Skip to main content

தந்தை பெரியார் சிந்தனைகள்- 3. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

அகரமுதல
(தந்தை பெரியார் சிந்தனைகள் 2 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 3
(ஆ) பிறிதொரு சமயம்: தந்தை பெரியாரிடம் “ஆத்திகர் ‘கடவுள் உண்டு’ என்கின்றார்கள். தாங்கள் ‘கடவுள் இல்லை’ என்கிறீர்கள். அவர்கள் ஏதோ ஒரு பொருளை நினைத்து உண்டு என்கிறார்கள். அவர்கள் பேச்சில் உண்டு என்பதன் எழுவாய் ‘கடவுள்’ நீங்கள் ‘இல்லை’ என்கிறீர்கள்? எந்தப் பொருளை நினைத்து இல்லை என்கிறீர்கள்?” என்று வினவினேன். அவர் சிறிது சிந்தித்து ‘ஒன்றும் தெரியவில்லையே. கிழவனை மடக்கி விட்டீர்களே’ என்று சொல்லிச் சிரித்தார். ‘நான் சொல்லட்டுமா?’ என்றேன். ‘சொல்லுங்கள்’ என்றார். ‘’ஐயா, அவர்கள் விநாயகர், முருகன், சிவபெருமான், திருமால், துருக்கை முதலிய எண்ணற்ற தெய்வங்களை நினைந்து கடவுள் உண்டு என்கிறார்கள். நீங்கள் அவர்கள் எழுவாயாகக் கொண்டுள்ள அனைத்துத் தெய்வங்களையும் ஒன்றாகக் கட்டி, உங்கள் பக்கம் இழுத்து அதையே எழுவாயாகக் கொண்டு ‘இல்லை’ என்கிறீர்கள்” என்றேன். “‘ஆமாம், ஆமாம்; அதுதான், அதுதான்’ என்று சொல்லி, ‘ஒன்றையும் நினையாமல் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தேன். நீங்கள் சிந்தித்துப் பேசுகிறீர்கள். உங்கள் சிந்தனை வளர்க’’ என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்துதான் இன்றளவும் என்னைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.

(இ) பெரியார் தொடர்பு அதிகம் இருந்ததால் உள்ளூர்ப் பொதுமக்களில் சிலர் மாவட்டக்கல்வி அதிகாரிக்கு “தலைமையாசிரியர் நாத்திகர்; ‘கடவுள் இல்லை’ என்று மாணாக்கர்களிடம் பரப்புரை செய்கின்றார். இவர் பொறுப்பில் பள்ளி இருந்தால் மாணாக்கர்கள் நாத்திகராவார்கள். இவரை உடனே நீக்க வழிவகைகள் செய்யவேண்டும்’ என்று ‘அநாமதேயக் கடிதங்கள்’ அனுப்ப, அவை சமாதானம்கேட்டு எனக்கு வந்தன. இஃது உள்ளூர் காங்கிரசுகாரர்களின் ‘திருவிளையாடல்’ என்ற கிசுகிசுப்பு மூலம் அறியமுடிந்தது.


அப்போது துறையூர் காங்கிரசுத் தலைவர் திரு சுவாமிநாத( உடையார்). அவர் சிறந்த உத்தமர். அதிகம் படிக்காதவராயினும் உயர்ந்த பண்பாட்டாளர். அவரை நன்கு அறிவேன். அவரிடம் செய்தியைச் சொல்லி நிலையை விளக்கினேன். அவர் கூறியது: “தலைமை ஆசிரியர், நீங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்லர் என்பதை ஊரே அறியும். எல்லாக் கட்சியிலும் உள்ள நல்லவர்களிடம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பதை அறிவேன். மாணாக்கர்களும் ஊரில் பெரியவர்களும் உங்களிடம் நல்ல மதிப்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள்; உங்களைப் பற்றி மக்கள் பெருமையாகப் பேசுவதையும் அறிவேன்” என்று ஆறுதல் கூறினார். விரைவில் கட்சியில் உள்ள சில்லறைப் பேர்வழிகளை அடக்கிவிட்டார். கல்வித்துறைக்கும் சமாதானம் எழுதி விட்டேன். இந்தச் சிக்கல் பின்னர் தலைதுாக்கவில்லை. நிற்க.


இனித், தந்தை பெரியாரின் கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகளில் கவனம் செலுத்துவோம். பெரியார் கருத்துப்படி நம் நாட்டிற்கு அவசியமாக வேண்டியவை மூன்று அவை (1) மூடநம்பிக்கை ஒழிய வேண்டும்; (2) அறிவுக்குச் சுதந்திரமும்விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சிபெற வேண்டும்; (3) தன்மதிப்பு உணர்ச்சி ஏற்பட வேண்டும். என்பவையாகும்.

மூட நம்பிக்கைக்கு மூலாதாரம் கடவுள் என்பது அவர் கருத்தாதலால் இறைமறுப்புக் கொள்கை அவரது பேச்சாகவும் அமைகின்றது; மூச்சாகவும் இருந்து வந்தது. அவர்தம் வாழ்நாளெல்லாம் இறைமறுப்புக் கொள்கையை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசிவந்தார்; குடியரசு இதழ்களில் ‘சித்திரபுத்திரன் என்ற புனைபெயரால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிவந்தார்.

பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி போன்ற வாய்ப்புகள் தந்தை பெரியார் அவர்கட்குக் கிட்டாதது மனித குலத்திற்கு ஒரு மாபெரும் நன்மையாக வாய்ந்தது என்று கருதுவதற்கு இடமுண்டு. அதனால்தான் ஐயா அவர்கள் ‘பகுத்தறிவுப்பகலவனாகத் திகழ முடிந்தது. கல்விச்சாலையில் படித்திருந்தால் மனிதகுலம் சேமித்து வைத்திருக்கும் மரபுரிமை (Heritage) அவர் மனத்தில் திணிக்கப்பெற்றிருக்கும். அதனை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு ஒரு பெரும் புலவராகவோ, நாட்டமிருந்தால் ஒரு மாபெருங்கவிஞராகவோ வளர்ந்திருப்பார். ஏதாவது ஓர் அலுவலை மேற்கொண்டு பாவேந்தர் சொல்வது போல,

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு 
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்பேன் 
சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டு 
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணனாகப்[குறிப்பு 4]

போயிருப்பார். இரசிகமணி டி.கே.சி. அவர்களும் பள்ளி கல்லூரிக் கல்வியைப் பற்றிக் குறைவான எண்ணங்கொண்டவர். அங்கு ஆசிரியர்கள் மாணாக்கனின் புதுப் போக்குடமையை (orginality)க் கொன்றுவிடுவர் என்ற கருத்துடையவர். இதில் ஓரளவு உண்மை உண்டு என்பதைக் கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த பட்டறிவால் அறிவேன்.

பகுத்தறிவுப் பகலவனானதலால் மனம் பொது நலத்தை நாடியது; இராமானுசருக்கு மனிதகுலத்தின்மீது இருந்த அக்கறையைப்போல், பாவேந்தர் சொல்லுகிறபடி,

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம், 
தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும் 
தாயுள்ளார்.[குறிப்பு 5]
கொண்டார். அதில் தனி இன்பமும் கண்டார். தன் வாழ்வையெல்லாம் மனிதகுல மேம்பாட்டுக்காகவே ஒப்படைத்து மகிழ்ந்தார். இனி தலைப்புக்கு வருகிறேன். சமயங்கள் கடவுளைப் பற்றிக் கூறும் கருத்துகளைக் காண்போம். அப்போதுதான் ஐயா அவர்களின் கருத்துகள் தெளிவாகும்.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
தமிழ்ச்செம்மல் கலைமாமணி’ 
பேராசிரியர் முனைவர் சுப்பு(ரெட்டியார்)
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்
சென்னைப் பல்கலைக் கழகம்
  1. பாரதிதாசன் கவிதைகள்-உலக ஒற்றுமை. அடி (1-4)
  1.  பாவேந்தர்

(தந்தை பெரியார் சிந்தனைகள்- 4 காண்க.)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்