எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? – மறைமலை இலக்குவனார்
எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்?
பைந்தமிழின் பலதுறையும்
ஆய்ந்தறிந்த அறிஞரே!
கண்ணீரைப் பெருக்கிக்
கலங்கிக் கரைந்து
சிந்தை எல்லாம்
நைந்திடவே எம்மைநீர்
பிரிந்ததுவும் முறையா?
சொல்லாண்டு பொருளாண்டு
எழிலார்ந்த காப்பியத்தின்
சுவையாண்டு திறனாய்ந்து
நூல்பலவும் தந்தீரே!
பல்லாண்டு பல்லாண்டு
பாடவொரு வழியின்றி
நில்லாமை நெறியெமக்குச்
சொல்லாமல் சொன்னீரே!
நவையெதுவும் இரா மோகன்
புகழ்கொண்ட பேராசான்
முகம்கண்டு மகிழ்ந்திடவே
வழியினிமேல் இல்லையா?
கூற்றுவன் தொல்லையா?
நவையற்ற நறுந்தமிழால்
நலம்விளைக்கப் பல்காலும்
திறனாய்வுத் துறைமேவித்
தரமான நூலியற்றி
அறிவார்ந்த பொருள்பலவும்
செறிவாகப் புலப்படுத்தும்
அரியகலை கற்றவர்யார்?
முறையான புலமையால்
தெரியாத பொருள்யாவும்
விரிவாக உரைப்பவர்யார்?
அன்பான உரையாடல்
அகங்கனிந்த நட்பாடல்
பண்பார்ந்த உறவாடல்
பரிவுமிகு கண்ணோட்டம்
அத்தனையுமே தம்சொத்தெனவே
கொண்டிங்கேஅனைவரையும்
பித்தாக்கி ஈர்ப்பவர்யார்?
பகையறியாப் பாங்கினர்யார்?
நூறாயி ரம்பேர்கள்
வீற்றிருக்கும் அவையிலும்தம்
வீறார்ந்த பொழிவினால்
வியப்படையச் செய்பவர்யார்?
மதுரையெனும் திருநகரில்
மாணவர்தம் மனங்கவரும்
மாண்புமிகு பெரும்புலவர்
இரா. மோகன் என்பதனைச்
சிறுகுழவியும் அறியுமன்றோ?
அனைவருமே புகழ்கின்றஅறிஞர்தம்
பெயர்சொல்ல அறியாதார்
எவருமுளரோ? அவர்பிரிவை
ஆற்றிடவே வழியுமுண்டோ?
எமைவிடுத்துச் சென்றதேன்?
இப்படி விரைவாக
அழைத்தவர் யார்?
நல்லதமிழ்ப் பொழிவினால்
நான்மாடக் கூடலெலாம்
நலமுறவே வலம்வந்த
நாவலரே! ஏதேனும்
மாநாடு சென்றீரோ?
புகழ்மேவும் நிருமலா
அம்மையின் கணவரெனும்
பொலிவான நிலைமறந்து
போகவும் ஏன் துணிந்தீர்?
இனிதான உறவையும்
கனிவான மகளையும்
பிரியவும் மனம் வந்ததா?
முனைவர் மறைமலை இலக்குவனார்
Comments
Post a Comment