அகல் விளக்கு – மு.வரதராசனார்: 13
(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 12. தொடர்ச்சி)
அகல் விளக்கு
குழந்தைகளையும் கட்டுச் சோற்று மூட்டைகளையும் தூக்கிக்கொண்டு மைல் கணக்காக நடந்து சலிக்காமல் வந்து இந்தத் திருவிழாவில் இன்பம் காண்கிறார்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பள்ளத்தில் வீழ்ந்து கிடப்பது என்பதை உணர்ந்தேன். புதுச்சேலை உடுத்துவதற்கு அந்தப் பெண்களுக்கு ஒரு வாய்ப்பு, புதுக்காட்சிகளைக் காண்பதற்கு அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு. புது இடங்களுக்கு செல்வதற்குச் சிறுவர்களுக்கு ஒரு வாய்ப்பு, வயலையும் குடிசையையும் உழைப்பையும் மறந்து ஓய்வாகக் காலம் கழிப்பதற்கு ஆண்களுக்கு ஒரு வாய்ப்பு, பலரோடு பழகியறியாதவர்களுக்கு பழகுவதற்கு ஒரு வாய்ப்பு, குளித்தறியாதவர்களுக்குக் குளிப்பதற்கு ஒரு வாய்ப்பு, காசு கண்டறியாதவர்களுக்குக் காசை இடுப்பில் செருகி வைப்பதற்கும் எடுத்துச் செலவு செய்வதற்கும் ஒரு வாய்ப்பு, தலையில் கூடையும் மூட்டையும் இல்லாமல் நடந்தறியாத பெண்களுக்குக் கடைத்தெருக்களில் கைவீசி நடப்பதற்கு ஒரு வாய்ப்பு; இவ்வாறு பலதிற ஏழைமக்களுக்குப் பலவகை வாய்ப்பைக் கொடுத்து மகிழ்ச்சி அளித்தது அந்தத் திருவிழா.
யந்திரம் போல் சுவையற்று இயங்கும் வாழ்வில் எந்த மாறுதல் வந்தாலும் அது வரவேற்கத்தக்க இன்பம் ஆகும். ஆகையால் கிராம மக்களுக்குத் திருவிழா பெரிய இன்ப நாளாகக் கழிந்தது. அவர்களின் கையில் இருந்து வந்த காசுகளால் பெட்டிகள் நிறைவதைக் கண்ட வியாபாரிகளுக்கும் திருவிழா இன்பம் தந்தது. பலவகைத் தொழிலாளர்க்கும் இன்பம் தந்தது. ஆடிய ஆட்டமே ஆடி, படித்த பாடத்தையே படித்து வந்த எங்கள் உள்ளத்திற்கும் அது இன்பம் தந்தது. ஆனால் என் உள்ளத்தில் கற்பகத்தின் நினைவுதான் இனிய புதிய பதிவாக நின்றது.
திருவிழா முடிந்ததும், கூட்டம் எப்படியோ கலைந்தது. எங்கள் ஊரை அடுத்து ஓடும் பாலாற்றில் வெள்ளம் வந்தால் ஏழுநாளுக்குள் முற்றிலும் வடிந்து போவது போல், திருவிழாக் கூட்டமும் வடிந்து போய்விட்டது. என் அத்தையும் கயற்கண்ணியும் மறுநாள் காலையில் விடைபெற்றுச் சென்றார்கள். சந்திரனுடைய தாயும் தங்கையும் அடுத்த நாள் பிற்பகல் விடைபெற்றார்கள். அவர்கள் போகுமுன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்போது பாக்கிய அம்மையார் எங்களோடு இருந்தார். அம்மா கற்பகத்தின் கையில் நான்கு வாழைப் பழங்களும் காலணாவும் கொடுத்து அவளுடைய கன்னத்தைக் கிள்ளி, “போய்வா அம்மா! அடுத்த விடுமுறையில் வந்து போ” என்றார். பாக்கிய அம்மையார் கற்பகத்தைக் கட்டி அணைத்துக் கன்னத்தில் முத்தம் இட்டு விடைகொடுத்தார். நான் பேசாமல் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். வாயிற்படியைத் தாண்டியபோது கற்பகத்தின் சுறுசுறுப்பான கண்கள் திரும்பிப் பார்த்து என்னிடம் விடைபெற்றன. நான் அவளையே பார்த்தபடி நின்றிருந்தேன். “நல்ல பெண்! இல்லையா அண்ணா?” என்ற என் தங்கையின் குரல்கேட்ட பின் திரும்பி வந்தேன்.
சிலருடன் வாழ்நாள் எல்லாம் பழகுகிறோம். ஆனால் பழகிய எல்லா நாட்களும் நினைவில் நிற்பதில்லை. முதலில் கண்டு பேசிய நாள், அதுபோல் முக்கியமான ஒரு சில நாட்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. சந்திரனைப் பொறுத்த வரையில் காற்றாடிக்காக அவனுடன் முதலில் பேசிப் பழகிய நாள் பச்சென்று நினைவில் இருக்கிறது. கற்பகத்தைப் பொறுத்தவரையில், அன்று திருவிழா முடிந்து ஊர்க்குச் சென்றபோது பார்வையாலேயே விடை பெற்ற காட்சி நிலைத்து நிற்கிறது.
அந்த வயதில் எனக்குக் காம உணர்ச்சி இருந்தது என்று கூறமுடியாது. பொதுவாக அழகு எல்லாரையும் – குழந்தைகளையும் – கவரும் அல்லவா? கற்பகத்தின் தோற்றமும் பார்வையும் பேச்சும் அப்படி என்னைக் கவர்ந்தன. வெறுங்களிமண்ணை எடுத்து அணைத்துக் கொள்கின்றவர் யார்? அதுவே நாயாக, பூனையாக, கிளியாக, கொக்காக வடிவு பெறும்போது எந்தக் குழந்தையும், அந்தக் களி மண்ணைத் தனது தனது என்று எடுத்து அணைத்துக் கொள்கிறது. கற்பகத்தினிடம் எனக்கு ஏற்பட்ட கவர்ச்சியும் அப்படிப்பட்டதுதான். கற்பகம் விடைபெற்றபோது பாக்கியம் கட்டி அணைத்து முத்தம் கொடுத்ததற்கும் காரணம் என்ன? அழகை நுகரும் ஆற்றல் அந்த அம்மாவின் உள்ளத்தில் மிகுதியாக இருந்ததுதான் காரணம். இவ்வளவு ஏன்? சந்திரனை என் தாய் அடிக்கடி பாராட்டியதற்கும் கல்வி அதிகாரி முதல் நெல்லிக்காய் விற்பவள் வரையில் எல்லோரும் போற்றியதற்கும் காரணம் அதுதானே.
அதனால், கற்பகம் பிரிந்து சென்று சில நாள் ஆன பிறகும் அவளுடைய அழகு வடிவம் என் மனத்தில் நின்றது. அவளை மீண்டும் காணவேண்டும் என்ற ஆசையும் அரும்பியது. சித்திரை பிறந்ததும் பள்ளிக்கூட முடிவுத் தேர்வு வந்தது. சந்திரனும் நானும் நன்றாகப் படித்து எழுதினோம். கணக்குத் தவிர மற்றப் பாடங்களில் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆங்கிலத்திலும் தனக்கே முதன்மை கிடைக்க வேண்டும் என்று சந்திரன் பெருமைப்பட்டுக் கொண்டான்.
தேர்வு முடிந்ததும் சந்திரனும் அத்தையும் ஊர்க்குச் செல்ல ஏற்பாடு செய்தார்கள். அவர்களோடு பெருங்காஞ்சிக்கு போகவேண்டும் என்றும், கற்பகத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உள்ளம் தூண்டியது. உபசாரத்துக்காகவாவது சந்திரனும் அத்தையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அவர் மூட்டை கட்டும் முயற்சியில் இருந்த படியால், என்னை அழைக்க மறந்துவிட்டார்கள். நான் நேரே அம்மாவிடம் போய், “அம்மா! நானும் அத்தையோடு அவர்களுடைய ஊர்க்குப் போய்வரட்டுமா அம்மா” என்றேன்.
“உன்னை வரச் சொன்னார்களா?” என்றார் அம்மா.
“ஆமாம் அம்மா! போன மாதமே சொன்னார்களே”
“அப்படியானால் உன் அப்பாவைக் கேட்டுகொண்டு அவர் போகச் சொன்னால் போ.”
இந்த அளவு அனுமதி கிடைத்தது போதும் என்று ஒரு குதி குதித்து, அத்தையிடம் ஓடினேன். மூட்டை கட்டிக் கொண்டிருந்த அவரிடம், “நானும் உங்கள் ஊர்க்கு வரப்போகிறேன் அத்தை!” என்றேன்.
“வாப்பா குழந்தை! வா. அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படு. சாப்பிட்டு முடிந்தவுடன் புறப்படலாம். ஊரிலிருந்தே வண்டிவரும்” என்று அத்தை கனிவுடன் கூறினார்.
இதைக் கேட்டதும் சந்திரனுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி ஏற்பட்டது. “பலே கெட்டிக்காரன் நீ! உனக்கு எப்படி’டா இந்த யோசனை ஏற்பட்டது? கட்டாயம், கட்டாயம் வர’ணும், தெரியுமா” என்றான்.
மளிகைக் கடையை நோக்கி ஓடினேன். பெருமூச்சு வாங்க அப்பாவின் எதிரே நின்று செய்தியைச் சொன்னேன்.
“இங்கே ஆடினது போதாது என்று அங்கே போய் ஆடப் போகிறாயா? போ, போ. என்னைக் கேட்காதே. உங்கள் அம்மாவைக் கேட்டுக் கொண்டு போ. அப்புறம் நான் அனுப்பிக் கெடுத்துவிட்டதாக அவள் குறை சொல்லக்கூடாது. அவள் பொறுப்பு” என்று சொல்லிக்கொண்டே இரண்டு உரூபாய் எடுத்து என் கையில் கொடுத்தார்.
சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு அங்கிருந்து விரைந்து வந்தேன். என் மகிழ்ச்சியைக் கெடுப்பதுபோல் கடை வேலையாள் தொடர்ந்து வந்து, வேலு! வேலய்யா! என்றான்.
“ஏன்?” என்று திகைத்து நின்றேன்.
“அப்பா கூப்பிடுகிறார்.”
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் மயங்கினேன். திரும்பி அப்பாவிடம் சென்றேன்.
“டே! அந்த ஊரிலே பெரிய ஏரி இருக்கிறது. கிணறு குட்டைகள் உண்டு. கண்ட இடமெல்லாம் போகக்கூடாது. தண்ணீரில் கால் வைத்து எந்தக் குட்டையிலாவது இறங்கிவிடாதே. உனக்கு நீந்தத் தெரியாது. எங்கேயும் போகாதே; பச்சைத் தண்ணீரில் குளிக்காதே, சளி பிடிக்கும். இரண்டு நாள் இருந்து விட்டு பேட்டைக்கு யாராவது வரும்போது அவர்களோடு வந்துவிடு” என்றார் அப்பா.
வந்த இடர் நீங்கியது என்று எண்ணி, எல்லாவற்றிற்கும் தலையசைத்துவிட்டுத் திரும்பினேன்.
புறப்பட்டபோது, அப்பாவின் உபதேசத்தைவிட மூன்று மடங்காக இருந்தது அம்மாவின் உபதேசம். எனக்குச் சொன்னது போதாது என்று, எனக்காகச் சந்திரனிடம் அத்தையிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார்
அகல்விளக்கு
Comments
Post a Comment