இனமானப் பேராசிரியர் வாழியவே!
அகரமுதல
இனமானப் பேராசிரியர் வாழியவே!
பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர்
அண்ணா வழியில் அயரா உழைப்பினர்
கலைஞர் போற்றிய புலமைச் சிறப்பினர்
திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி
அராவிடம் அனைய ஆரியம் கடிவோர்
உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று
மலையினும் திண்ணிய நிலையினர்
துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர்
வாய்மை வகுத்த வள்ளுவம் போற்றித்
தூய்மை துணிவு நேர்மை துலங்கித்
தமிழினம் தழைத்திடத் தளரா(து) உழைத்திடும்
பேராசிரியப் பெருந்தகை வாழ்க!
உறவெலாம் சிறக்க கிளைஞர் தழைக்க
குடிவழி ஓங்குக உயர்வுடன் பொலிக
நலமிகு வாழ்வும் நனிபொருள் வளமும்
கனவிலும் கருதாது கடமை ஆற்றிடும்
இனமானப் பேராசிரியர் இனிதே
ஊழி பல்லூழி ஒப்பிலா நலனுடன்
வாழிய வாழிய வண்டமிழ் போலவே!
-மறைமலை இலக்குவனார்
விடுதலை 19.12.2018(பேரா.க.அன்பழகன் பிறந்த நாள்)
Comments
Post a Comment