சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3: முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்
சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்
– ஓர் ஆய்வு 3/3
[அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்குஅஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலிம.தி.தா.இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல்ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலிம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார்தமிழ்ப் பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்றகட்டுரை. 3 பிரிவாகப் பகுக்கப்பெற்று வெளியிடப் பெறுகிறது.]
பழந்தமிழின் புதல்விகளாகப் பிற திராவிட மொழிகளைக் கருதும் பேராசிரியர், அக்கருத்தினை வலியுறுத்த அறிஞர்களின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி விளக்கியுள்ளார். தமிழிலிருந்து பிறந்த மலையாளம் வேறுபட்டு நிற்பதற்குரிய,
1 . சேரநாடு பெரும்பாலும் மலைத் தொடரால் தடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியுடன் மிகுதியான தொடர்பு கொள்ளாதிருந்தமை.
- 12ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும், 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும், சேர மரபுடன் மண உறவு நிறுத்தியமை.
- வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ உயர்வு கற்பிக்கப்பட்டமையால் வரம் பிறந்து வடசொற்களைச் கலந்து கொண்டமை.
- மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை
போன்ற காரணங்கள் ஆய்வு நோக்கில் தெளிவுப்படுத்தப் பட்டுள்ளன.
தமிழ்ச் சொற்கள் கன்னடம், தெலுங்கு, துளு, குடகு, துதம், கோதம், கோண்டு, கூ, இராச்மகால், ஓரியன் போன்ற மொழிகளில் மருவியும் திரிந்தும் சில இடங்களில் மாற்றம் இன்றியும் வருவது சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் மொத்தம் இரண்டாயிரத்து முன்னூற்று எழுபத்தொரு (2371) பாடல்கள் உள்ளன. இவற்றுள் ஆரியமொழிச் சொற்களோ கருத்துகளோ பயின்றிடாமல் எழுநூற்றுத் தொண்ணூற்று ஆறு பாடல்கள், இருநூற்று எழுபத்தாறு புலவர்களால் பாடப் பெற்றுள்ளன. ஒன்பது புலவர்களின் இயற்பெயர்கள் மறைந்தாலும் அவர்கள் பாடியுள்ள பாடல்களுள் பயின்றுள்ள தொடர்களே செம்புலபெயல்நீரார், தேய்ப்புரி பழங்கயிற்றினார் , அணிலாடு முன்றிலர், கல்பொரு சிறுநுரையார், குப்பைக்கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார், நெடு வெண்ணிலவினார், மீனெறி தூண்டிலார், விட்ட குதிரையார் எனப் பெயர்களாக அமைந்துள்ளன எனத் தொகுத்து வழங்கியுள்ளார். பேராசிரியரின் சிறந்த மொழி நடைக்கும் எளிய சொல் தேர்வுக்கும், ஒருவரே பல பாடல்களை இயற்றி இவ்வாறு பெயரிட்டுள்ளனர் என்போர் கூற்றுக்கு மறுப்பாக,
“இனிய பாடல்களை இயற்றியோர் தம் இயற்பெயரை மறைத்துக்கூறவேண்டிய இன்றியமையாமை எற்றுக்கு? கண்கவர் வனப்பும் கலைபயில்அறிவும் உடைய மக்களைப் பெற்றுள்ளோர், அம்மக்களின் பெற்றோர் தாமே எனக் கூறிக் கொள்ள நாணுவரா? ஒருகாலும் நாணார். அங்ஙனமே உளங்கவர் இனிய பாடல்களை இயற்றியோரும் அவற்றை இயற்றியோர் தாமே எனக் கூறிக்கொள்வதில் பின்னிடார்,” என விடை பகர்வன போன்ற வரிகள் சான்றாக அமைகின்றன.
பழந்தமிழ் நிலை பற்றிக் கூறவந்த பேராசிரியர், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்யும் நெடுங்கணக்கில் இருந்துள்ளன என்றும் மொழிவழக்கில் காணப்படும் ஒலி மாற்றங்களை நுட்பமாக அறிந்த தொல்காப்பியர் குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற மூன்றையும் சார்பு ஒலிகளாகக் கருதி அவற்றையும் தமிழ் நெடுங்கணக்கில் சேர்த்துள்ளனர் என்று கருத வேண்யுள்ளது என விளக்கும் பேராசிரியர்,
எழுத்தெனப்படுவ
அகரம் முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப
எனத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழங்கி வந்த நிலையைக் குறிக்க ‘என்ப’ என்ற சொல்லைப் பயன்படுத் தினார் என்றும்,
அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன’
என்ற கருத்து தொல்காப்பியரின் கூற்றாக இருப்பதால் ‘ என்ப ‘ ‘ என்மனார் ’ போன்ற சொற்களைப் பயன்படுத்தவில்லை எனத் தெளிவுபடுத்தி, மொழியாட்சியில் இருந்த ஒலிகளை அறிந்து சார்பு ஒலிகள் எனப்பெயர் கொடுத்து நெடுங்கணக்கில் சேர்த்த பெருமை தொல்காப்பியரையே சாரும்என விளக்கம் கூறும் பேராசிரியரின் கூற்று கல்வியாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதாகும்.
நம்முடைய பழந்தமிழ், திருவள்ளுவர் காலம் வரையில் பெரிய மாற்றங்களை அடையாமல் இருந்துள்ளமையைக் காணமுடிகிறது. அப் பழந்தமிழ்தான் இன்றும் அன்றிருந்தது போல ‘ என்றும் உள தென்தமிழாய் ’’ இருக்கின்றமையைப் பேராசிரியர் சுட்டிக் காட்டியிருக்கும் விதம் அவர் தமிழ் இலக்கியங்களை கசடறக் கற்றிருப்பது நன்கு புலனாகிறது. சொல் ஆராய்ச்சியில் பேராசிரியர் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர் என்பது தெளிவு.
‘தோகை’ எனும் சொல் ‘தொகை’ என்பதிலிருந்து தோன்றியது. தொகுத்தல் தொகையாகும்.பகுதியுடன்“ஐ” விகுதி சேர்ந்து பெயராவது தமிழில் சொல் தோன்றும் முறையாகும். இங்கு தொகு + ஐ = தொகை என்றாகியுள்ளது. மயிலிற்கு வாலின் பகுதியில் தொகுத்து வீழ்வதால் மயிலிறகின் தொகுப்பு தொகை ஆகிப் பின்னர் தோகை ஆகியது. ஆகுபெயரால் அத்தோகை உடைய மயிலுக்குப் பெயராகி உள்ளது எனத் ‘தோகை’ என்ற சொல்லின் வரலாறு கற்போர் நெஞ்சம் கவரும் வண்ணம் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ்ச் சொல் அமைப்பில் தமிழ்மொழியில் உள்ள வேர்ச் சொற்கள் வினையிலும் பெயரிலும் பயின்று வரும் போது ஏற்படும் மாற்றங்கள் தெளிவுபட விளக்கப்படுகிறது. பழந்தமிழும், தமிழரும்பற்றிக் கூறும்போது பழந்தமிழர்களைப்பற்றிய வரலாறு அவர்களின் இலக்கியம், மொழி ஆகியவற்றின் துணைகொண்டு விளக்கப்படுகிறது.
தொடித்தலை விழுத்தண்டினாரின், “இனி நினைந்து இரக்கமாகின்றது “ என்ற புறப்பாடலில் உள்ள தொடித்தலை விழுத்தண்டுபற்றிக் கூறும் பேராசிரியரின், “ நடப்பதற்குத் துணைபுரியும் ஊன்றுகோலை அழகுபடப் புனையும் கலை ஆர்வம் பெற்ற தமிழர் நாகரிகத்தில் உயர்ந்த வராகத்தான் இருந்திருப்பர் என்பதில் ஐயமில்லை “ என்ற விளக்கம் புதுவகையான சிந்தனையை வழங்குகின்றது. தமிழின் மறுமலர்ச்சி பற்றிக் கூற விழையும் போது திருக்குறளை நாள் தோறும்பயில வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு குறள் வீதம் கற்று அதனை உள்ளத்தில் கொண்டு ஒழுகினாலே தமிழும் மலர்ச்சி பெறும், வாழ்வு மலரச்சி பெறும் எனத்தமிழை வளர்ப்து நம் கையில்தான் உள்ளது என்கிறார்.
போராசிரியர் அவர்கள் இலக்கியத்திலும் மொழியிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்ததால் இலக்கிய வரலாற்றையும் ஆய்வுக் கண்கொண்டு அலசுகின்றார். புதியமுறையில் புத்தம் புதுக் கருத்துகளை எடுத்துரைப்பதில் வல்லவராகத் திகழும் பேராசிரியர் சங்கப் புலவர்களின் படைப்புகளையும் இலக்கண அறிஞர்களின் நூல்களையும் தமிழ்மொழி பற்றிய மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுளையும் நுணிகிக் கற்றதன் விளைவால் முகிழ்த்த நூல்தான் ‘பழந்தமிழ்’ . தமிழ் மீதும் தமிழ் மொழியின் வளர்ச்சி மீதும் தமிழர்களின் மீதும் தணியாத பற்றுக்கொண்டு வாழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள். உலக அரங்கிலே உயர்தனிச் செம்மொழி பீடுநடை போட வேண்டும் என்ற அவரது கனவு விரைவில் நனவாகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!
Comments
Post a Comment