தந்தை பெரியார் சிந்தனைகள்- 4. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
தந்தை பெரியார் சிந்தனைகள் – 4
கடவுள் – பொது
ஒவ்வொரு சமயமும் கடவுளைப் பற்றிக் கருதுகின்றது. எல்லாச் சமயங்களும் உருவழிப்பாட்டைச் சார்ந்தவையாயினும் இதில் சைவமும் வைணவமும் தனித்தன்மை வாய்ந்தவை.
(1) சைவம்: சைவம் சிவபெருமானையும் சிவக்குமாரர்களையும் கடவுளர்களாகக் கொண்டது. இந்திரியங்களின் துணைக் கொண்டு அறியப்பெறுவது உலகம். இவ்வுலகை உள்ளபடி காண்பவன் கடவுளையே காண்கின்றான். கடவுள் எத்தகையவர் என்று இயம்புவதன் மூலம் இவ்வுலக நடைமுறையே விளக்கப் பெறுகின்றது. குடும்பிகளுள் சிவபெருமான் ஒரு சிறந்த குடும்பி. உலகெலாம் அவர் குடும்பம். அது தன் முறை பிறழாது நடைபெறுகின்றது. அதன் முறை பிறழாத நடப்பே அவரது ஆட்சி. சிதறடையும் உலகம் அவர் ஆட்சிக்குட்பட்டு ஒன்று சேர்ந்துள்ளது. முரண்பாடுகளெல்லாம் அவரது ஆணையால் ஒழுங்குபாடு பெறுகின்றன. அவரது குடும்பத்தை ஓர் எல்லையில் அடக்கி வைத்துப் பார்த்தால் இவ்வுண்மைகள் விளங்கும். இங்கு நாம் அனைத்தையும் உருவகங்களாகக் காண்கின்றோம்.
திருக்கயிலாயம் சிவனது உலகம். அங்கு தம் தேவி பார்வதியுடன் வீற்றிருக்கின்றார். பரிவாரங்கள் அனைத்தும் அவரைச் சூழ்ந்துள்ளன. மனை வாழ்க்கையின் பொறுப்பு, பேறு, பண்பு அனைத்தும் ஆங்கு ஒன்று சேர்ந்து மிளிர்கின்றன. பேறுகளில் தலையாயது மக்கட்பேறு. ஒருவருக்கு மகன் என்று ஒரு பதுமை பிறந்து விட்டால் போதாது. அது அறிவறிந்த மகனாக அமைதல் வேண்டும். சிவபெருமானின் முதல் மகன் கணபதி. ஞானக்களஞ்சியமாகத் திகழ்கின்றான். இனி, இவனுக்கு உருவம் போதாது. அது வெறும் சப்பாணி; செயலுக்கு உதவாது. மூத்தவனுக்கு இசைவாக ஆற்றலும் துடுக்கும் வடிவெடுத்தவனாகின்றான் இளையவன் கார்த்திக்கேயன். அறிவும் ஆற்றலும் எவனிடத்து ஒன்று சேர்ந்து ஒளிர்விடுகின்றனவோ அவனே பண்புடைய மகனாகின்றான். இவ்விரண்டு மேன்மைகளைத் தனித்தனியே விளக்குவதற்கு அவை இரு பிள்ளைகளாக உருவகப்படுத்தி விரிவாக விளக்கப்பெறுகின்றன. அறிவும் ஆற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவன், சிவனை அறியவல்லவனாகின்றான். அவனே உண்மையில் சிவ குமாரனாகின்றான். சிவபெருமான் எதிரே அவரது ஊர்தியாகிய காளையொன்று படுத்துள்ளது. இறைவனது இடப்பாகத்தில் அம்பிகை அமர்ந்துள்ளாள். அருகில் அவளடைய வாகனம் சிம்மம் உள்ளது. அப்பன் அருகில் மூத்தவன் கணபதியும் அம்மையின் மருங்கில் இளையவன் முருகனும் இடம் பெற்றுள்ளனர். தந்தை மூத்தவனையும் தாய் இளையவனையும் நேசித்தல்தானே இயல்பு! மூத்தவன் முன்னர் மூஞ்சுரு விளையாடுகின்றது. முருகன் மருங்கில் மயில் குலாவுகிறது. தந்தையின் மேனியில் பாம்பு நெளிந்து நெளிந்து ஊர்கின்றது. இடைஇடையே அது படமெடுத்தும் ஆடுகின்றது. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இக்காட்சியில் அதிசயம் ஒன்றுமில்லை. ஐதிகத்துக்கு உட்பட்டுக் கன்னத்தைக் கரத்தால் அடித்துக் கொண்டு ‘அரஃகரா’ என்று ஆரவாரித்து அண்ணலை வணங்குதலோடு அவர்களது பணிமுடிந்து விடுகின்றது.
சிந்தித்து நோக்குபவர்கட்கு இதில் வினோதம் ஒன்று தென்படும். காளையும் அதனைக்கொன்று உண்ணும் சிங்கமும் அருகருகே அமர்ந்துள்ளன. அவற்றின் இயல்புகள் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை. ஒரே உலகில் அவை வாழ்ந்திருக்கின்றன. வருந்தும் தன்மை காளையிடமும் வருத்தும் தன்மை சிங்கத்திடமும் உள்ளன. தன் உயிருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் கேடுவரலாம் என்ற கவலை காளைக்கு இருந்து வரும். மூத்தவனுடைய வாகனமாகிய எலி துள்ளிக் குதித்து விளையாடித் தன் தலைவனுக்கு படைக்கப்பட்டிருக்கும் உணவு வகையில் உரிமை பாராட்டுகின்றது. நினைத்த பொழுதெல்லாம் அதில் சிறிது கொரித்துத் தின்கின்றது. இங்குமங்கும் ஒடித்திரியும் எலியின்மீது திடீரென்று பாம்பு பாய்ந்து விடக்கூடும். ஆனால் பாம்பு பயமற்றுத் திரிதற்கு இடம் இல்லை. ஏனென்றால் அச்சமயம் மயில் குதித்தோடி வந்து பாம்பைக் குத்திக்கொல்லவும் கூடும். இங்குச் சிற்றுயிர்கட்கிடையே இத்தனை விதமான போராட்டங்கள் எழக்கூடிய நிலைகள் உள்ளன.
இனிப், பேருயிரின் சார்பாளனான பிள்ளையாரும் குழந்தை வேலனும் விவகாரமற்ற சாந்த மூர்த்திகள் அல்லர். மூத்தவனுடைய முறம் போன்ற காதைக் கிள்ளுவதற்குக் கள்ளத்தனனமாக மெதுவாக முருகன் அருகில் வரக்கூடும். அதனைத் தனது மதிநுட்பத்தால் குறிப்பறியும் கணபதியோ இளையவன் தலையில் ஓங்கிக் குட்டி விடுவான். சிறார் சண்டைமூண்டு விடும். ஆக சிவனாருடையது சாந்தக்களை தட்டும் குடும்பம் அன்று. இதனைக் கற்பனையில் காணும் சிவப்பிரகாச அடிகள் ஒரு பாடலில் தன் கற்பனையை விரிக்கின்றார்.
அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான்
’ஐயஎன்ன செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என்சென்னியில்
விளங்குகண் எண்ணினன்’ என,
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ‘நீ அப்படி
விகடம் என்செய் தாய்’ என
‘மருவும்என் கைந்நீள முழம் அளந் தான்’ என்ன,
மயிலவன் நகைத்து நிற்க,
மலையரையன் உதவவரும் உமையளை நோக்கிநின்
மைந்த ரைப்பா ராய்’ என
கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
கருப்பெறாது ஈண்ட கன்னி
கணபதியை அருகழைத்து, அகமகிழ்வு கொண்டனள்
களிப்பு டன்உமை காக்கவே[1]
என்ற பாடலில், எந்த வேளையில் வேண்டுமானாலும் விவகாரம் வந்துவிடும் என்பது தெளிவு.
வாழ்க்கை என்பதே விவகாரம் மலிந்த ஒன்று. தொல்லைகள் பல அதில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆயினும் அதைப் பற்றி அப்பெருமான் அல்லற்படுவதில்லை. மனை வாழ்க்கையை மாற்றியமைக்கவேண்டும் என்ற ஏக்கமும் அவருக்கு இல்லை. உள்ள ஏற்பாடே உயர்ந்தது என்ற சித்தாந்தம் அப்பிரானுக்கு நெடுநாள் ஆய்வின் பலனாய்த் தோன்றியது போலும்.
கயிலயங்கிரியில் மட்டுந்தான் இந்நிலை என்று கருதவேண்டா. காணுமிடமெங்கும் இயற்கையில் இதே காட்சிதான் தென்படுகின்றது. உலக வாழ்க்கையில் முரண்பாடுகளுக்கு முடிவு இல்லை. இன்பத்தை நாடுபவனைத் துன்பம் துரத்துகிறது. நட்பை நாடுகிறவனுக்குப் பகை வந்து சேர்கின்றது. அமைதி தேடுபவனுக்கு அலைபாயும் நிலைகுலைவு நேரிடுகின்றது. இந்த மாறுபாடுகளுக்கு இடையில் வாழ்க்கை உறுதிப்பாடடைய வேண்டும். உறுதிப்பாடே இல்வாழ்க்கையின் நோக்கம். யாரிடத்து உறுதிப்பாடு உண்டோ அவர் தக்கார். யாரிடத்து அஃது இல்லையோ அவர் தகவிலர். இயற்கையின் அமைப்பும் அதில் மனிதன் கடைப்பிடிக்கும் இல்லறம் என்னும் நல்லறமும் சேர்ந்து அளிக்கின்றன. பார்வதி சமேதராகிய பரமசிவனது விநோதனமான குடும்பத்தினின்று நாம் பெறும் பாடம் இதுவே. இத்துடன் இது நிற்க.
இன்னொரு விதமாக நோக்குவோம். சைவம் இறைவனைப் ‘பதி‘ என்று பேசும். பதிக்குச் சிறப்பியல்பு, பொது இயல்பு என்ற இரண்டு இயல்புகள் உண்டு. இயல்பு-இலக்கணம். சிறப்பியல்பைச் சொரூப (தன் இயல்பு) இலக்கணம் என்றும், பொது இயல்பைத் தடத்த இலக்கணம் என்றும் வழங்குவர் சித்தாந்திகள். தடத்தம்-அயலிலுள்ள பொருட்கண் இருப்பது. பிறிதொரு பொருளின் சார்பினால் மாறுபடாத தன்மையுடைய பதியிடம் பிறிதொன்றை நோக்காது தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகளே பதியின் சொரூப இலக்கணம் ஆகும். பதி உலகத்தை நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகள் தடத்த இலக்கணம் ஆகும். உயிர்களும் ‘உலகம்’ என்பதனுள் அடங்கும்.
(அ) பதியின் சொரூப இலக்கணம்: இது குணம் குறிகளைக் கடந்த நிலை. பதி ஒன்றே; அஃதாவது அஃது ஏகமாய் இருக்கும் எல்லாவற்றிற்கும் மேலானது; அது காணப்படும் உருவம் அற்றது; காலம் இடம் இவற்றால் அளவுபடுத்தப் பெறாதது; குணங்களும் இல்லை; அடையாளங்களும் இல்லை; மலமற்றது; என்றும் அழியாதிருப்பது; ஆன்மாக்களுக்கு அறிவாய் நிற்பது; சலிப்பற்றது; அளவுபடாததால் போக்குவராகிய அசைவு இல்லாதது. காட்சிக்கும் கருத்திற்கும் அப்பாற்பட்டது. இந்நிலையை,
குணம்இ லான்குணம் குறிஇலான்
குறைவிலான் கொடிதாம்
புலம்இ லான்தனக் கென்னஓர்
பற்றிலான் பொருந்தும்
இலம்இ லான்மைந்தர் மனைவிஇல்
லான்னவன்? அவன்சஞ்
சலம்இ லான், முத்தி தரும்பர
சிவன் எனத் தகுமே [2]
என்ற தாயுமான அடிகளின் திருப்பாடல் விளக்குவதைக் காணலாம்.
(ஆ) பதியின் தடத்த இலக்கணம்: இது குறிகுணங்களோடு கூடிய நிலை. தன்னையே நோக்கி நிற்கும் ‘பரசிவம்’ அந்நிலையினின்றும் உலகத்தை நோக்குங்கால் தனது சிறப்பியல்புகளில் ஒன்றான பெருங்கருணை காரணமாக உயிர்களின் பொருட்டுத் தானே தனது விருப்பத்தால் தனது ஆற்றலை (சக்தியை)க் கொண்டு பல்வேறு நிலைகளையுடையதாக இருக்கும். இந்நிலைகளே பதியின் தடத்த இலக்கணமாகும்.
இதனால் சொரூப நிலையில் பதி ‘சிவம்‘ என்றும், தடத்த நிலையில் ‘சக்தி‘ என்றும் பேசப்படும். சொரூபநிலையில் சக்தி செயற்படாது அடங்கி இருக்குங்கால் பதி ‘சிவம்‘ என ஒன்றேயாக இருக்கும். உலகில் சிலர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் களைத்துப் போய் படுக்கும் போது ‘சிவனே என்று கிடக்கின்றேன்’ என்று சொல்லுவதில் இக்கருத்து அடங்கியிருத்தல் காணப்படுவதை அறியலாம். சக்தி செயற்படும் நிலையில், சிவம் அதனோடு அச்செயலையெல்லாம் உடன் இயைந்து இயற்றி நிற்றலால் ‘சிவமும் சக்தியும்‘ அம்மை அப்பனாய்- மாதொருபாகனாய்- தையல் பாகனாய்- இரண்டாய்த் தோற்றம் அளிக்கும்.
தடத்த நிலையில் பதி சக்தியினால் பலநிலைகளையுடையது. இந்த நிலையில் அதற்கு உருவம் உண்டு; தொழில் உண்டு; அவற்றிற்கேற்ற பலப்பல பெயர்களும் உண்டு. ஆயினும், இவையனைத்தும் இறைவனின் அருள் காரணமாக உண்மையால் கொண்டனவேயன்றி வெறும் கற்பனையல்ல என்பது ஈண்டு அறியப்பெறும். சொரூப இலக்கணம் எப்படி உண்மையோ, அப்படியே தடத்த இலக்கணமும் உண்மையாகும்.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’
பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
குறிப்பு : 1. சிவப்பிரகாசர்-தனிப்பாடல்
2.தாயுமான அடிகள்
Comments
Post a Comment