Skip to main content

அரங்கனின் குறள் ஒளி:2. தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல் – தொடர்ச்சி

 அகரமுதல

அரங்கனின் குறள் ஒளி:2. தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல் – தொடர்ச்சி



  1. தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல்-தொடர்ச்சி 

தான்:

  இங்குத் ‘தான்’ என்பது இல்லறத்தானைக் குறிக்கும். மேற் கண்ட 4 வகைப்பாட்டார்களைக் கைம்மாறு கருதாது, காக்க வேண் டியது இல்லறத்தானது இன்றியமையாக் கடமையாம்.

           அத்தகு காத்தலைத் தவறாது செய்ய வேண்டும் என்றால், ‘தான்’, அஃதாவது இல்லறத்தான் நலத்துடன் வளத்துடனும்  வாழ வேண்டும். இதனை ஆழ்ந்து சிந்தித்தே திருவள்ளுவர், மேற்கண்ட வர்களோடு தன்னையும் காத்துக்கொள்ள வேண்டியது இன்றிய மையாதது என அறிவுறுத்துகின்றார்; வலியுறுத்துகின்றார்,

            இதுவரை கண்டவற்றால், மக்கள் யாரும் பசியால் வருந்தி, வாடக் கூடாது; வறுமையால் வேதனைப்படக் கூடாது; வேண்டிய நுகர்பொருள்கள் கிடைக்காமல், துன்புறக் கூடாது என்பனவற்றில் திருவள்ளுவர் எத்துணை அளவிற்கு மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

இந்தக் குறளால் திருவள்ளுவர் ஒரு மக்கள் சிந்தனையாளர் என்பது தெளிவாகின்றது.  

இந்தக் குறளின் இனிய கருத்தியல் தனிமனிதன், குடும்பம், சமுதாயம், நாடு, அனைத்து உலக நாடுகள்  அளைவில்  பொருந் தும் அருமைப்பாடு உடையது.

எனவே, இந்த விழுமிய குறள், உலகம் முழுமைக்கும் பொருந் தும் பெருமையது என்பதால், இது திருவள்ளுவர் ஓர் உலக உணர்வாளர்  சிந்தனையாளர் என்பதையும்  மெய்ப்பிக்கின்றது; மெய்சிலிர்க்கவைக்கின்றது.  

ஐம்புலத்து ஆறு:

ஐம்புலம் என்பது ஐந்து புலன்கள்/ஐந்து பொறிகள் எனப் பொருள்படும் தொகைச்சொல்.

            அஃதாவது கண், மெய், வாய், மூக்கு,  செவி என்பன.

            ஆறு எனின் வழி.

ஐம்புலத்து ஆறு என்னும் இந்தக் குறட் தொடரில், குறளாசான் பல நுண்பொருள்களைப் புதைத்துவைத்துள்ளார். அவற்றைத் தோண்டித் தோண்டிப் பார்த்து வெளிக்கொண்டுவருவோம்.

மூக்கு:

விருந்தினருக்கு அளிக்கும் அறுசுவை விருந்து, விருந்து ஓம்புநரின் மூக்கைத் துளைத்து, உண்ணும் ஆவலைத் தூண்டும் படி மணக்க வேண்டும். அறுசுவை விருந்து இல்லை என்றாலும், வீட்டில் இருப்பதைக் கொண்டு சமைத்த நல்லுணவு, மூக்கைத் துளைக்கும்படி நல்விருந்தாக மணக்க வேண்டும்.   

கண்:   

            தம் வீட்டை நோக்கி வரும் விருந்தினரைக் கண்டு, விருந்து ஓம்புநரின் கண்கள் கண்ணோட்டதுடன் அன்பையும் அளவில்ல மல் பொழிய வேண்டும்.

மெய்:

            விருந்து ஓம்புநர் அன்புமழை பொழியும் கண்களுடன் வீட் டைவிட்டு வர வேண்டும். முகத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் முகாமிட, விருந்தினரை நோக்கி விரைந்து செல்ல வேண்டும்.

வாய்:

            விருந்தினரது மனம் மகிழும்படி இனிய சொற்களைச் சொல் லிக் கொண்டே அவரை வரவேற்க வேண்டும். . 

செவி:          

            பல கல் தொலைவிலிருந்து விருந்தினர் வந்திருப்பார்; மிகக்  களைத்துப்போயிருப்பார்; வாட்டும் பசிப் பிணியால் வாடிப் போயிருப்பார்; சிலர் அழுக்கு ஆடைகள் அணிந்த நிலையில் வந்திருப்பார். மெலிந்துகூடப் போயிருப்பார்.

            அப்போது வந்த விருந்தினர் சொல்லும் விரித்துரைக்கும் வருத்தச் சொற்களை எல்லாம், விருந்து ஓம்புநர், முகமலர்ச்சியு டன் மிகப் பொறுமையாகத் தம் செவிகளால் கேட்டுக்கொள்ள வேண்டும். [விருந்தினர் வருத்தம் எல்லாம் நீங்கும்படி, ஆறுதல் மொழிகளைச் சொல்லி மகிழ்விக்க வேண்டும்.]

 இவ்வாறு விருந்திரை விருந்து ஓம்புநர் ஐம்புலத்து ஆறு வழி நின்று, விருந்து ஓம்பும் முறைமை அமைய வேண்டும்.

இத்தகு ஒப்பில்லாத விருந்து ஓம்பல் முறைமை, மூப்பாலாரது மூளையில் முளைத்த அருமைப்பாடும் பெருமைப்பாடும் உடை யது. இந்த விழுமிய முறைமை கைம்மாறு கருதாக் கடப்பாட்டி னது; இல்லறத்தானது சமுதாயம் சார்ந்த சீரிய கடமை.

இத்தகு  கடப்பாடு உலகம் முழுவதும் பரவினால் பசிப்பிணி பறந்துபோகும்; பசிப் பிணியால் வரும் நோய்கள் இறந்துபோகும்.

அறம் உணர்த்தும் புறச்சான்று – 1

அன்று விருந்து ஓம்பல்:        

இராமானந்தர் ஓர் (உ)ரொட்டியை நெய்யில் தோய்த்து உண்டு கொண்டிருந்தார்.  அப்போது அந்தப் பக்கமாக வந்த நாய் ஒன்று. (உ)ரொட்டியைப் பறித்துக்கொண்டு ஓடியது. உடனே, இராமானந்தர் நெய்க் கிண்ணத்துடன் அந்த நாயைத் துரத்திக்கொண்டு, பின்னாலேயே ஓடினார்.

            “ஐயா.! ஒரு நாயின் பின்னால், நீங்கள் ஏன் ஓடிக் கொண் டிருக்கின்றீர்கள்?” எனக் கேட்டார் ஒருவர்.

            “வேறு ஒன்றும் இல்லை. அந்த நாய் எனது கையிலிருந்த (உ)ரொட்டியைப் பறித்துக் கொண்டு   ஓடுகின்றது. வெறும் (உ)ரொட்டியைச் சாப்பிட்டால், விக்கும்; நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டால், விக்காது. அதனால்தான், இந்தக் கிண்ணத்தை அதனிடம்  கொடுப்பதற்காவே, அதன் பின்னால்   ஓடிக்கொண்டிருக்கின்றேன்.” எனச் சொன்னார்.

சொல்லிவிட்டு, நிற்காமல் அந்த நாயின் பின்னால் ஓடத் தொடங்கினார் அந்த அருட்பெரும்கடலார் அஃதாவது திருவள் ளுவர் காட்டும் அறஆழி அந்தணர் [குறள்.8].

ஒப்பு நோக்குப் பகுதி:

            அந்தணர் என்போர் அறவோர்மற்[று] எவ்உயிர்க்கும்

            செந்தண்மை பூண்[டு]ஒழுக லான்குறள்.30]

பொருள் உரை:

            அந்தணர் என்பவர் யார்?

            எந்த உயிராக இருந்தாலும் வேறுபாடும் மாறுபாடும் காட் டாமல் அதன்மீது அதன் மனம் குளிரும்படி அருள் பொழிய வேண்டும்; அதன் உயிரைக் காக்க வேண்டும்; அத்தகு விழுமிய அற உணர்வு உடையவர், எவராக இருந்தாலும் அவர்தான் அந்தணர் என்பவர். 

அறம் உணர்த்தும் புறச்சான்று – 2

இன்று விருந்து ஓம்பல்:

            எதிர்பாராதவிதமாக ஒரு கெழுதகை நண்பர், தம் வீட்டிற்குள்  வருவதைப் பார்த்துவிட்டார் அன்புமலை. அதைத் தம் மனைவி அன்புமலரிடம் சொன்னார்.

“இப்ப என்னங்க பண்றது? இருக்கிறது ஆறு தோசைக்கு உரிய மாவுமட்டும்தான். இவர் வேற தண்டத்துக்கு வந்து தொலைச் சிட்டார். சொல்லுங்க என்ன பண்றது?” எனக் கேட்டார் அவரது இல்லத்தரசி அன்புமலர்.

            “நீ தோசையைச் சுட்டுப்போடு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்.”   அதற்குள் அந்த அன்பு நண்பர் நன்மனத்தார் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்.

      “வாடா…வா…! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? சரி! அது போகட்டும். முதல்ல சாப்பிடு.” எனத் தமது அளவற்ற அன்பை வெளிப்படுத்தினார் அன்புமலை.

இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள். முதலில் அன்பு உட்கார்ந் தார். அடுத்து நண்பர். முதல் தோசையைக் கணவருக்குப் போட் டார் அன்புமலர். அடுத்த தோசையை நண்பருக்குப் போட்டார்.  மூன்றாவது தோசையைக் கணவருக்குப் போடப் போகும் போது.

“இந்த நேரத்தில் நாய்கூட ரெண்டாவது தோசை சாப்பிடாது. எனக்கு வேண்டாம். அத இவனுக்குப் போடு.” என்றார் அன்பு மழை பொழிய.

            “ஐயோ! நான் வழக்கமாக இரவில் அரைத் தோசைதான் சாப்பிடு வேன். இன்றைக்கு என்னமோ முழுத்தோசையைச் சப்பிட்டுவிட்டேன். இதுவே போதும். வேறு எதுவும் வேண்டா,” என்றார் அந்த நண்பர், பசி மயக்கத்தில் மிகப் பரிதாபமாக. 

            அன்புமலையும், அன்புமலரும் ஒன்றை ஒன்று பார்த்துச் சிரித்துக் கொண்டன. திருக்காட்சி இது கண்டு திருவள்ளுவர் திடுக்கிட்டார். 

அறம் உணர்த்தும் புறச்சான்று– 3

அன்று நல்விருந்து;

இன்று கொல்விருந்து;

            “அம்மா! இங்க வா! யாரு வந்திருக்கிறதுன்னு பாரு?

            “யாருடா வந்திருக்கிறது?”

            “தண்டச் சோறு வந்திருக்கும்மா!”

            “என்னடா சொல்கிறாய்? தண்டச் சோறா?”

            “அதாம்மா! ஒருத்தர் வந்து வயிறு முட்டச் சாப்பிட்டுட்டுப் போவாருல்ல. அவரு போனவுடனே, தண்டச் சோறு; தண்டச் சோறுன்னு திட்டுத் திட்டுன்னு திட்டுவியே அவர்தாம்மா.”

அதைக் கேட்டவுடன் அந்தத் தண்டச் சோறு, அதிர்ச்சி அ டைந்தது. அது சொல்லாமல், கொள்ளாமல் மெல்ல நழுவி வெளியே சென்றுவிட்டது.  

விருந்தோம்பல் சமுதாயத்தின் அருங்கடமை;

பெருந்தமிழர் கண்டறிந்த விழுமிய உடைமை.                      

                           – பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

காண்க:

அரங்கனின் குறள் ஒளி 2. தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல்

அரங்கனின் குறள் ஒளி 1.காலத்தைத் தேர்ந்தால் வெற்றிகள் அமையும்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்