அகல் விளக்கு – மு.வரதராசனார்: 11
(அகல் விளக்கு – மு.வரதராசனார்:10. தொடர்ச்சி)
அகல் விளக்கு
“அம்மா இறந்த பிறகு அப்பா சிரித்ததை நான் பார்த்ததே இல்லை” என்று பாக்கியமே ஒருமுறை சொன்னார். கணவனும் மனைவியும் அவ்வளவு அன்பாக வாழ்ந்தார்களாம். காதல் மனைவி இல்லாத சூழ்நிலையில் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் எப்படிச் சிரிப்புப் பொங்கி எழும்? என்ன வயது ஆனாலும், காதல் மனைவியிடம் தான் மனிதன் சிறு பிள்ளையாக நடந்துகொள்கிறான். மூப்பு என்பதை உடல் கண்டாலும் உள்ளம் காணாத உலகம் அந்தக் காதல் உலகம் ஒன்றுதானே? அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் வயது அறுபதைக் கடந்தாலும், உள்ளம் இருபதைக் கடப்பதே இல்லை. பத்தைக் கடப்பதும் இல்லை எனலாம். அப்படி அன்பாக இல்வாழ்க்கை நடத்தியவர் ஆகையால், மனைவி இறந்தவுடனே அவருடைய உள்ளம் ஒரே நொடியில் மூப்பு அடைந்து சாக்காடையும் நெருங்கிவிட்டது. அதனால் ஒரு நாளும் தந்தை சிரிக்கப் பார்த்ததில்லை என்று பாக்கியம் சொன்னது உண்மையாக இருக்கலாம்.
பாக்கியமோ சிரிப்பது குற்றம் என்னும் விதவை வாழ்வை அடைந்துவிட்டாள். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த தம்பிக்கு இயற்கையான மனவளர்ச்சி இல்லாமற்போயிற்று. ஆனால் தாயும் தந்தையும் மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலத்தில் வளர்ந்த பாக்கியத்தின் உள்ளமோ வளர்ச்சி அடைந்த உள்ளம். அந்த உள்ளத்தின் உணர்ச்சிகள் வெளிப்படுவதற்கு ஒரு வகையில் என்னுடைய குழந்தைப் பருவம் உதவியாக இருந்தது. நானோ, குழந்தையாக இல்லாமல் வளர்ந்துவிட்டேன். என் மனமும் வளர்ந்து விட்டது. என் வளர்ச்சி பாக்கியத்தின் ஏமாற்றமாக முடிந்தது.
தை பிறந்தால் எனக்குச் சிரங்கு பிறப்பது வழக்கம். தக்க உணவை அளவாக உண்ணாத காரணத்தாலும் இயல்பாகவே மெலிந்த நுரையீரலாலும் அடிக்கடி சிரங்கு வரும் என்பதைப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டேன். பள்ளிக் கூடத்தில் எந்தப் பையனோடோ பழகிய காரணத்தால் தொத்திக்கொண்டது என்பது என் பெற்றோர்களின் எண்ணம், சந்திரனும் என்னோடு படித்தான், பழகினான்; அவனுக்குச் சிரங்கு வரவில்லையே என்று நான் சொல்லி வந்தேன். சந்திரனோ, எனக்குச் சிரங்கு வந்துவிட்டதே என்ற காரணத்தால் என்னை விட்டு விலகவில்லை; பழகுவதற்குக் கூசவில்லை. நன்றாகப் பழகினான்; முன்போலவே அணுகியும் தொட்டும் பழகினான்; என் தோள்மேல் கை போட்டுக்கொண்டு பள்ளிக்கு வந்தான்; என் பக்கத்தில் உட்கார்ந்தே பள்ளியில் படித்தான். ஆனாலும் அவனுக்குச் சிரங்கு வரவில்லை.
நான் மட்டும் சிரங்கால் வருந்தியது என் மனத்துக்கு வேதனையாக இருந்தது. இந்த ஆண்டில் சிரங்குப் புண் ஒவ்வொன்றும் பெரிதாய்க் காலணா அகலம் இருந்தது. யானைச் சிரங்கு என்று சொன்னார்கள். கந்தகத்தைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி என் உடம்பெல்லாம் அம்மா பூசினாள். கந்தகத்தின் தீமை அப்போது எனக்கு எப்படித் தெரியும்? அதன் நாற்றம் எனக்கு மிக அருவருப்பாக இருக்கும். அய்யோ தலையெழுத்தே என்று பொறுத்திருப்பேன். கோவணம் கட்டிக்கொண்டு கந்தகம் பூசிக்கொண்டிருந்தபோது அம்மா அப்பா தவிர, வேறு யாரும் என்னை அணுகமாட்டார்கள்.
யாராவது அப்போது வீட்டுக்கு வந்தாலும், நான் அவர்களின் கண்ணில் படாதபடி தோட்டத்துக்கு ஓடிப்போய் ஒளிந்து கொள்வேன். ஒரு முறை அம்மா கந்தக எண்ணெய்க் கிண்ணத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அதில் கோழியிறகைத் தோய்த்துத் தோய்த்து என் புட்டத்தில் இருந்த சிரங்குகளில் தடவிக் கொண்டிருந்தார். அப்போது கதவைத் திறந்து கொண்டு பாக்கிய அம்மையார் வந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் தோட்டத்தை நோக்கி ஓடினேன். “வா’டா யாரும் இல்லை’டா ‘அக்கா’டா; உன்னை வளர்த்தவள்தான். வா’டா. உனக்கு எத்தனை நாள் அக்குளும் அரையும் தேய்த்துத் தண்ணீர் வார்த்திருப்பாள். அக்கா பார்த்தால் என்ன? வாடா” என்று அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நான் தோட்டத்தில் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு பாக்கியம் வீட்டை விட்டுப் போகும் வரையில் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தேன்.
இப்போது எண்ணிப் பார்க்கிறேன். தாய்போல் பாசம் காட்டி வளர்த்த அந்த மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும்? நீ தாய் அல்ல உன் பாசம் வேண்டா என்று மறுப்பதாக அல்லவா என்னுடைய கொடுஞ்செயல் இருந்திருக்கும்.
சிறுவர்களாகக் கூடி விளையாடும்போது, யாராவது ஒருவனுக்குத் தக்க மதிப்பு கொடுக்காவிட்டால் உடனே அவன் எங்கள் குழுவை விட்டு, வேறொரு குழுவில் சேர்ந்து விடுவான். எங்கள் வயிறு எரிய வேண்டும் என்று அந்தக் குழுவைப் புகழ்வான்? அங்கே திறமையாக ஆடிச் சுறுசுறுப்பாக இருப்பான். வளர்ந்த மனிதரிடத்திலும் இந்தப் பண்பைப் பார்த்திருக்கிறேன். ஒரு வீட்டுத் திருமணத்திலோ வேறு அலுவலிலோ ஒருவனுக்கு மதிப்புக் கொடுக்கவில்லையானால், அவன் அவர்களின் பங்காளி வீட்டுக்கோ பகையாளி வீட்டுக்கோ போய் அங்கு நடக்கும் அலுவலைப் பெருமைபடுத்துவான். அந்த மனப்பான்மையை மெல்ல மெல்ல பாக்கிய அம்மையாரிடம் காணத் தொடங்கினேன்.
அந்த அம்மா வேண்டுமென்று அப்படி நடந்திருக்கமாட்டார்; அந்த மனிதப் பண்பு இயற்கையாகத் தம்மை அறியாமலே அவரிடம் வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். அதனால் என்னைவிடச் சந்திரனை மிக்க அன்போடு பார்க்கத் தொடங்கினார்; ஆர்வத்தோடு பேசத் தொடங்கினார்; பாராட்டவும் தொடங்கினார். என்மேல் இருந்த அன்பைக் குறைத்துக் கொண்டார் என்று சொல்ல முடியாது; அவனிடம் மிகுதியான அன்பு காட்டியது போல் இருந்தது. சந்திரன் என்னுடைய பங்காளியும் அல்ல; பகையாளியும் அல்ல.
என்ன காரணமோ, பாக்கிய அம்மையாரின் போக்கில் அந்த வேறுபாடு ஏற்பட்டதாகத் தோன்றியது. ஆனால் என் தாயிடம் பழகுவதிலும், வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதிலும், சிறப்பான உணவு வகைகள் செய்தால் எனக்காகக் கொண்டுவந்து தருவதிலும் அந்த அம்மா முன்போலவே இருந்தார். அதனால் சிலநாள் கழித்து எண்ணிப் பார்த்து அந்த அம்மாவுக்கு என்மேல் வெறுப்பு இல்லை என்று உணர்ந்தேன். சந்திரன் என்னைவிட அழகாகவும் அறிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால், பாக்கியம் மிக்க அன்பு காட்டுகிறார் என்று முடிவுக்கு வந்தேன். என் தாயும் என்னைவிடச் சந்திரனைப் பாராட்டிப் பேசுவதைக் கேட்டு, அதுதான் காரணம் என்று ஆறுதல் அடைந்தேன்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார்
அகல்விளக்கு
Comments
Post a Comment