Skip to main content

தந்தை பெரியார் சிந்தனைகள் 5 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

அகரமுதல


(இ) தடத்தநிலையில் சிவற்றைக் காட்டுதல் பொருத்தமாகும். சொரூப நிலையில் பதி ‘பரசிவம் என நிற்குங்கால் அதன் சக்தி ‘பராசக்தி என வழங்கப்பெறும். அஃது உயிர்களின் அறிவை நோக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியேயாகும் என்று கருதுவதில் தவறில்லை. மேலும்,
சித்தத்தி லேநின்று சேர்வ துணரும் 
⁠சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்; 
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் 
⁠எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே. 1
என்ற தாழிசையிலும் இந்த நிலையினைக் காணலாம்.
பதி உலகத்தை நோக்குங்கால் மேற்குறிப்பிட்ட பராசக்தியின் ஒரு சிறு கூறு உலகத்தைத் தொழிபட முற்படும். அதனை ‘ஆதி சக்தி என வழங்குவர் 2  இது, சிவம் தோன்றாது உலகமே தோன்றுமாறு பிறப்பு இறப்புகளில் செலுத்தி நிற்றலால் ‘திரோதான சக்தி(திரோதானம்-மறைப்பது) என்ற திருப்பெயரையும் பெறுகின்றனது. இந்தச் சக்தியையே பாரதியார்,
பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை; 
⁠பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை; 
கரிய மேகத் திரள்எனச் செல்லுவை; 
⁠காலு மின்னென வந்துயிர் கொல்லுவை; 
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை; 
⁠சூழும் வெள்ள மெனஉயிர் மாற்றுவை; 
விரியும் நீள்கடல் என்ன நிறைந்தனை; 
⁠வெல்க காளி யெனதம்மை வெல்கவே. 3
என்ற பாடலை அடுத்து வரும் பாடல்களெல்லாம் இந்தச் சக்தியையே குறித்தனவாகும் என்று கருதலாம்.
மேற்கூறியவற்றால் சொரூப நிலையில் இறைவனை தனக்கென்று ஓர் உருவும், தொழிலும், பெயரும் இல்லாதவனாயினும், தடத்த நிலையில் ஆருயிர்களின் பொருட்டுப் பலப்பல உருவமும் தொழிலும் பெயரும் உடையவனாகின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதனை அநுபூதி நிலையில் தெளிந்த மணிவாசகப்பெருமான்,
ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க் காயிரம் 
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ? 4 
என்று அருளிச் செய்துள்ளதை ஈண்டு நினைத்தல் தகும். இவை தடத்தநிலையேயன்றி கற்பனையாகாமையை அறிந்து தெளியலாம்.
(இறைவனின் திருமேனிபற்றி: இறைவனின் திருமேனிபற்றி மேலும் சில கருத்துகளைத் தெரிவிப்பேன். இறைவனுடைய உருவத்திருமேனி ‘போகவடிவம்,யோகவடிவம்வேகவடிவம் என்று மூவகைப்படும். போகவடிவம் உலக இன்பத்தைத் தருதற்பொருட்டு மணக்கோலம் கொள்ளுதல் போன்றவை. யோகவடிவம் ஞானத்தைத் தருதற்பொருட்டுக் குருமூர்த்தியாய் எழுந்தருளியிருத்தல் போன்றவை. வேகவடிவம் உலகத்தார்க்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கப் போர்க்கோலம் கொள்ளுதல் போன்றவையாகும். இறைவன் போகவடிவம் கொண்டாலல்லது உயிர்கட்குப் போகம் அமையாது; யோகவடிவம் கொண்டாலல்லது உயிர்கட்கு ஞானம் உதியாது; வேகவடிவம் கொண்டாலல்லது உலகிற்கு கல்லாலின் மரத்தின்கீழ் யோக்கியாய்– தட்சிணாமூர்த்தியாய்- எழுந்தருளியிருந்த காலத்தில் உயிர்கட்குப் போகம் முதலியவை அமையாதிருந்தமையைப் புராணங்கள் விரித்துப் பேசும். காமனை எரித்து உருவிலாளனாய்ச் செய்தது போன்ற கதை இதில் அடங்கும். இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்ட அருமைப்பாட்டினை மணிவாசகப் பெருமானும், இறைவன் குருவாய் வந்தமையைத் தாயுமான அடிகளும் தத்தம் பாடல்களில் குறிப்பிடுவர்.
(நவந்தருபேதம்: இறைவனது திருமேனிகள் ஒன்பது வகையாகவும் பேசப்பெறும். அவை: ‘சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுவரன், உருத்திரன் மால் அயன் என்பவை. இவையே ‘நவந்தரு பேதம். ஆகவே ஒருவனாகிய இறைவனே உலகத்தைச் செயற்படுத்த வேண்டி நவந்தரு பேதமாய் நிற்பன் என்பது அறியப்படும்.
இக்கூறியவற்றுள் முதலில் உள்ள ‘சிவன், சக்தி, நாதம், விந்து’ என்னும் நான்கும் அருவத் திருமேனிகள். இறுதியில் உள்ள ‘மகேசுவரன், உருத்திரன், மால், அயன்’ என்னும் நான்கும் உருவத்திருமேனிகள். இடையிலுள்ள ‘சதாசிவன்’ மட்டிலும் அருவுருவத் திருமேனி. உருவம் கண்ணுக்குப் புலனாவது; அதாவது நம்மனோர் கண்ணுக்குப் புலனாகாவிடினும் தவத்தோர் கண்ணுக்குப் புலனாவது. அருவம், அங்ஙனம் புலனாகாதது; எனினும் வரம்புபட்டு நிற்பது. அருவுருவம் கண்ணுக்குப் புலனாயினும் ஒளிப்பிழம்பாய் நிற்பதன்றிக் கை, கால் முதலியன இல்லாதது. இலிங்கவடிவமே அறிவுருவத் திருமேனி என்பது ஈண்டு அறியப்பெறும்.
சிவக்குமாரர்கள்: ஒருவர் கணபதி, மற்றொருவர் முருகன். இவர்கள் தோற்றத்தைப்பற்றியும் உருவங்களைப் பற்றியும் சமய இலக்கியங்கள் சாற்றுகின்றன.
(கணபதி: இந்தியாவில் தோன்றியுள்ள சமயங்கள் அனைத்துக்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் கணபதி. இத்தெய்வத்தின் துணைக்கொண்டு தத்தம் தெய்வத்தை மக்கள் வணங்குகின்றனர். பெளத்த, திருமால் ஆலயங்களிலும் கணபதிக்கு இடம் உள்ளது. கெளமார சமயத்திலும் கணபதி வழிபாடே முன்னிற்கின்றது.
அரக்கர்களும் அசுரர்களும் செய்து வரும் அக்கிரமங்களைப் போக்க வழி காணுமாறு தேவர்கள் பரமசிவனை வேண்டினர். அப்பெருமான் அம்பிகையின் உதவியால் சிவசக்தியின் அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான். மனித உடல்- யானைத்தலை- இதற்கு வரலாறுகள் பல உண்டு. இவற்றில் அருவருக்கத் தக்க பல செய்திகளைத் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் காட்டிப் பரிகசிக்கின்றார்கள்.
இந்த உருவத்தில் அடங்கியுள்ள தத்துவமே மிக முக்கியமென்று கருதுகின்றனர் பக்தர்கள். தத்துவத்தை உருவகப்படுத்தியதில் அமைந்தது கணபதியின் வடிவம். ‘ஓம் என்னும் எழுத்து பலமொழிகளில் பல பாங்கில் எழுதப்பெற்றுள்ளது. அத்தனை எழுத்துகளுக்கும் பொது இயல்பு ஒன்று உண்டு. யானையில் காது, தலை துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து ஓம் என்பதன் பொது இயல்பு ஆகின்றது. யானை முகத்தையுடைய கணபதி ஓங்கார மூர்த்தியாகத் திகழ்கின்றான். அவனுடைய தலையும் துதிக்கையும் அக்கோட்பாட்டை விளக்குகின்றன.
பிறகு அவனுடைய உடல் முழுவதும் ‘துப்புஆர் திருமேனி என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. தத்துவத்தை எடுத்து இயம்புங்கால் பிரபஞ்சம் முழுதும் கணபதியின் உடல் ஆகின்றது. அவனிடத்து வலிவும், உறுதியும், தூய்மையும், அறிவும் பொலிவதைக் காணலாம். ‘துப்பு என்னும் சொல்லில் இத்தனைக் கருத்துகளும் அடங்கியுள்ளன. ஞானமே வடிவெடுத்தவன் கணபதி. இயற்கை என்னும் உடலில் ஒழுங்குப்பாடும் நல்லறிவும் திகழ்வதே இதற்குச் சான்று ஆகும். நமக்குப் புலனாகும் பருத்த உடல்களில் யானையின் உடல் முதன்மை பெறுகின்றது. சிவசக்தியின் புறத்தோற்றமாய் இருப்பது இயற்கை. இஃது அகண்டாகாரமாய் விரிந்துள்ளது. இதனுள் இயங்கும் இறைவனைச் சுட்டிக்காட்டுவதற்கு யானைத் தலையையுடைய பருத்த திருமேனி பொருத்த உருவகமாகின்றது. கணபதிக்கு ‘விநாயகன் என்ற திருநாமமும் உண்டு. இச்சொல் நல்லாரை அறநெறியில் நடத்துபவன் என்பதாகின்றது. வி=அற்ற; நாயகன்=தலைவன். தனக்கு வேறு ஒரு தலைவனும் இல்லாத தனிப்பெரும் பொருள் என்னும் அது பொருள்படுகின்றது.
ஏகதந்தன், மூசிகவாகனன் கணபதியின் வெவ்வேறு வடிவங்கள். இவற்றிற்கெல்லாம் சிறப்புப்பொருள்கள் உண்டு. விரிவஞ்சி அவை ஈண்டு எடுத்துக் காட்டப்பெறவில்லை.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
தமிழ்ச்செம்மல் கலைமாமணி’ 
பேராசிரியர் முனைவர் சுப்பு(ரெட்டியார்)
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்
சென்னைப் பல்கலைக் கழகம்
குறிப்புகள்

  1. தாயுமானவர் பாடல் வையமுழுதும்-5
  2.  மேல் மருவத்திதூர் ‘ஆதிபராசக்தி’ திருக்கோயில் இந்தக் கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பெற்றதாகக் கருதலாம்.
  3. திருவாசகம்-தெள்ளேணம்-1
  4. வித்தியேசுவரனில்-உருத்தின், மால், அயன் என மூன்றும் அடங்கும்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்