92. ஆவி என்பது குளம். இராசராசன் வெட்டிய குளத்தின் பெயர் ஊருக்கு அமைந்தது போலும்.
93. 127 / 1919.
94. 7 / 1892.
95. தெ.இ.க., தொகுதி 2, பக்.7
96. 196 / 1919
97. 222 / 1909.
98. 576 / 1908.
99. 490 / 1911.
100. 271 / 1927.
101. 642 / 1916.
102. செ.மா.க., பக்கங்கள் 554-556.
Comments
Post a Comment