சுதந்திரச் சங்கொலி கேட்குதடா!- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
சுதந்திரச் சங்கொலி கேட்குதடா!
சங்கொலி எழுந்தது சங்கட மழிந்தது
தைரியம் கொள்வாய் தமிழ் மகனே!
கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும்
கவலையெ லாம்விடு தமிழ் மகனே!
கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும்
குறுகிப் படுத்திடல் இனிவேண்டா!
பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும்
பேதமை விடுவாய் தமிழ் மகனே!
திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும்
தீனர்க்க பயக்குரல் சங்கோசை!
இருட்டினிற் செய்திடும் யாவையும் மறைந்திடும்
எழுந்து கடன்முடி தமிழ் மகனே!
சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும்
சுதந்திரச் சங்கொலி கேட்குதடா!
வேதமும் கலைகளும் வித்தைகள் விளங்கிட
விடிந்திடும் சஞ்சலம் விட்டிடுவாய்!
மங்களச் சங்கொலி மகிழ்தரக் கேட்குது
மயக்கம்விட் டெழுந்தினி மறைபாடு!
எங்கணும் யாவினும் இருந்தருள் கடவுளும்
இருக்குது பயமிலை எழுந்திரடா!
-நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)
Comments
Post a Comment