அகநானூற்றில் ஊர்கள் : 5/7 – தி. இராதா
அகரமுதல
அகநானூற்றில் ஊர்கள் : 5/7
கானல்அம்பெருந்துறை
தித்தன் வெளியன் என்ற அரசன் ஆண்டது இவ்வூராகும். இஃது அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு உரியது. பிண்டன் நன்னனை வென்று வாகை சூடிய இடமாக திகழ்வதனை,
“……..தித்தன் வெளியன்
இரங்கு நீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்துறை” (அகநானூறு152, 210, 280, 300)
என்ற அடிகள் மூலம் அறியலாகிறது.
குடந்தை
வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழ மன்னரின் குடந்தை என்பதை,
“………… வென்வேற்
கொந்தச் சோழர் குடந்தை வைத்த” (அகநானூறு 60)
என்ற அகநானூற்றுப் பாடல் உணர்த்துகின்றது.
குழுமூர்
குழுமூர் என்பது பல்லான் குன்றம் என்னும் மலையினால் படுகின்ற நிழலில் வந்து தங்கும் நல்ல பசுக்களையுடைய பரப்பினைக் கொண்ட ஊர் என்பதை,
“நல்ஆள் பரப்பின் குழுமூர் ஆங்கன்” (அகநானூறு 168)
என்ற அடி குறிப்பிட்டுள்ளது.
கூடல் (மதுரை)
பகைவர்களுடைய அரண்கள் பலவற்றை அழித்தவன்; வாடாத வேப்பமாலையை அணிந்தவன்; பாண்டிய மன்னனின் தலைநகரம். பல கடை வீதிகளை கொண்ட மதுரை நகரம் என்பதனை,
“வாடா வேம்பின் வழுதி கூடல்” (அகநானூறு 93)
என்ற பாடல் வரி உணர்த்துகிறது.
கொற்கை
பாண்டியர் அறநெறி வழுவாது காவல் செய்கின்ற கொற்கை. வெள்ளைத் தந்தங்கள் கொண்ட யானைப் படை கொண்ட வீரர்கள் கொண்ட ஊர் என்பதனை,
“…………வெண்கோட்டு யானை
……………………………..
கொற்கை அம்பெரும் துறைமுகத்தின் அன்ன” (அகநானூறு 27)
என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
“ஆடு துவன்று விழவின், நாடு ஆர்த்தன்றே
பறங்கிய மலி புகழ்க் கூடல்” என்று மதுரைக் காஞ்சியும்,
“நான்மாடக் கூடல் நகர்”
என்று பரிபாடலும் கூடல் நகரைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.
கோடி(கோடிக்கரை)
வெற்றி தரும் வேலினையுடைய பாண்டிய மன்னருடைய மிகவும் பழமை வாய்ந்த திருவணைகரையே கோடிக்கரை எனும் ஊராகும்.
“வெல் வேற் கவுரியர் தொல் முது கோடி”
என்ற அகநானூறு 70ஆம் பாடல் விளக்குகின்றது.
சாய்க்கானம்
குளிர்ச்சி பொருந்திய சாய்க்கானம் நெடிய கதிர்களையுடைய நெல்வயல்களைக் கொண்டது. இதனை,
“நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானத்து” (அகநானூறு 220)
என்ற பாடல் விளக்குகிறது.
சிறுகுடி
காவேரி கரையில் உள்ள ஒரு சிற்றூர். இஃது அருமன் வாணன் பண்ணன் ஆகியோர்களின் ஊராகத் திகழ்கின்றது. இதன்
“பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலை” (அகநானூறு 54)
“காய்நெல் படப்பை வாணன் சிறுகுடித்” (அகநானூறு 204)
“வாணன் சிறுகுடி பாடாஅது” (அகநானூறு 117)
“வாணன் சிறுகுடி வணங்குகதிபட நெல்லி” (அகநானூறு 269)
என்பதால் புலப்படுகிறது. இதனால் கடற்கரை சோலை சூழ்ந்த வளைந்த நெற்கதிர்களைக் கொண்ட நீர்வளம் மிக்க வயல்களைக் கொண்டு அமைந்திருப்பது வெளிப்படுகிறது.
சீத்தலை
அகநானூற்றில் சீத்தலைச் சாத்தனார் படிய பாடல்களாக (அகநானூறு 53,134) சீத்தலை என்ற ஊர் இடம் பெறுகின்றது.
செல்லி & செல்லூர்
நியமம் எனும் ஊரின் கிழக்கே அமைந்தது. மிகுதியான வளத்தினையும், புது வருவாயினையும் உடையது செல்லூர் என்பதனை,
“அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது” (அகநானூறு 90)
“மல்லம் யாணர்ச் செல்லிக் கோமான்” (அகநானூறு 216)
“கெடாஅத் தீயன் உருகெழு செல்லூர்” (அகநானூறு 220)
நியமம்
கோசர்களின் ஊர் அரிய வலிமை வாய்ந்த தெய்வங்களையுடைய ஊர் என்பதனை “கருங்கட் கோசர் நியமம் ஆயினும்” (அகநானூறு 90)
எனும் வரி விளக்குகிறது.
– தி. இராதா
முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),
அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி
(தொடரும்)
Comments
Post a Comment