Skip to main content

நீர்வளத் தேவையை உணர்ந்த சங்க மன்னர்கள் – பேரா.சி.இலக்குவனார்

 அகரமுதல




இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 14 – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13–  தொடர்ச்சி)

 

வெள்ளைக்குடி நாகனார் என்ற பெரும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கண்டு “ அரசே ! அறக் கடவுளே வந்து ஆட்சி செய்வது போன்று செங்கோன்மை செலுத்துவதில் கருத்து கொண்டு, மக்கள் முறை வேண்டும்பொழுதில் செவ்வி எளியராய் இருப்போர், வேண்டும் காலத்தில் மழை பெறுவர்.  நல்லாட்சியின் அடையாளமாகப் பெற்றிருக்கும் பெருங்குடை வெயிலை மறைப்பதற்காக அன்று;  குடிமக்களின் குறைகளைத் தடுப்பதற்குரிய அடையாளமாகும். போர்க்களத்தில் பகைவரை வென்று போர்ப்படை அடையும் வெற்றி உழவரின் உழுபடையால் உண்டாவதாகும்.  மக்களுக்குப் பலவகை இன்னல்கள் தோன்றும் போதெல்லாம் இவற்றிற்குக் காரணமானோன் அரசனே என்று உலகம் பழித்துரைக்கும்.  ஆதலின், குடிமக்களை நன்கு புரந்தருளுக.  அவ்வாறு புரத்தலே பகை வெல்லும் நெறியாகும்” என்று கூறியுள்ளார்.

“ பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை

            ஊன்றுசான் மருங்கின் ஈன்றதன் பயனே”

“ குடிபுறந் தருகுவை யாயின்நின்

  அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” (புறம்-35)

என்று கூறியுள்ள கருத்துகள் மக்கள் ஆற்றலை நன்கு வெளிப்படுத்துகின்றன.  இவ்வாறு கூறிய புலவரின், குறையாதென அரசன் அறிந்தான். நாட்டு மக்கள் நல்விளைவினைப் பெறாது வருந்துகின்றமையால் அரசர்க்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்த இயலாமல் அல்லல் உறுகின்றனர் என்பதனை அறிந்த கிள்ளிவளவன் கட்ட வேண்டிய வரிப்பகுதியைத் தள்ளுபடி செய்தான்.  பழஞ் செய்க் கடனிலிருந்து நாட்டு மக்களை மீட்டார் வெள்ளைக்குடி நாகனார்.  புலவர் அறிவுரைவழி நின்று மக்கள் துயர் போக்கிய மன்னன் மக்களால் போற்றப்பட்டிருப்பான் என்பதில் ஐயமுண்டோ?

பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார் என்னும் குடிமக்கள் புலவர் சென்றார். “செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், இவ்வுலகத்தில் இனிய புகழை நாட்ட விரும்பினும், செய்யத்தக்கதைக் கேட்பாயாக.  உணவால் நிலைப்பது உடல், உணவு உண்டாக்குவது நிலத்தாலும் நீராலும்.  விளைவுக்கேற்ற நிலனும் நீரும் படைப்போர் உடம்பும் உயிரும் படைத்தோராவர். வயலில் விதைத்துவிட்டு நீர்க்கு வானத்தை நோக்கி இருப்பது இறைவன் என்று சிறப்பித்துக் கூறப்படும் அரசன் முயற்சிக்கு அடுத்தது ஆகாது.  ஆதலின்,  நீர்நிலை பெருகச் செய்தல் அரசரின் தவிர்க்கலாகாக் கடனாகும்.  அவ்வாறு செய்பவரே தம் புகழை இவ்வுலகில் நிலை நிறுத்தியோராவார். செய்யாதவர் தம் புகழை இவ்வுலகத்தில் நிலைக்கச் செய்யாதவரே” என்று அரசரை நோக்கி அறிவுரை புகன்றார்.

நாட்டில் நீர்நிலை பெருக வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு அரசருக்கு அறிவுறுத்தப்பட்டது.  “நீரின்றி யமையா யாக்கைக் கெல்லாம்” என்று அன்று எழுப்பிய முழக்கம் இன்றும் சில பகுதிகளில் எழுப்ப வேண்டிய நிலையில் நாடு இருப்பினும் அன்றைய அரசர் தம்மாலியன்றதை அக்காலச் சூழ்நிலைகட்கு ஏற்பச் செய்து மக்களைப் புரந்து மாண்புற்றனர்.

அக்கால அரசர்கள் கற்க வேண்டியவற்றைத் தாமும் கற்றும் புலவர்வாய்க் கேட்டும் அரசியல் உண்மைகள் பலவற்றை அறிந்திருந்தனர். தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசர் “உருளையையும் பாரையையும்  கோத்துச் சகடத்தைச் சேற்றுவழி யின்றி நன்கு செலுத்துதல்  போன்ற உலகம் என்ற வண்டியையும்இனிய நல்வழியில் செலுத்த வேண்டுமாயின், அதைச் செலுத்தும் அரசன் எல்லா வகையிலும் மாட்சிமையுற்றோனாய்  இருத்தல் வேண்டும். இன்றேல் உலகம் நன்கு இயங்காது. நாளும் பகையென்னும் சேற்றில் அழுந்திப் பல தீய துன்பங்களுக்கு ஆளாகும்” என்று தெளிவுறக் கூறுகின்றனர்.

“கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்

 காவற் சாகாடு உகைப்போன் மாணின்

 ஊறுஇன் றாகி ஆறுஇனிது படுமே

 உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்

 பகைக்கூழ் அள்ளல் பட்டு

 மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.”

(புறம்-185)

பாரி முல்லைக்குத் தேரீந்ததும், பேகன் மயிலுக்குப் படாம் அளித்ததும், ஏனைய உயிர்களிடத்தும் தமிழரசர்கள் கொண்டிருந்த இரக்க உணர்வினைத் தெளிவுபடுத்தும்.

புலவர்களின் செவியறிவுறூஉவினையும் அமைச்சர்களின் நல்லாய்வுரையினையும் ஆர்வத்துடன் நாட்டை அளந்தும், கோட்டம், கூற்றம், பேரூர், ஊர் எனப் பகுத்தும், அறங்கூறவையங்களையும் ஆட்சி மன்றங்களையும் அமைத்தும், தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம் மூன்று என்றும் நீங்காராய், `மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பதனைத் தெளிந்து தமிழ்நாட்டை நன்கு ஆண்டு நானிலம் போற்றுமாறு வாழ்ந்தனர். தாமும் புலவராய் விளங்கிப் புலவரைப் போற்றி மொழியை ஓம்பினர்; முத்தமிழும் சிறப்புற வளரத் துணை நின்றனர்.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்